சாண்ட்விச் தலைமுறை என்பது நடுத்தர வயதுடையவர்கள் தங்களின் வயதான பெற்றோரையும் மற்றும் தங்கள் சொந்த குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டிய நிலையே, ‘சாண்ட்விச் தலைமுறை’ எனப்படுகிறது. இந்த சாண்ட்விச் தலைமுறையினர் ஒரே நேரத்தில் தங்கள் வயதான பெற்றோர்களையும் அதேசமயம் தங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க, வளர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள். வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
முந்தைய நூற்றாண்டில் 20 வயதில் திருமணம் ஆகி 21 வயதில் குழந்தையை பெற்று வளர்க்கும்போது அவர்களின் பெற்றோர்களுக்கு 40 வயது அல்லது 45 வயதுதான் இருக்கும். அதனால் அந்த இளைய தலைமுறை தங்கள் பெற்றோருக்கு எந்த சிறப்பு கவனிப்பையும் வழங்கத் தேவையில்லை. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் 30 வயதை நெருங்கும்போதுதான் திருமணமே நடைபெறுகிறது. அவர்கள் 35 வயதில் குழந்தை பெறும்போது அவர்களின் பெற்றோர்களுக்கு 60, 65 வயது இருக்கும். எனவே அவர்கள் தங்கள் குழந்தைகளையும், வயதான பெற்றோர்களையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
சில சமயம் இதிலும் விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. வயதானாலும் அந்தப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளவேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் இந்த சாண்ட்விச் நபர்கள் ஒரே நேரத்தில் தங்கள் பெற்றோர்களையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது, பெரியவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி, குழந்தைகளுக்கான படிப்பு, வளர்ப்பதில் பொறுப்பு என மிகப்பெரிய பொறுப்பில் தள்ளப்படுகிறார்கள்.
‘சாண்ட்விச் தலைமுறை’ என்ற சொல் 1981ல் டோரதி மில்லர் மற்றும் எலைன் ப்ராடி ஆகியோரால் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சொல் முப்பது மற்றும் நாற்பதுகளில் உள்ள இளம் பெண்களைக் குறிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் நீண்ட காலம் வாழ்வதாலும், குழந்தைகளை வளர்க்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாலும் தொடர்ந்து வயதான பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் கவனிப்பு தேவைப்படுவதாலும் இந்த, ‘சாண்ட்விச் தலைமுறை’களுக்கு பொறுப்புகள் கூடுகிறது. இந்த சாண்ட்விச் தலைமுறையில் உள்ளவர்கள் தங்கள் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமாக நிறைய நேரத்தை செலவிடுவதுடன் அவர்களின் பராமரிப்புக்காக பணத்தையும் செலவிட வேண்டிய நிலையில் உள்ளார்கள்.
பூமராங் தலைமுறை: பிரபலமான விளையாட்டுப் பொருளான இது பலருக்கும் தெரிந்திருக்கும். வளைந்த இதை லாகவமாக சுழற்றும்போது பறந்து சென்று மீண்டும் எறியப்பட்ட திசை நோக்கியே திரும்பி வரும். கோவிட்டுக்குப் பிறகு உலகில் அதிகம் பேசப்படும் வார்த்தை, ‘பூமராங் தலைமுறை’ என்பதுதான்.
கொரோனா கட்டுப்பாடுகளின்போது தங்கள் பிழைப்புக்காக வெளியூரில் வசித்தவர்கள் மறுபடியும் தங்கள் வீட்டிற்கு திரும்பி வந்தார்கள். ஆனால், கட்டுப்பாடுகள் தளர்ந்த பிறகும் இவர்கள் திரும்பிப் போகவில்லை. இப்படி சொந்த ஊருக்கே திரும்ப வந்து பெற்றோருடன் தங்கி விட்டவர்களைதான் ‘பூமராங் தலைமுறை’ என்கிறார்கள்.
சுதந்திரமாக வாழ்வதாக நினைத்து வெளியூர் சென்றவர்கள் கோவிட்டுக்குப் பிறகு திரும்பிச் செல்லாததற்கு காரணம் இங்குள்ள சொகுசான வாழ்க்கைதான். அதுவும் குறிப்பாக, திருமணம் ஆனவர்கள் இதனால் நிறைய பலனடைந்தார்கள். அதாவது பெற்றோருடன் வாழும்போது செலவு குறைந்து பணம் மிச்சமாவதுடன், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பொறுப்பான வீட்டு நபர்கள் இருப்பதும், வசதி வாய்ப்புகளை கூட்டிக்கொள்ள முடிவதையும் உணர்ந்தார்கள். பொறுப்புகள் கம்மியாவதுடன், வசதிகளும் கூடுவதால் மறுபடியும் அவர்கள் வெளியே சென்று வாழ விரும்பவில்லை.
இதைத்தான் அந்தக் காலத்தில் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று சொல்லி வைத்தார்கள் போலும்!