சின்ன சைஸ் பூரிக்குள் வேக வைத்த உருளைக் கிழங்கு, கொண்டைக் கடலைகளை மலைபோல் நிரப்பி புளித் தண்ணீர், மேலும் சில ஸ்பைஸஸ் சேர்த்துப் பரிமாறுவது பானி பூரி. சமீப கால ட்ரெண்டிங், பெங்களூருவிலுள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் கோல்ட் அண்ட் சில்வர் (Gold and Silver) பானி பூரி என்ற பெயரில் இதைத் தயாரித்து வித்தியாசமான முறையில் விநியோகம் செய்கின்றனர். இந்த புதுவித கோல்ட் அண்ட் சில்வர் பானி பூரி நெட்டிசன்களிடையே மிகவும் பிரபலமான பேசுபொருளாகி உள்ளது.
வழக்கமான சின்ன சைஸ் பூரிகளின் மீது, உண்ணக் கூடிய கோல்ட் மற்றும் சில்வர் ஃபாயில் (Foil)களை ஒட்டி அதன் மீது தேனைத் தடவுகிறார் செஃப். பின் அதன் உள்ளே ட்ரை ஃபுரூட்களை இட்டு நிரப்புகிறார். வழக்கமான பானி பூரிக்குள் ஊற்றப்படும் புளிப்பு இனிப்பு சுவை கொண்ட நீருக்குப் பதில், இந்த கோல்ட் அண்ட் சில்வர் பானி பூரி மீது, வட இந்தியாவில் பிரபலமான தண்டை (Thandai) என்ற பானத்தை ஊற்றி, கோல்டன் கப்பில் அடுக்கி கோல்டன் ட்ரேயில் வைத்து உண்ணத் தருகிறார்.
அதை வாங்கி உண்ணும் பயனாளர்கள், ‘ஆஹா... ஓஹோ…’ என்று புகழ்வதும், ‘ஹெவன்லி’, ‘ராயல்’ என்று சிலாகிப்பதும் வழக்கமாகியிருக்கிறது. சிலர் இதை, ‘இது பூரி அல்ல, ஒரு வகை இனிப்பு. இதற்கு வேறு ஒரு பெயரிட வேண்டும்’ எனவும் பேசிக் கொள்கின்றனர்.
இந்த பூரியில் ஊற்றித் தரப்படும் ‘தண்டை’ என்ற பானம் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். ஊற வைத்த பாதாம், மெலன் விதை, கசகசா, ரோஸ் இதழ்கள், மிளகு, பெருஞ்சீரகம், ஏலக்காய், சர்க்கரை, குங்குமப் பூ, தண்ணீர், ஆல்மண்ட் மில்க் ஆகியவை சேர்த்து அரைக்கப்பட்ட ஒரு வகை சத்து நிறைந்த பானம் இது. இதை ஊற்றும்போது கோல்டன் பூரி ஹெவன்லி சுவை கொண்டதாகத்தானே இருக்க முடியும்.
வாசகர்களே, நீங்களும் பெங்களூரு செல்லும்போது இந்த கோல்ட் அண்ட் சில்வர் பானி பூரியை கண்டிப்பாக சுவைத்து மகிழுங்கள்!