எதையும் சமாளிக்கும் திறன் படைத்தவர்களின் 7 பண்புகள் பற்றித் தெரியுமா?

Self Confidence
Self Confidence
Published on

ருசில மனிதர்கள் வாழ்க்கை எத்தனை அடி அடித்தாலும் தாங்கிக்கொண்டு சமாளித்து முன்னேறுவார்கள். அவர்களுக்கு ஏழு குறிப்பிட்ட குணாதிசயங்கள் இருக்கும். அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. துன்பத்தில் துவளாமை: வாழ்க்கையின் சவால்களை திறம்பட வழி நடத்தும் நபர்கள், துன்பம் நேரும்போது அதற்காக துயரப்படாமல் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இவர்கள் சிரமங்களைத் தடைகளாகக் கருதாமல், வளர்ச்சிக்கான படிக்கட்டுகள் என்பதை உணர்ந்தவர்கள். துன்பத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டு தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

2. சுய விழிப்புணர்வை வளர்ப்பது: எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் இவர்கள். தங்கள் பலம், பலவீனம், உணர்ச்சிகள், நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகள் பற்றி தெளிவான புரிதல் அவர்களுக்கு உள்ளது. இந்த சுயபுரிதல் அவர்களுக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது. சுய விழிப்புணர்வு உணர்ச்சித் தூண்டுதலை அடையாளம் கண்டுகொள்ள உதவுவதால் அவர்கள் மன அழுத்த சூழ்நிலைகளை திறம்பட நிர்வகிக்கிறார்கள்.

3. கவனத்துடன் வாழ்தல்: தினசரி வாழ்க்கையில் அலைச்சல், குழப்பம், கவனச்சிதறல் போன்றவை அதிகம் இருக்கும். ஆனால் அந்தந்த கணங்களில் வாழ்வதும் அவற்றில் கவனம் செலுத்துவதும் மேற்கண்ட குறைகளைக் களைய உதவும். இவற்றை நன்றாக உணர்ந்த மனிதர்கள் எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகில் தங்களை நன்றாக டியூன் செய்து கொண்டு அதற்கேற்பவாறு வாழ்கிறார்கள்.

4. பொறுப்பை ஏற்றுக்கொள்வது: இவர்கள் எந்தப் பொறுப்பையும் தட்டிக்கழிக்காமல் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்லும்போதுதான் மனம் எதிர்மறையாக சிந்திக்க ஆரம்பிக்கும். ஆனால், மன உறுதி படைத்தவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு செய்ய ஆரம்பிக்கும்போது எதையும் சாதிக்கிறார்கள்.

5. நெறிமுறைகள்: இந்த உலகில் பலரும் செல்வம் மற்றும் அந்தஸ்தைத் தேடுவதில் மூழ்குகிறார்கள். ஆனால், மன உறுதி படைத்தவர்கள் செல்வத்தை விட நெறிமுறையான வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். மனம் போன போக்கில் வாழ்க்கையை வாழாமல் நல்ல நெறிமுறைகளுக்கு உட்பட்டே அவர்கள் வாழ்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பருத்தியின் வரலாறு மற்றும் கலாசாரம் அறிவோம்!
Self Confidence

6. பன்முகத்தன்மை: தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் சுருங்கி விட்டது. அதனால் வெவ்வேறு கலாசாரங்கள். பின்னணிகள் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன உறுதி படைத்தவர்கள் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகின்றனர். அதாவது புதிய மனிதர்கள். அவர்களின் கலாசாரங்கள், சிந்தனைகள் போன்றவற்றை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் பாராட்டவும் செய்கிறார்கள். இதனால் தனி மனிதர்களின் கண்ணியத்தையும் மதிப்பையும் பாதுகாக்க முடிகிறது. இதற்கு மிகுந்த சகிப்புத்தன்மை தேவை. அது மன உறுதி கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

7. உண்மையான உறவுகளை வளர்ப்பது: வாழ்க்கையின் சவால்களைக் கையாள உண்மையான உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து திறம்பட செயல்படுகிறார்கள். இதற்கு நேர்மாறாக பல மனிதர்கள், பலர் கூடியுள்ள இடத்தில் கூட தங்களை தனிமையாக உணர்கிறார்கள். துண்டிக்கப்பட்டதாக நினைக்கிறார்கள். உண்மையான உறவுகளை வளர்ப்பது என்பது பரஸ்பரம் மரியாதை, பச்சாதாபம் மற்றும் புரிதல் இவற்றின் அடிப்படையில் அமைந்தவை.

இந்த ஏழு பண்புகளையும் கொண்ட மனிதர்கள் வாழ்க்கையில் எத்தனை துன்பங்களை சந்தித்தாலும் அவற்றை அமைதியாக ஏற்றுக்கொண்டு மன உறுதியுடன் வாழ்வார்கள் என்பது நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com