F.I.R. என்பதற்கு தமிழில், ‘முதல் தகவல் அறிக்கை’ என்று அர்த்தம். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154ன் துணைப்பிரிவு (1)ன் கீழ் கொடுக்கப்படும் ஒரு தகவல்தான் முதல் தகவல் அறிக்கை (F.I.R.) என்று அழைக்கப்படுகிறது.
காவல் நிலையத்தில் பொறுப்பிலுள்ள ஒரு காவல் அதிகாரியிடம் பாதிக்கப்பட்டவரோ அல்லது அவரைச் சார்ந்தவரோ நேரில் சென்று நடந்த குற்றத்தை வாய்மொழியாகத் தெரிவிக்க வேண்டும். அதன்பேரில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியால், தகவல் கொடுப்பவரின் உத்தரவின்படி எழுத்து மூலம் FIR பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு போலீஸாரால் பதியப்படும் வழக்கு ஆவணம்தான் ‘முதல் தகவல் அறிக்கை’ ஆகும்.
எந்தெந்த குற்றங்களுக்கு F.I.R. பதிவு செய்ய வேண்டும்?: முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டுமென்றால் அது ஒருவரை கைது செய்வதற்குரிய குற்றமாக இருக்க வேண்டும். அதாவது. கொலை, ஆட்கடத்தல், வன்கொடுமை, மோசடி, வரதட்சணை, மரணம், கொள்ளை போன்ற குற்றச் செயல்களுக்கு F.I.R. பதிவு செய்யலாம்.
புகார் தெரிவிப்பவருக்கு F.I.R. நகல் அளிக்கப்பட வேண்டுமா?: ஒரு F.I.R. என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R. அந்த நோட்டிலேயே இருக்கும். அதை கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார்தாரர், நீதிமன்றம் போன்ற இன்ன பிற இடங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். புகார்தாரருக்கு F.I.R. நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்தான்.
ZERO F.I.R. என்றால் என்ன?: ஒரு காவல் நிலையம் மற்றொரு காவல் நிலைய அதிகாரத்தின் அடிப்படையில் நடந்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பான புகாரைப் பெற்றால், அதனை F.I.R. பதிவு செய்து, மேலும் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றும். இது ‘Zero F.I.R.’ என்று அழைக்கப்படுகிறது. Zero FIR கிடைத்த பிறகு, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் புதிய F.I.R/ பதிவு செய்து விசாரணையைத் தொடங்குகிறது.
F.I.R.ன் மூன்று முக்கியக் கூறுகள்:
* பெறப்பட்ட தகவலானது அறியக்கூடிய குற்றத்தின் கமிஷனுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
* அது எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ காவல் நிலைய அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டும்.
* அந்தத் தகவலானது எழுதப்பட்டு தகவல் கொடுத்தவரால் கையொப்பமிடப்பட வேண்டும், மேலும், அதன் முக்கிய குறிப்புகள் தினசரி நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும்.
F.I.R. பதிவின்போது தகவல் அளிப்பவர் அவசியம் அறியவேண்டிய விஷயம்: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்போது தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறுதல் அவசியமாகும். அவ்வாறு தகவல் கொடுப்பவர் கையொப்பமிட மறுத்தால், போலீசாரும் விசாரணை செய்ய மறுத்துவிடுவர். F.I.R. கொடுக்கும் நபர் எழுதப் படிக்க தெரியாதவராக இருக்கும் பட்சத்தில், அது எழுதப்பட்ட பின் அந்த நபருக்குப் படித்துக் காட்டப்பட வேண்டும். இந்தத் தகவல்களை காவல் துறையின் நாட்குறிப்பேட்டில் காவல் அதிகாரி பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
F.I.R. பதிவு செய்யப்பட்ட பிறகு என்ன நடக்கும்?: போலீசார் வழக்கை விசாரித்து, சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரிப்பார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டப்படி கைது செய்யலாம். பின்னர் புகார்தாரரின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இல்லையேல், எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.