வேலைக்குச் செல்லும் அவசரத்திலோ அல்லது உடல் எடையை குறைக்கும் நோக்கத்திலோ அல்லது வேறு பல காரணங்களுக்காகவோ காலை உணவை தவிர்ப்பதை சிலர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். காலை உணவை உண்பதால் கிடைக்கும் 5 நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. நாள் முழுவதும் தேவையான ஆற்றல்: நாள் முழுவதும் வேலை செய்வதற்கான முழு ஆற்றல் காலை உணவால் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. அன்றாட வேலைகளில் சோர்வை சந்திக்காமல் இருக்கவும் நமது அன்றாட சிறப்பான செயல்பாட்டை செய்யவும் காலை உணவை தவிர்க்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம் ஆகும்.
2. இரத்த சர்க்கரை அளவு சீராகும்: காலை உணவை தவிர்ப்பதால் சர்க்கரை அளவு திடீரென குறைய வாய்ப்பிருப்பதாலும், மேலும் மயக்கம், பலவீனம், கவனச் சிதறல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானதாக இருப்பதாலும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதற்கு காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும்.
3. மனநிலை மாற்றங்கள்: காலை உணவு உண்ணாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், மூளைக்கும் தேவையான அளவு ஆற்றல் சரியாகக் கிடைக்காமல் போய் விடும். இதன் காரணமாக, மனநிலையில் மாற்றங்கள், எரிச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும் மூளை சுறுசுறுப்பாக செயல்படவும் காலை உணவை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
4. எடை மேலாண்மை: குறைவாக சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற தவறான எண்ணத்தில் காலை உணவை தவிர்ப்பதால் மதிய உணவு நேரத்தில் அதிகப்படியான பசியை உணர்வதால் தன்னை அறியாமல் அதிக, கலோரிகளை உட்கொள்ளும் நிலைக்கு ஆளாவதால் உடல் எடை குறைவதற்கு பதிலாக உடல் பருமன் அதிகரிக்கும் என்பதால் எடை மேலாண்மையை சரியாக வைக்க காலை உணவை தவிர்க்கக் கூடாது.
5. வளர்சிதை மாற்றம்: காலை உணவைத் தவிர்ப்பது வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கி உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஏனெனில், நாள் முழுவதும் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை இதனால் குறைகிறது. ஆகையால், காலை உணவை உட்கொள்வதால் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவும் என்பதால் காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.
ஒரு நாளுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்காமல் சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்த வேண்டும்.