
தற்கால இளையோர் அறிவுரைகளையோ அல்லது பழைய நிகழ்வுகளை பற்றி பெரியவர்கள் பேசுவதையோ விரும்புவதில்லை. பூமர்கள் என்று அவர்களை கட்டம் கட்டி தூர நிறுத்திவிடுகிறார்கள். இளையோர் விரும்பாத பூமர்களின் 7 வாக்கியங்கள் எவை என்பது பற்றியும் ஏன் அவற்றை அவர்கள் விரும்புவதில்லை என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.
1. அந்த காலத்துல;
அந்த காலத்துல என சரியான வருடம், மாதம் போன்ற விவரங்களுடன்தான் பூமர்கள் பேச ஆரம்பிப்பார்கள். அந்த வாக்கியம் இளையவர்களான ஜென் Z க்கள் மற்றும் ஆல்ஃபாக்களுக்கு முற்றிலும் பிடிப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் அந்தக் காலத்தில் என்று ஆரம்பித்து ஒரு முழு நீள கதை சொல்ல ஆரம்பிப்பார்கள். மேலும் நிகழ்கால வாழ்க்கையை அது அர்த்தமற்றதாக்குகிறது என்று கருதுகிறார்கள். இது போன்ற சொற்பொழிவுகளை அவர்கள் விரும்புவதில்லை.
2. உழைப்பின் மதிப்பு தெரியாது;
உண்மையில் இந்த காலக் குழந்தைகளின் நேரத்தை படிப்புடன் சேர்த்து டியூஷன், கோச்சிங் மற்றும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிகள் என்று கிட்டத்தட்ட உறிஞ்சிவிடுகிறது. அவர்களிடம் உழைப்பின் மதிப்பு தெரியாது என்று சொல்லும்போது மனம் சோர்ந்து விடுகிறார்கள்.
3. உங்க வயசுல நான் எப்படி இருந்தேன் தெரியுமா?
‘உங்க வயசுல எல்லாம் நான் அப்படி இருந்தேன். எனக்கு சொந்த வீடு இருந்தது அல்லது திருமணம் ஆகிவிட்டது’. இந்த வாக்கியம் இளையோரை கட்டாயம் எரிச்சல்பட வைக்கும். ஏன் என்றால் தற்போது நகரப்புறங்களில் மூன்று படுக்கையறை வசதிகள் கொண்ட ஒரு வீட்டின் வாடகை பல மடங்கு உள்ளது. அந்தக் காலத்தில் இருந்ததுபோல வீட்டு வாடகை, பிற செலவுகள் போன்றவற்றுக்கு குறைந்த அளவு பணமே போதுமானதாக இருந்தது.
ஆனால் தற்போது எத்தனை சம்பாதித்தாலும் அதற்கு ஏற்ற செலவுகள் இருக்கிறது என்பது உண்மை. ஒருவர் பொருளாதார அளவுகோலை எட்டவில்லை என்று குற்றம் சாட்டுவது போல அமைந்துள்ள இந்த வாக்கியத்தை அவர்கள் விரும்புவதில்லை.
4. நான் ஏன் அப்படி சொல்றேன்னா...
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தங்களிடம் எந்த கேள்வியும் கேட்காமல், தான் என்ன நினைக்கிறோம் என்று சுயநலமாக, ஈகோ நிறைந்த இந்த வாக்கியம் அவர்களை எரிச்சல் படுத்துகிறது.
5. இதெல்லாம் அப்படித்தான்
ஏன் என்ற கேள்வி கேட்க இடம் இல்லாமல், அப்படித்தான் என்கிற அந்த ஒற்றை வார்த்தை இளையோரை கட்டாயம் எரிச்சல் அடையச் செய்யும். ஏனென்றால் தற்போதைய இளம் பருவத்தினர் ஒவ்வொன்றுக்கும் கேள்வி கேட்டுத் தான் நம்புவார்கள். இது அவர்களது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.
6. தொழில்நுட்பத்தின் உதவியால் எல்லா வேலையும் சுலபம்
ஸ்மார்ட் போன்கள், கணினிகள் போன்றவை இன்றைய வேலையை எளிதாக்குகின்றன. ஆனால் அதே சமயத்தில் அதற்காக இன்றைய தலைமுறையினர் யாரும் குறைவான வேலை செய்வதில்லை. அதிகரிக்கும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அவர்களது வேலைப்பளுவும் அதிகரித்துள்ளது என்பதே உண்மை.
7.பணம் மரத்தில் காய்ப்பதில்லை
இந்த வாக்கியம் கட்டாயம் ஜென் Z க்களை காயம் அடையசெய்யும். பணத்தை சம்பாதிப்பதற்காக எத்தனை கடினமாக உழைக்கிறார்கள். அது அத்தனை சுலபத்தில் கிடைப்பதில்லை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.