மூட்டுக்களில் வலியை உண்டாக்கும் ஆர்த்ரைட்டிஸ் (Arthritis) எனப்படும் கீல்வாத நோயை வராமல் தடுக்க நாம் உண்ணும் உணவில் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அதிக சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், உணவு கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் பாதுகாக்க உபயோகிக்கப்படும் கெமிக்கல்கள் போன்றவை சேர்த்து தயாரிக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நலம் தரும். வீக்கங்கள் உண்டாகாமல் தடுக்கவும் உதவும்.
இனிப்பூட்டிய சோடா போன்ற பானங்களை அருந்துதல் உடலில் வீக்கங்கள் உண்டாவதற்கும் உடல் எடை அதிகரிக்கவும் வழி வகுக்கும். இதனால் மூட்டுகளுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகும்.
ஒயிட் பிரட், பேஸ்ட்ரீஸ் (Pastries) மற்றும் சில குறிப்பிட்ட வகை செரியல்கள் போன்றவை உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். அதன் மூலம் வீக்கங்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகமாகும்.
பொரித்த உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் அடங்கியிருக்கும். இவற்றை உண்ணும்போது உடல் முழுவதும் வீக்கங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
ரெட் மீட் (Meat) உண்பதும் வீக்கங்கள் தோன்றக் காரணமாகும். எனவே ரெட் மீட் உண்பதைத் தவிர்த்து லீன் கட் மீட் எடுத்துக்கொள்ளலாம் அல்லது குறைந்த அளவில் ரெட் மீட் உண்ணலாம்.
ஏற்கெனவே ஆர்த்ரைட்டிஸ் நோய் உள்ளவர்கள் பால் பொருட்களை உண்ணும்போது அவை நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும்.
ஆர்த்ரைட்டிஸ் நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆல்கஹால் அருந்தினால், ஆல்கஹாலானது மருந்துகளின் வேலைகளில் தலையிட்டு எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணும். அதாவது வீக்கங்களை அதிகரிக்கச் செய்யும்.
சோடியம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும் சிலருக்கு உடலில் ஆங்காங்கே நீர் தேங்கி வீக்கம் உண்டுபண்ணச் செய்யும். அப்படிப்பட்ட உணவுகளை உண்பதைத் தவிர்த்து விடலாம்.
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி, தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து உண்ண வேண்டியவற்றை கவனமாகத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு எலும்புகளின் ஆரோக்கியம் காப்போம்.