மாலை நேரம் வந்தாலே கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது. இப்படி கொசுக்களுக்கு அதிகம் பயப்படக் காரணம், அதனால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களே ஆகும்.
கொசுக்களை விரட்ட நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் அதிகம் செயற்கை தன்மை கொண்டதாகவே உள்ளன. அதில் முக்கியமான ஒன்று கொசுவர்த்தி சுருள். இது கொசுக்களை விரட்ட வீட்டில் பயன்படுத்தும் ஒரு சாதாரண பொருள்தான் எனினும் அதனைத் தொடர்ந்து உபயோகிப்பதால் உடல் உபாதைகள் கண்டிப்பாக ஏற்படக்கூடும்.
அதேபோல், கொசுவர்த்தியின் புகை பலருக்கும் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் தலைவலி வரும். இன்னும் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதுபோன்ற பொருட்களை தரையிலே வைப்பதும் நல்லதல்ல. இதேபோல, கொசுவர்த்தி லிக்விட் வீட்டில் உபயோகிப்பதால் அதில் இருந்து வரும் ரசாயனப் புகை கொசுக்களைக் கொல்கிறது. இருப்பினும், அதை அதிகம் சுவாசிப்பதால் மனிதர்களுக்கும் உடலில் பாதிப்புகள் ஏற்படலாம்.
கொசுக்களை விரட்ட உடலில் தடவிக்கொள்ளும் கிரீம்கள் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. இதுவும் உடலில் அலர்ஜி ஏற்படுத்தக் கூடியதே. அதனால் இதுபோன்ற ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையாக இருக்கும் பொருட்களை வைத்தே எப்படி கொசுக்களை விரட்டி ஆரோக்கியமாக வாழலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
* எலுமிச்சையும் யூக்கலிப்டஸ் எண்ணையும் இயற்கையான கொசு விரட்டியாகும். இதை 1940ல் இருந்தே பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
* வீட்டில் சாதாரணமாகப் பயன்படுத்தும் கற்பூரம் கூட இயற்கை கொசு விரட்டியே! மேலும், லாவண்டர் எண்ணெய், இலவங்கப்பட்டை எண்ணெய், சோயாபீன் எண்ணெய் என எல்லாமே இயற்கையான கொசு விரட்டிகளாகும்.
* சாமந்திப்பூ இயற்கையான கொசு விரட்டி. இந்தப் பூவிலிருந்து வரும் தனித்தன்மை கொண்ட வாசனை சில பூச்சிகளுக்கு பிடிப்பதில்லை. அதனால் இதை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது.
* சிட்ரோநெல்லாப்புல், இது எலுமிச்சை போன்று வாசம் தரக்கூடியது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணையை விளக்குகளில் ஊற்றி எரித்தால் கொசுக்கள் வராது அல்லது இந்த எண்ணையை உடலிலும் தேய்த்து கொண்டும் கொசுக்களை விரட்டலாம்.
* லாவண்டர் எண்ணையை தண்ணீரில் கலந்து லோஷனாகப் பயன்படுத்தலாம்.
* வேப்பமரம், கிராம்புச்செடி, துளசி ஆகியவற்றையும் வீட்டில் வளர்த்து கொசுக்களை விரட்டலாம்.
கொசுக்கள் கடிக்காமல் தடுக்க பச்சை, வெள்ளை, நீலம் போன்ற உடைகளை அணிவது நல்லது.
இனி, கொசுக்களை விரட்ட எளிய வழி ஒன்றைக் காண்போம். இதற்குத் தேவையானவை: வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், பொடியாக்கிய கற்பூரம், சிறிது மஞ்சள் தூள், துளசி இலை, கிராம்பு இரண்டு, அகல் விளக்கு, பஞ்சு திரி.
முதலில் ஒரு பெரிய அகல் விளக்கை எடுத்துக்கொள்ளவும். அதில் வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெயை சமமாக ஊற்றவும். அதில் சிறிதளவு பொடி கற்பூரம், மஞ்சள் தூள், இரண்டு கிராம்பு, துளசி இலை சேர்த்து பஞ்சி திரியை எண்ணையில் நன்றாக நனைத்து பற்ற வைக்கவும். இந்த விளக்கில் இருந்து வரும் வாசனை சிறந்த இயற்கை கொசு விரட்டியாகப் பயன்படும். உடலுக்கும் ஆரோக்கியம்!