திடமான மனதுடையவர்கள் ஒருபோதும் செய்யாத ஏழு செயல்கள் தெரியுமா?
1. சுய இரக்கம்: திடமான மனதுடையவர்கள் ஒருபோதும் சில செயல்களை செய்ய மாட்டார்கள். அவற்றில் முக்கியமானது தன்னை நினைத்து வருந்துவது. தான் இப்படி இருக்கிறோமே என்று தற்போதைய நிலையை நினைத்து வருந்தி நேரத்தை வீணாக்க மாட்டார்கள். சுய பரிதாபத்தில் இறங்குவது முன்னேற்றத்தைத் தடுக்கும். எனவே, அதை தவிர்த்து விட்டு தீர்வுகளில் ஆற்றலை செலுத்துவார்கள்.
2. ஆற்றலை வீணாக்குவது: தங்களுடைய சக்தியையும் ஆற்றலையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவும், வீணாக்கவும் மாட்டார்கள். தங்களுடைய எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் செயல்களின் விளைவுகளை இவர்கள் தைரியமாக எதிர்கொள்கிறார்கள். தங்களுடைய பிரச்னைகளுக்கு மற்றவர்களை குறை கூறுவதைத் தவிர்ப்பார்கள். அதற்கு பதிலாகத்தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பார்கள்.
3. மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது: திட மனதுடையவர்கள் வாழ்வில் மாற்றங்கள் என்றுமே மாறாதது என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதை தவிர்க்க முடியாது என்று தெரியும். மாற்றத்தைத் தவிர்த்தால் வாழ்வில் முன்னேற முடியாது. தன்னுடைய வளர்ச்சியும் முன்னேற்றமும் தடுக்கப்படும் என்று தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.
4. தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை பற்றி கவலைப்படுவது: தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப் பற்றி நினைத்து சக்தியை வீணாக்க மாட்டார்கள். அதற்காக கவலைப்படவும் மாட்டார்கள்.
5. எப்போதும் பிறரை மகிழ்விக்க நினைப்பது: இது சாத்தியம் இல்லாத ஒன்று. ஒருவரை மகிழ்விக்க நினைத்தால் இன்னொருவரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். எனவே, தன் சொந்த தேவைகள் மற்றும் மதிப்பிற்கு முன்னுரிமை அளித்தால் போதும். பிறருடைய மனதை சந்தோஷப்படுத்த தேவையில்லை. அவர் எண்ணம் போல் நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவாகப் புரிந்து வைத்து, அதற்கேற்ப நடப்பார்கள்.
6. கடந்த காலத்தை நினைத்து வருந்துவது: கடந்த கால தவறுகளை நினைத்து வருந்துவதால் ஒரு பயனும் இல்லை. இது தற்போதைய செயல்களுக்கு முட்டுக்கட்டையாக அமையும். எனவே, நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்.
7. தோல்விக்கு அஞ்சி செய்யும் செயலைப் பாதியிலே விட்டு விடுவது: தாங்கள் எடுத்துக்கொண்ட காரியத்தில் தோல்விகள் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள். பாதியில் விட்டுவிட்டுச் செல்ல மாட்டார்கள். தோல்விகளை அனுபவங்களாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள்.