ஆண்கள் திருமணத்திற்கு முன்பு வரை, நண்பர்களுடன் சேர்ந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். திருமணம் என்று ஒன்று நடந்த பின், சில பொறுப்புகளும் கூடவே அவர்களுக்குத் தொற்றிக் கொள்ளும். ஆகையால், திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போல் இப்போது இருக்க முடியாது. அவ்வகையில் திருமணமான ஆண்கள் தவிர்க்க வேண்டிய 6 பழக்கவழக்கங்களை இப்போது காண்போம்.
ஆணோ பெண்ணோ திருமணம் முடிந்த பிறகு, ஒரு புதிய மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் இணைவது சிலருக்கு கடினமாக இருக்கலாம். இருப்பினும் உங்கள் மனைவிக்கான அங்கீகாரத்தையும், மரியாதையையும் கொடுத்து முழு மனதாக ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். திருமணம் முடிந்தும் கூட பொறுப்பில்லாமல் இருப்பது ஆண்களுக்கு அழகல்ல.
1. பொறுப்பு:
தன்னுடைய கணவர் அனைத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பதுண்டு. ஆகையால் நீங்கள் பயன்படுத்திய பொருள்களை ஆங்காங்கே போடாமால், எடுத்த இடத்திலேயே வைத்து விடுங்கள். சிறுசிறு விஷயங்களுக்கு எல்லாம் மனைவியை அழைக்காமல், நீங்களே செய்து கொள்ளுங்கள். இந்தப் பொறுப்பான பழக்கம் மனைவிக்கு உங்கள் மீதான நன்மதிப்பை உயர்த்தும். அதோடு நிதிச் செலவுகளிலும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது உங்களின் எதிராகால வாழ்க்கைக்கு நல்லது.
2. நண்பர்களுடனான நேரத்தைக் குறைத்தல்:
ஆண்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பு நண்பர்களுடன் தான் அதிக நேரத்தை செலவிடுவார்கள். ஆனால் திருமணம் முடிந்த பிறகு, நண்பர்கள் உடனான நேரத்தைக் குறைத்துக் கொண்டு, மனைவியுடனும் அவ்வப்போது நேரத்தை செலவிடுங்கள். இப்படி செய்வதால் இருபக்கமும் உங்களால் சமாளிக்க முடியும்.
3. ஆன்லைன் விளையாட்டை நிறுத்துங்கள்:
ஒருவேளை நீங்கள் ஆன்லைன் மற்றும் வீடியோ கேம்களில் ஆர்வம் உள்ளவர் எனில், திருமணத்திற்குப் பிறகு விளையாட வேண்டாம். இது உங்கள் மனநலனை மட்டுமல்ல குடும்ப நலனையும் பாதிக்கக் கூடும். இவ்விளையாட்டுக்கு செலவழிக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி மனைவிக்காக ஒதுக்குங்கள்.
4. மனைவிக்கு உதவுங்கள்:
மனைவியை சமையல் செய்யும் வேலைக்காரியாக நினைக்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதையும் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். சமையலில் சிறுசிறு உதவிகளை மனைவிக்குச் செய்யும் போது, அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும், சமையல் நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்; மனைவி அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
5. சுத்தத்தில் கவனம் செலுத்துங்கள்:
திருமணத்திற்கு முன்பு குளித்தவுடன் டவலையும், அழுக்கு துணிகளையும் நினைத்த இடத்தில் வீசி விடும் ஆண்களும் இங்கு இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகாவது நீங்கள் இதனை நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும். அழுக்கு துணிகளை துணி துவைக்கும் கூடையில் போடுவதால், சுத்தத்தை விரும்பும் மனைவிக்கு உங்களை மிகவும் பிடித்து விடும்.
6. விருப்பமானதை பேசுங்கள், பாராட்டுங்கள்:
மனைவியுடன் பேசும் போது, அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைப் பற்றி அதிகமாக பேசுவது சிறந்தது. தேவையில்லாத தலைப்புகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தால், வீண் சண்டைகளைத் தடுத்து விடலாம். அதோபோல், மனைவி செய்யும் சிறுசிறு செயல்களையும் பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்துங்கள். இது மாதிரி கணவன் செய்தால், தனக்குள் இருக்கும் தன்னம்பிக்கை மனைவிக்கு அதிகரிக்கும்.