
தனிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தால் அது ஒருவரின் படைப்பாற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இருக்கும். பலரும் தனியாக இருக்கும் போது செல்போனில் தொடர்ச்சியாக ரீல்ஸ் அல்லது வீடியோக்கள் பார்ப்பது, ஃபோனில் அரட்டை அடிப்பது, வெகுநேரம் டிவி பார்ப்பது என நேரத்தை வீணடிக்கிறார்கள். தனியாக இருக்கும்போது நேரத்தை பயன்படுத்த உதவும் எட்டு உபயோகமான வழிமுறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. புத்தகம் படித்தல்:
தனிமையை போக்க மற்றும் அதை உபயோகமாக பயன்படுத்த உதவும் ஒரு அருமையான சாதனம் தான் புத்தகம். ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கும் போது மனப் பதற்றம் குறைந்து அமைதி பெறும். அறிவுத் தேடலுக்கு மட்டுமல்ல, நல்ல பொழுதுபோக்கு அம்சமாகவும் புத்தகம் விளங்குகிறது. கதைப் புத்தகங்களையும் வாசிக்கலாம். சம்பவங்களை வாசிக்கும் போது காட்சிகள் கண்முன்னே விரியும். அதனால் மனிதர்களின் கற்பனை சக்தி தூண்டப்படுகிறது.
2. படைப்பாற்றல்:
தனிமை படைப்பாற்றலுக்கு மிக சரியான நேரம் ஆகும். கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் தனிமையை சரியாக பயன்படுத்திக் கொண்டு அற்புதமான படைப்பாற்றலை வெளிப்படுத்துவார்கள்.
வரையும் கலையில் ஆர்வம் இருப்பவர்கள் தங்கள் உணர்ச்சிகளை காட்சி ரீதியாக வெளிப்படுத்தலாம் அல்லது வண்ணம் தீட்டலாம். கவிஞர்களும், எழுத்தாளர்களும், கவிதைகளையும் கதைகளையும் படைக்கலாம். ஒரு நாட்குறிப்பில் தங்களது எண்ணங்களை செயல்படுத்த எழுத்து வடிவத்தில் அவற்றை வெளிப்படுத்தலாம். கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் இருப்பவர்கள் அதில் ஈடுபடலாம். கவிதை, கதை, கட்டுரை, ஓவியம் அல்லது நல்ல கைவினைப் பொருள்கள் செய்து முடிக்கும் போது மனம் மகிழ்ச்சியடைவதுடன் நிறைவும் உண்டாகும்.
3. எண்ணங்களை வெளிப்படுத்துதல்:
தனிமையில் நேரத்தை செலவிடுவது ஒருவரின் சிந்தனை செயல்முறையை வளர்க்கவும் மேம்படுத்தவும் உதவுகிறது. ஒருவரின் சுய மதிப்பை அழிக்கும் எதிர்மறை உணர்வுகளை ஒதுக்கி விட்ட்டு, கவனச் சிதறல்கள் இல்லாமல் மனதை சுதந்திரமாக அலைய விட சிறிதளவு நேரம் ஒதுக்க வேண்டும்.
செல்போன், டிவி பார்க்காமல் வசதியான ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு எண்ணங்களை அதன் போக்கில் செல்ல அனுமதிக்க வேண்டும். அமைதியாக அவற்றை கவனிக்க வேண்டும். இது ஒரு மதிப்புமிக்க நுண்ணறிவுக்கு வழி வகுக்கும். எத்தனையோ சிக்கல்களுக்கு தீர்வுகளும் கிடைக்கலாம்.
4. இயற்கையுடன் இணைந்திருத்தல்:
இயற்கையில் நேரம் செலவிடுவது ஒரு இனிமையான அனுபவத்தை வழங்குகிறது. வீட்டுத் தோட்டத்திலோ அல்லது பூங்காவிலோ சிறிது நேரம் நடந்து செல்லலாம். இயற்கைக் காட்சிகள், பறவைகள் பலவித மரங்கள், இனிமையான வாசனைகள், ஒலிகளைக் கேட்கும் போது மனதிற்கு ஆழ்ந்த புத்துணர்ச்சியைத் தரும். இயற்கையில் நேரம் செலவிடும்போது மன அழுத்தம் மனச்சோர்வு போன்றவற்றை நீக்கும். இயற்கை ஒருவருடைய புலன்களை மென்மையான முறையில் தூண்டுகிறது.
5. செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவழித்தல்:
செல்லப்பிராணிகள், பறவைகள், வீட்டு தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன்கள் இவற்றுடன் நேரம் செலவழிக்கும் போது தனிமை உணர்வே தோன்றாது. மீன்கள் நீந்துவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அருமையான ஸ்ட்ரெஸ் ரிலீஃப் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். செல்லப்பிராணிகளான நாய் பூனை உடன் விளையாடும் போது மனம் சின்னக் குழந்தையை போல குதூகலிக்கும். புத்துணர்ச்சியளிக்கும். பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
6. வீட்டுத்தோட்டம்:
வீட்டில் தோட்டம் இருந்தால் செடி கொடிகளை பராமரிக்கலாம் அல்லது தொட்டிச் செடிகள் இருந்தாலும் அவற்றை முறையாக பராமரிப்பது, காய்ந்த இலைகளை நீக்குவது, நீரூற்றுவது, புதிய செடிகளை நடுவது என நேரம் செலவழிக்கலாம்.
7. நடனமாடுதல் / பாடுதல்:
ஏதாவது பாட்டை கேட்டுக் கொண்டே நடனம் ஆடலாம். பாடத் தெரிந்தவர்கள் பாட்டுப் பாடலாம். பாட்டுப் பாடுவதும் நடனமாடுவதும் ஒருவரை மிக உற்சாகத்துடன் வைக்கிறது.
8. புது டிஷ் செய்தல்:
சமையலில் ஆர்வம் இருப்பவர்கள் யூ டியூபில் பார்த்த புதிய டிஷ் ஒன்றை செய்யலாம். இதனால் தனிமை விரட்டி அடிக்கப்படுவதுடன் புதிதாக ஒரு டிஷ்ஷும் செய்து கொள்ள கற்றுக் கொள்ளலாம்.