‘அதிர்ஷ்டப் பெண் சிண்ட்ரோம்’ என்பது ஒரு மருத்துவச் சொல் அல்ல. உளவியலாளர் சூசன் ஆல்பர்ஸ் குறிப்பிடுவது போல, இது ஒரு நேர்மறையான மனநிலை மற்றும் உறுதிமொழியாகும். தங்களை உண்மையில் அதிர்ஷ்டசாலி என்று நம்பும் ஒருவருக்கு நல்ல விஷயங்கள் நடக்கின்றன. இது பெண்களுக்கானது மட்டுமல்ல, இந்த மனநிலையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த லக்கி கேர்ள் சிண்ட்ரோம் டிக் டாக்கில் மிகவும் பிரபலமாக இருந்தது.
அதிர்ஷ்டப் பெண் மனநிலையின் பத்து நன்மைகள்:
1. தமக்கு நிறைய அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நம்பும் மனநிலை, மக்களின் சுயமரியாதையை அதிகரிக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திடுகிறது.
2. தனக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்று ஒருவர் நம்பும்போது அவர் தனது இலக்கை நோக்கிச் செயல்பட தொடங்குவார். அதில் நல்ல நேர்மறையான விளைவுகள் கிடைக்கும் என்று நம்புவது, வாழ்க்கையில் அதிக வாய்ப்புகளைப் பெறவும் செயல்படவும் உதவுகிறது.
2. தான் அதிர்ஷ்டசாலி என்று ஒருவர் தமக்குத்தாமே சொல்லிக்கொள்ளும்போது அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த மூளை பல உதாரணங்களைத் தேடத் தொடங்குகிறது என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகிறாரகள். சில விஷயங்கள் எதிர்மறையாக நடந்தால் கூட அதை நேர்மறையாக மாற்றிக்கொள்ளும்.
3. சோம்பேறியாக இருக்கும் ஒருவர் கூட தனது வாழ்வில் நடக்கும் சிறிய நேர்மறையான விஷயங்களை அடையாளம் கண்டுகொள்ள இந்த அதிர்ஷ்டப் பெண் மனநிலை உதவுகிறது. அது அவரை செயல்படுத்தத் தூண்டுகிறது. நல்ல விஷயங்களைக் கொடுக்க இந்த பிரபஞ்சம் உதவுகிறது என்று அவரது மூளை மிகவும் ஆணித்தரமாக நம்ப ஆரம்பிக்கும்.
4. ஒருவர் தனது மனதில் தனக்கு வேண்டியவற்றை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தி பார்க்கும்போது அது அவரை வந்தே தீரும். ஆழ்மனதின் சக்தி அற்புதம் வாய்ந்தது என்கிறார்கள்.
5. எதிர்மறையாக எண்ணுவதற்கு பதிலாக நல்லதே நடக்கும் என்று நினைப்பது புத்திசாலித்தனமாகும். கண்களை மூடிக்கொண்டு, ‘நான் ஒரு அதிர்ஷ்டசாலியாக இருந்தால் என் வாழ்வு எப்படி இருக்கும்?’ என்று கற்பனை செய்வதன் மூலம் நிஜ வாழ்க்கையில் ஏற்படும் அதிர்ஷ்டமான சூழ்நிலைகளை ஒருவரால் அடையாளம் காண முடியும்.
6. கடினமான சூழ்நிலைகளில் கூட தனது மனதிற்கு நேர்மறையான உறுதிமொழிகளை அளிக்க முடியும். அதிர்ஷ்டசாலி என்று கற்பனை செய்வதன் மூலம் மூளையில் உள்ள நல்ல ரசாயனமான செரட்டோனின் போன்ற சில நேர்மறை நரம்பியல் ரசாயனங்களை தூண்டி விடுகிறது.
7. நம்மைச் சுற்றியுள்ள புதிய மனிதர்கள் மற்றும் சூழ்நிலைகள் இவை யாவும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும், அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று ஆழமாக நம்பும்போது அதற்கேற்றார்போல விஷயங்கள் நடக்கின்றன. சுற்றி இருப்பவர்களும் வேண்டிய உதவிகளை செய்கிறார்கள்.
8. அதிர்ஷ்ட மனநிலை தினசரி சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. அவற்றைப் பற்றிய அச்சங்கள் விலகி சமாளிக்க முடியும் என்கிற தைரியம் வருகிறது. இதனால் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கிறது. மேலும், இது தொடர்ந்த வெற்றிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் இட்டுச் செல்கிறது.
9. எப்போதும் நேர்மறையாக சிந்திப்பது நல்ல உடல், மன ஆரோக்கியத்தையும் தருகிறது. இரத்த அழுத்தம் குறைவதற்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி அமைவதற்கும் நாள்பட்ட நோய்களின் தீவிரத்தைக் குறைப்பதற்கும் வழி வகுக்கிறது.
10. நல்ல விஷயங்கள் தம்மை வந்தே தீரும் என தீவிரமாக நம்புவது பின்னடைவுகளிலிருந்து விரைவாக மீள உதவுகிறது. தோல்விகளை தற்காலிகமானதாகவும், துன்பங்களிலிருந்து விரைவில் மீண்டு வருவதற்கான வழிகளையும் ஏற்படுத்தித் தரும்.