இனிய இல்லறம் என்பது கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, விட்டுக்கொடுத்து வாழ்வது ஆகும். தங்கள் கணவரிடம் மனைவிக்குப் பிடிக்காத 9 வகை குணாதிசயங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. நார்சிஸ மனப்பான்மை: நார்சிஸ மனப்பான்மை கொண்ட ஆண்கள், தன் காரியப் புலிகளாக, சுயநலவாதிகளாக, பிறர் மேல் அனுதாபம் இல்லாதவராக, தங்கள் காரியத்தில் மட்டும் குறியாக, தனக்கு வேண்டியதை மட்டும் சாதித்துக்கொள்ள விரும்பும் இயல்புடையவராக இருப்பார்கள். மனைவியின் விருப்பு வெறுப்புகள் பற்றி துளியும் கவலைப்படாதவர்கள். இந்த மாதிரி இயல்புடைய கணவனை, மனைவி விரும்புவதில்லை.
2. லட்சியமற்றவர்கள்: வாழ்வில் எந்த லட்சியமும், குறிக்கோளும் இல்லாத ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது. அவர்கள் வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் அடையவே முடியாது. மனம் போன போக்கில் வாழ்வை நடத்தும் குணமுடையவர்கள். இந்த மாதிரி ஆண்களை மகளிர் விரும்ப மாட்டார்கள்.
3. அம்மா பிள்ளை: ஒரேடியாக அம்மா பிள்ளையாக இருக்கும் ஆண்களையும் பெண்களுக்குப் பிடிக்காது. ஏனென்றால், தன் தாய் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மனைவி மீது காட்ட மாட்டார்கள். மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
4. அடக்குமுறை மனப்பான்மை: தன் மனைவி என்ன உடை அணிய வேண்டும், எங்கே போக வேண்டும்? யாருடன் பேச வேண்டும் என்று ஒவ்வொன்றுக்கும் கண்டிஷன் போடும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது. கிட்டத்தட்ட ஒரு அடிமையை போல நடத்துவார்கள். ஒரு சதவீதம் கூட சுதந்திரம் இல்லாத வாழ்வை பெண்கள் வெறுப்பார்கள்.
5. ஏமாற்றுப் பேர்வழிகள்: உண்மைத்தன்மையும், நம்பிக்கையுமே ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு அடித்தளம். பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது. சிறிய விஷயம் தொடங்கி பெரிய செயல்கள் வரை எல்லா விஷயத்திலும் ஏமாற்றுவார்கள்.
6. அதீத விளையாட்டுத்தனம்: சிறிதும் பொறுப்பின்றி ஒரு சிறு பிள்ளையைப் போல எப்போதும் வேடிக்கையும் விளையாட்டுமாய் சீரியஸ்னஸ் இல்லாமல் இருக்கும் ஆண்களையும் பெண்களுக்குப் பிடிக்காது. ஏனென்றால், இவர்கள் வாழ்வில் எந்தவிதமான பொறுப்புகளையும் சுமக்க மாட்டார்கள். வெறும் பொம்மைக் கணவனாகவே இருப்பார்கள். இந்த மாதிரி ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை.
7. தொல்லை கொடுக்கும் கணவன்: பெண்களுக்கு உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக, மன ரீதியாக, உளவியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காது. அவர்கள் நிம்மதியாக வாழவே முடியாது.
8. தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்கள்: மது, சீட்டாட்டம், போதைப்பொருள் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையான ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. ஏனென்றால், அவர்களுடன் வாழ்வது மிகுந்த மன உளைச்சலை தந்து, நிம்மதியைத் தொலைத்து விடும். ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வது சவாலாக இருக்கும். மகிழ்ச்சி துளி கூட இருக்காது.
9. கடந்த காலத்தில் மூழ்கி இருப்பவர்கள்: தனது கடந்த கால சோகங்களை அல்லது துயர்களை நினைத்து எப்போதும் புலம்பிக் கொண்டும் அதைப் பற்றி அதீதமாகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கணவன்மார்களை பெண்களுக்கு அறவே பிடிக்காது. ஏனென்றால், இந்த மாதிரி ஆண்கள் சுயமரியாதை அற்றவர்களாகவும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாகவும், நிகழ்காலத்தில் வாழ விரும்பாமல், பொறுப்புகளை தட்டிக்கழிக்கும் குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
மேற்கண்ட குணாதிசயங்கள் கொண்ட கணவன்மார்கள் தங்கள் இயல்பை மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது குடும்ப வாழ்வு சிறக்கும்.