ஹேப்பினஸ் (Happiness) என்பது இன்றைய காலக்கட்டத்தில் நம் அனைவருக்கும் மிகவும் தேவையான ஒன்று. தனிக்குடித்தனம் மற்றும் மொபைல் போன் உபயத்தால் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்த்து பேசிக்கொள்வதே அபூர்வமாகிவிட்ட நிலையில், சிரிக்கவும் சந்தோஷிக்கவும் எப்படி முடியும்? மேலும், நாம் பின்பற்றி வரும் பல வகையான பழக்க வழக்கங்களும் நம் சந்தோஷத்திற்கு தடைக்கற்களாய் நிற்பவைகளாகவே உள்ளன. அவ்வாறான 8 வகை பழக்கங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. மற்றவர்களோடு ஒப்பிடுதல்: டெக்னாலஜி வளர்ந்து விட்ட காரணத்தால் சோஷியல் மீடியாக்கள் வாயிலாக மற்றவர்களின் வளர்ச்சியையும் வாழ்வியல் முறைகளையும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அனைவரும் பார்த்து விட முடிகிறது. அதோடு நமது நிலையை ஒப்பீடு செய்து ஆற்றாமையால் புலம்புவது நம் சந்தோஷத்திற்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பாக அமையும். மனோதத்துவ நிபுணர்கள் இதை 'சோஷியல் கம்பேரிசன் தியரி' (Social Comparison Theory) என்கின்றனர்.
2. தன்னலம் காப்பதைத் தவிர்ப்பது: வேலை மற்றும் பொறுப்புகளிலேயே அதிக கவனம் செலுத்திவிட்டு தன் உடல் மற்றும் மனநிலைக்கு முக்கியத்துவம் தராமல் தவிர்ப்பதும் நமக்கு சந்தோஷம் தர உதவாது. அதாவது, நேரத்துக்கு சாப்பிடாமலும் உறங்காமலும் இருந்து பிறர் நலனுக்காக உழைப்பது இதில் அடங்கும். நாளடைவில் இது ஸ்ட்ரெஸ்ஸையும் உடல் நலக் கோளாறுகளையும் உண்டுபண்ணும். தனக்காகவும் சிறிது நேரம் செலவிடுதல் தன்னலம் ஆகாது. நம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்திற்காக இதை நாம் செய்தே ஆக வேண்டும்.
3. உள் மனப்பகை வளர்த்தல்: இறந்த காலத்தில் பிறர் நமக்கு செய்த நியாயமற்ற செயல்களை நினைத்து மனதிற்குள் வன்மம் வளர்ப்பது எந்தக் காலத்திலும் நமக்கு நன்மை தரப்போவதில்லை. மாறாக, அது நமது இதய இரத்த நாளங்களைப் பாதித்து, மன அழுத்தத்தையும் வருத்தங்களையுமே கொடுக்கும். எனவே, நம்மைப் பாதித்த அம்மாதிரியான, வருத்தம் தரும் செயல்களை மறந்தும், அதை செய்தவர்களை மன்னித்தும் விடுவது நமக்கு ஆரோக்கியமும் சந்தோஷமும் தரும்.
4. எதைப் பற்றியும் அதிகமாக சிந்தித்தல்: பல நேரங்களில் நாம் படுக்கைக்குச் சென்ற பின் நம் மனம் அன்று நடந்த நிகழ்வுகளையோ அல்லது மறுநாள் செய்யவிருக்கும் செயல்களைப் பற்றியோ அதிகம் சிந்தித்துக் கொண்டும் அதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கும். இவை இரண்டுமே தேவையற்றவை. அதது நடக்கிறபடி நடக்கட்டும் என்றிருப்பதே மேல்.
5. உள் மன வலிகளை மறைத்து வாழ்வது: பலர் தம் உள் மனது வேதனைகளை மறைத்து, வெளியில் தைரியமாக வாழ்வதுபோல் காட்டிக் கொள்வர். இது ஆழமான காயத்தின் மீது சிறிய பிளாஸ்டர் போடுவதற்கு சமம். காயமும் ஆறாது. மேலும் சிக்கல் உண்டாகும். உள் மன வேதனைகளை உள்ளுக்குள்ளே புதைத்து வைக்காமல் பிறரிடம் கூறி தீர்வு காண்பது நன்மை தரும்.
6. முழு நிறைவோடு செயலாற்ற நினைப்பது: சிலர் எந்த ஒரு செயலையும் முழுமையுற்ற நிலையில் (Perfection) செய்து முடிக்க விரும்புவர். இது அநேக நபரால் முடியாத ஒன்று. எனவே, முழுமையை நோக்கி நேரத்தை விரயமாக்காமல் குறைபாடுகளை நேசிக்கவும், அதிலிருந்து படிப்பினை பெறவும் கற்றுக்கொண்டால் வாழ்வு வளமாகவும் சந்தோஷமாகவும் மாறும்.
7. மாற்றங்களை ஏற்க மறுப்பது: சிலர் செக்கு மாடு போல ஒரே சூழலில் சுழன்றுகொண்டு அந்த வசதியும் சுகமும் போதுமென்று நினைத்து மாற்றங்களை விலக்கி வைத்துக் கொண்டிருப்பர். ஆனால், இது ஒருவரின் வளர்ச்சியையும் சந்தோஷம் அனுபவிக்கக் கிடைக்கும் சந்தர்ப்பத்தையும் தடுக்கவே உதவும். எனவே, சூழ்நிலைக் கைதியாய் வாழ்ந்து கொண்டிராமல் தேடிவரும் மாற்றங்களை சவாலாக ஏற்று திறமையுடன் கையாள்வது உச்சபட்ச சந்தோஷம் பெற ஒரு வாய்ப்பாகவும் அமையலாம்.
8. இறந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் அல்லது எதிர்காலத்தில் நடப்பவை பற்றியே நினைத்துக் கொண்டு வாழ்தல்: இவை இரண்டுமே, தற்போது நம் கட்டுப்பாட்டில் உள்ள நிகழ்கால செயல்களுக்கு எந்த விதத்திலும் உதவக் கூடியவை அல்ல. இதை நன்கு புரிந்துகொண்டு இப்போது நம் கண் முன் இருக்கும் இந்த நிமிஷத்தை எவ்வாறு சந்தோஷமாக்கலாம் என உணர்ந்து அனுபவித்து செயலாற்ற முன்வந்தால் எப்பவும் சந்தோஷம் (Happiness) நம் வசமே!
நமது சந்தோஷத்திற்கு குறுக்கே நிற்கும் தடைகளைத் தகர்த்தெறியவும் நல்ல பழக்கங்களைப் பின்பற்றவும் கற்றுக்கொண்டால் வாழ்வில் சந்தோஷத்திற்கு குறை வராது.