நீங்கள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் நீங்கள் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கப்போவதை உங்களின் சில குணநலன்களே எடுத்துக் காட்டிவிடும். அப்படிக் காட்டக்கூடிய 8 அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. உங்களுக்குள் மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளதா? உடற்கூறு சம்பந்தப்பட்ட படக்காட்சிகள், புத்தகங்கள், உடலியல் மற்றும் நோய் சார்ந்த கட்டுரைகள் ஆகியவற்றை நோக்கியே உங்கள் கவனம் ஈரக்கப் படுகிறதா?
2. பிறருக்கு உதவுவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ளதா? அது உங்கள் நண்பருக்குத் தேவைப்படும் நேரத்தில் உதவிக்கரம் நீட்டுவதாகவோ அல்லது உங்கள் சமூகத்தில் உள்ளவர்களுக்கு நீங்களாகவே முன்வந்து வேண்டிய உதவிகளை செய்வதாகவும் இருக்கலாம். கஷ்டத்தில் உள்ளவர்கள் மீது அதீத இரக்கமும் பச்சாதாபமும் காட்டக்கூடியவரா நீங்கள்?
3. மருத்துவப் படிப்பிற்கு அடித்தளம் அமைப்பது விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்கள் ஆகும். இந்த இரு பாடங்களும் உங்களை அறிவுபூர்வமாக ஊக்குவித்து அவற்றைக் கற்றுத் தெளியும் ஆர்வத்தை உங்களுக்குள் உண்டுபண்ணுகின்றனவா?
4. டாக்டர்களுக்குத் தங்களுடன் பணியாற்றும் பிற டாக்டர்கள், நர்ஸ், நோயாளிகள், மற்ற சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்கள் போன்ற பல வகையான மனிதர்களுடனும் உரையாட வேண்டிய அவசியம் உண்டு. பல வகையான மனிதர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா?
5. மருத்துவத் துறையில் நுழைய ஒரு டாக்டர் நோயை சரியான விதத்தில் கண்டுபிடிக்கவும் சரியான சிகிச்சை அளிக்கவும் துல்லியமான திறமை கொண்டிருப்பது அவசியம். புதிரை விடுவிக்கத் தீர்வு கண்டுபிடிப்பது போல, சவால்களை சந்தித்து நோயாளிகளை காப்பாற்றுவதில் உங்களுக்கு மனநிறைவு உண்டாகுமா?
6. டாக்டர் கனவு, பல எதிர்பார்ப்புகளையும் நீண்ட காலத்தையும் கடந்த பின்பே நிறைவேறக் கூடிய ஒன்று. தற்போதைய பரபரப்பான, அடிக்கடி மாறக்கூடிய சூழ்நிலையில் சவால்களை சந்திக்கவும் சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளவும் தேவையான நிலையான மனோதிடம் உங்களிடம் உள்ளதா?
7. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் நேர்மறையான அணுகுமுறை இவை அனைத்தும் தேவைப்படும் ஒரு மகத்தான துறை மருத்துவத் துறை. கடினமான சூழ்நிலைகளிலும் நெறிமுறை தவறாமல் இவை அனைத்தையும் தரக்கூடிய சிறந்த மனம் உங்களுக்கு உள்ளதா?
8. ஆரோக்கியம், சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சாரப் பணிகளில் பங்கேற்று பணியாற்றியது போன்ற அனுபவம் உடையவரா நீங்கள்? இந்த அனுபவங்கள் மருத்துவத் துறையின் உள்ளும் புறமும் உள்ள உண்மை நிலையை எடுத்துரைக்கும் வாய்ப்பாக அமையும்.
மேலே கூறப்பட்ட விஷயங்களில் உங்களின் பதில் 'ஆம்' என்றால், எதிர்காலத்தில் நீங்கள் ஒரு டாக்டர் ஆவதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனலாம்.