‘டிஜிட்டல் நாடோடிகள்’ என்பவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் எந்த மூலையில் இருந்தும் வேலை செய்பவர்களைக் குறிக்கிறது. அமெரிக்காவில் ஆகஸ்ட் எட்டாம் தேதி அன்று டிஜிட்டல் நாடோடிகள் தினம் கொண்டாடப்படுகிறது. டிஜிட்டல் நாடோடிகளுக்கான நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை இணைக்கவும், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் இந்த நாளை அர்ப்பணிக்கிறார்கள்.
டிஜிட்டல் நாடோடியாக இருப்பதன் நன்மைகள்:
சுதந்திரம்: பாலித் தீவுகளில் உள்ள கடற்கரை, பாரிசில் உள்ள ஒரு கஃபே அல்லது கொலராடோவில் மலைப்பகுதியில் உள்ள அறை என உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யும் சுதந்திரத்தை இது தருகிறது.
வேலை வாழ்க்கை சமநிலை: அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்ப்பதால் வீட்டையும் வேலையையும் சமநிலையாக பாவிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், இந்த டிஜிட்டல் நாடோடி பணி முறை, தனிப்பட்ட மற்றும் தொழில் முறை பொறுப்புகளை மிகவும் திறமையாக நிர்வகிக்க உதவுகிறது.
பரந்த கண்ணோட்டம்: வெவ்வேறு கலாசாரங்கள், உணவு வகைகள் மொழிகள் மற்றும் நிலப்பரப்புகளை ஆராயும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் பல்வேறு வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும், பரந்த உலக கண்ணோட்டத்திற்கும் இது வழி வகுக்கிறது.
குறைந்த செலவுகளும் அதிகரித்த சேமிப்புகளும்: அதிக ஊதியம் பெறும் நாட்டிலிருந்து சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். அதேசமயம் குறைந்த வாழ்க்கை செலவுள்ள நாடுகளில் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கும்போது செலவுகள் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் நிறைய சேமிக்கலாம். சில நாடுகள் டிஜிட்டல் நாடோடிகளுக்கு வரிச்சலுகைகளை வழங்குகின்றன.
சிறப்பான படைப்பாற்றல் மற்றும் உற்பத்தி திறன்: புதிய சூழ்நிலைகளில் பணிபுரிவது படைப்பாற்றல் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கிறது. தனக்குப் பிடித்த அமைதியான இடம் அல்லது பொருத்தமான பணி சூழலை இவர்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
உலகளாவிய இணைப்புகள்: உலகெங்கிலும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட நபர்களை ஆன்லைனிலும் நேரிலும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் தங்களுக்குள் ஆலோசனை வழங்கவும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
திறன் மேம்பாடு: புதிய சூழல்களுக்கு தொடர்ந்து தங்களை மாற்றிக்கொள்வது சிக்கலைத் தீர்க்கும் திறன், தகவமைப்பை மேம்படுத்தும். வெவ்வேறு சந்தைகள் மற்றும் தொழில்களைக் கையாளுவதால் வேலை வாய்ப்புகள் அதிகரித்தலும் நடக்கும்.
சவால்கள்: டிஜிட்டல் வாழ்க்கை முறையில் விசா விதிமுறைகள், நம்பகமான இணைய அணுகல், நிலையான வருமானம் போன்ற சவால்கள் இருந்தாலும் கவனமாக திட்டமிட்டு இந்த தொழிலை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வொர்க் ஃப்ரம் ஹோம் முறைக்கும் டிஜிட்டல் நாடோடி முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
ஒற்றுமைகள்: இந்த இரண்டு பணிகளைச் செய்யும் ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை செய்யாமல் தொலைதூரத்தில் இருந்து வேலை செய்கிறார்கள். இருவரும் தங்கள் வேலையை செய்ய தொழில்நுட்பக் கருவிகளான கணினிகள், இணையம் போன்ற தகவல் தொடர்புகளை பயன்படுத்துகிறார்கள். இருவரும் வேலை நேரத்தில் எந்தவிதமான டென்ஷனும் இன்றி அதிக நெகிழ்வுத் தன்மையை அனுபவிக்கிறார்கள். வேலை வாழ்க்கை சமநிலையை அனுபவிக்கிறார்கள்.
வித்தியாசங்கள்: வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்கள் வீட்டிலிருந்தும், டிஜிட்டல் நாடோடிகள் பல்வேறு நாடுகளில் வாடகை விடுதிகளில் இருந்து கூட வேலைகளை செய்யலாம். மேலும், டிஜிட்டல் நாடோடிகள் வேலை செய்யும்போது புதிய இடங்களை ஆராயவும் புதிய சூழ்நிலைகள், கலாசாரங்கள் போன்றவற்றை எதிர்கொள்ளலாம். இதனால் வெவ்வேறு கால வித்தியாசங்களில் சவாலான, உற்சாகமான பணியாக இருக்கலாம். வொர்க் பிரம் ஹோம் பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான வீட்டுச் சூழல் இருக்கும்.