கோபப்படுவதற்கான காரணங்களும், அதனை கட்டுப்படுத்த எளிய தீர்வுகளும்!
கோபம் இல்லாமல் இருப்பது மன அமைதிக்கான சிறந்த வழியாகும். பொதுவாக, ஆசைகளுக்கு இடையூறு ஏற்படுவதாலும், மற்றவர்களிடம் எதிர்பார்த்த எதுவும் நடைபெறாமல் போகும்பொழுதும் கோபம் உண்டாகிறது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். சிலர் எப்போதும் சிடுசிடுப்பாக கோபத்துடன் இருப்பதற்குக் காரணத்தை தெரிந்துகொண்டால் அதனைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அவர்களின் செயல்களை கூர்ந்து கவனித்தாலே இது புலப்பட்டு விடும்.
1. ஏமாற்றம்: சிலருக்கு அவர்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் இருப்பதும், லட்சியங்களை அடைய முடியாமல் இருப்பதும் ஏமாற்றத்தை உண்டுபண்ணும். அந்த ஏமாற்றத்தை சமாளிக்க தெரியாமல் கோபப்படுவதன் மூலம் வெளிப்படுத்துவார்கள். இதற்கு முதலில் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், அவர்களுடைய லட்சியம் என்ன என்பதைப் பற்றி மனதில் தீர ஆலோசித்து அதற்கான வழிகளைக் கண்டறிந்து எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முற்பட்டால் ஏமாற்றம் காணாமல் போய்விடும்.
2. விரக்தி: விரக்தி என்பது நம்பிக்கை இழந்த நிலையாகும். ஒரு பொருளின் மீது அல்லது அன்பு கொண்ட ஒருவர் மீது உள்ள நம்பிக்கை தளர்ந்து விடும்பொழுது விரக்தி ஏற்படும். இதனைப் போக்க தியானம் செய்வதும், நல்ல புத்தகங்களைத் தேடி படிப்பதும், நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதும் விரக்தி மனப்பான்மையே போக்க உதவும்.
3. விமர்சனம்: சிலருக்கு தன்னைப் பற்றி யாராவது எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டால் கோபம் வந்துவிடும். மற்றவர்கள் அவர்களை விமர்சிப்பதை விரும்ப மாட்டார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் தங்களை மற்றவர்கள் விமர்சிப்பதை சிறிதும் விரும்ப மாட்டார்கள். அப்படி விமர்சிப்பவர்களைப் பார்த்து ‘நீ என்ன ஒழுங்கா, உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?’ என்று கோபப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் அவர்களைப் பற்றி தேவையில்லாமல் விமர்சனம் செய்வதைத் தவிர்க்கலாம்.
4. எரிச்சல்படுவது: பொறுமை இல்லாமல் எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுவது, எரிந்து விழுவது என்று இருப்பவர்களைக் கையாள்வது கடினம். யாரோ செய்யும் சில செயல்களில் நமக்கு உடன்பாடு இல்லையென்றால் எரிச்சல் ஏற்படும். இதற்கு நிதானமாக சிந்திக்க வேண்டும். அவர்களின் செயல் ஏன் நமக்கு எரிச்சலைத் தருகிறது? நாம் எதிர்பார்த்தபடி அவர்கள் இருக்கவில்லை என்பதால் நமக்கு எரிச்சலும், கோபமும் வருகிறது. நாம் எதிர்பார்த்தபடி அவர்கள் ஏன் இருக்க வேண்டும்? அதற்கு அவசியம் ஏதுமில்லை என்பதைப் புரிந்துகொண்டால் எரிச்சல் வராது.
5. வேலை தொடர்பான மன அழுத்தம்: வேலையினால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக கோபம் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் எதிர்கொள்ளும் கிண்டல் கேலி, மேலதிகாரியின் அதிருப்தி போக்கு, அதிக வேலைப்பளு காரணமாக ஏற்படும். இதற்கு சோர்வை போக்க ஒரு குளியலும், நல்ல சாப்பாடு சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கமும் போட, மன அழுத்தம் குறைந்து விடும்.
6. பொருளாதார நெருக்கடி: எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக கோபம் உண்டாகலாம். தேவையான அளவு பணம் இல்லாமல் பற்றாக்குறை ஏற்படுவது, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்வது என்ற பதற்றமான சூழ்நிலை காரணமாகவும் கோபம் உண்டாகலாம். உபரி வருமானம் ஈட்டுவதற்கான வழியைத் தேடுவதும், சிக்கனத்தை கடைபிடிப்பதும் பலன் தரும்.
கோபத்தை கட்டுப்படுத்த அதனை ஆக்கப்பூர்வமான வழியில் கொண்டு செல்லலாம். மனதை திசை திருப்பும் வகையில் நமக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு வேலையில் (தோட்டக்கலை, ஓவியம், பாடுதல், நல்ல புத்தகங்களைத் தேடிப் படிப்பது) மனதை செலுத்தலாம்.