நேரம் தவறாமையினால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

Punctuality
Punctualityhttps://soundcloud.com

யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காக ஒரே விஷயம் எதுவென்றால் அது நேரம்தான். குறித்த நேரத்தில் செய்யப்படும் எந்த ஒரு விஷயமும் வெற்றியைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால்தான் முன்னோர்கள், ‘காலத்தே பயிர் செய்’ என்று கூறிச்சென்றனர். இங்கு பயிர் என்பது விளையும் பயில் அல்ல. அது நாம் செய்யும் காரியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மாவீரன் நெப்போலியன் ஒரு சமயம் தன்னுடைய படைத் தளபதிகளை ஒன்று கூட்டி அருமையான பகல் விருந்து வைக்கவும், அதைத் தொடர்ந்து அடுத்த யுத்தத்திற்கான கலந்தாலோசனை நடத்திடவும் விரும்பினான். அதன்படி, விருந்து சரியாக 12 மணிக்குத் தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து 12.15க்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் தளபதிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிப்பு அனுப்பினான்.

மாவீரன் நெப்போலியன் குறிப்பிட்ட அந்த 12 மணிக்கு உணவுக் கூடத்தில் அவன் மட்டுமே இருந்தான். குறிப்பிட்ட படி 12 மணிக்கு உணவு பறிமாறப்பட்டு விருந்தை அவன் தனியாக உண்டு முடித்தான். 12.05ல் இருந்து ஒவ்வொருவராக வரத் துவங்கிய படைத் தளபதிகளை அவன் காத்திருக்கச் செய்தான். உணவு நேரம் முடிந்து சரியாக 12.15 மணிக்கு ஆலோசனைக் கூடத்தில் நுழைந்தபடியே, “நல்லது நண்பர்களே, விருந்து இனிதே முடிந்தது. இனி, போர் ஆலோசனையைத் தொடங்கலாமா?” என்றான்.

தாமதமாக வந்து காத்திருந்த படைத் தளபதிகளுக்கோ, ‘குறித்த நேரத்தில் வந்திருந்தால் விருந்தை ஒரு பிடி பிடித்திருக்கலாமே’ என்கிற மன வருத்தம் ஏற்பட்டது. நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பது இதுதான். அதோடு, மாவீரன் நெப்போலியனின் மாபெரும் வெற்றிக்கும் நேரம் தவறாமையும் ஒரு முக்கிய காரணமாகும்.

அதைப் போலவேதான், வெளியூர் பயணம் மேற்கொள்வதற்காக ரயில்வே நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டால் நம் கோச் நிற்கும் இடத்தில் தயாராக இருக்கலாம். வீட்டிலிருந்து வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் போன்ற இடையூறுகளில் சிக்கிக்கொள்ள வேண்டியதில்லை. ரயில் போய்விட்டதே என்று அதன் மேல் பழி போட வேண்டிய அவசியமும் இல்லை.

பணிபுரியும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் சென்று விட்டால் பதற்றம் இன்றி பணிகளை முடிக்கலாம். அலுவலக நேரம் முடியும்போது வேலைகளை முடித்த திருப்தியுடன் கிளம்பி விடலாம். தாமதமாகப் போய் மேலதிகாரிகளின் முன் கைகட்டி நெளிய வேண்டிய அவசியம் இல்லை. அலுவலகப் பணி நேரத்தில் பேசி நேரத்தை வீணாக்காமல் இருந்தால் குறித்த நேரத்தில் பணிகள் முடியும். மதிய உணவு இடைவேளையில் பேசிக்கொள்ளலாமே.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனைவியர் மாற்றிக்கொள்ள வேண்டிய 3 பழக்கங்கள்!
Punctuality

வேலை சம்பந்தமான போட்டித் தேர்வுகள், நேர்காணல்கள், பொது தேர்வுகளுக்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்று விட்டால் பதற்றம் ஏற்படாது. அது போலவே, கல்யாண வீட்டிற்கு முகூர்த்த நேரத்திற்கு முன்னதாகவே போய்விட்டால் தாலி கட்டுதல் போன்ற முக்கிய சடங்குகளைக் காணலாம்,  வாழ்த்தலாம். தாமதமாகப் போனால் மணமக்கள் மணையை விட்டு எழுந்து போய் இருப்பார்கள்.

கச்சேரி கேட்க சபைகளுக்கோ, சினிமா தியேட்டருக்கோ நிகழ்ச்சி துவங்கும் நேரத்திற்கு முன்பே சென்று விட்டால் ஆரம்பத்தில் இருந்து ரசித்து மகிழலாம். தாமதமானால் இருட்டில் இருக்கை தேடி அமர்வது சிரமம் ஆகிவிடும்.

மருத்துவமனைகளுக்கு அப்பாயின்மென்ட் வாங்கிய நேரத்திற்கு முன்பே போனால் மருத்துவரிடம் சாவகாசமாக பிரச்னைகளை சொல்லலாம். தாமதமாகப் போனால் அடுத்த நபரை கூப்பிட்டு விடுவார்கள்.

ஒருவர் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்திருந்தால் சரியான நேரத்திற்கு சென்று விட்டால் தயாராக இருக்கும் வீட்டார் மகிழ்வார்கள். தாமதமாகப் போய் அவர்களைக் காத்திருக்க வைக்கக் கூடாது. இப்படி, எங்கும் எதிலும் நேரம் தவறாமையே நல்ல பயன் தரும். சம்பாதிக்க முடியாதது நேரம் ஒன்றுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com