மனிதர்களுக்கும் நாய்களுக்குமான பாசப்பிணைப்பின் காரணங்கள் தெரியுமா?

Bonding with the dog
நாயுடன் பாசப்பிணைப்பு

பொதுவாக, வீடுகளில் நாய்கள்தான் அதிக அளவில் மனிதர்களின் செல்லப்பிராணிகளாக காலம் காலமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. மனிதர்களுக்கும் நாய்களுக்குமான பாசப்பிணைப்பிற்கான சிறப்புக் காரணங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

கூட்டு வாழ்க்கை முறை: நாய்களும் மனிதர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கின்றனர். பரஸ்பரம் இரு உயிரினங்களுக்கும் பயனளிக்கும் ஒரு கூட்டு வாழ்வு முறையை கடைப்பிடித்து வருகின்றனர். ஆரம்ப காலங்களில் மனிதர்களுக்கு, விலங்குகளை வேட்டையாட நாய்கள் மிகவும் உதவியாக இருந்தன. மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் சிறந்து விளங்கின. அதனால் வீடுகளில் அவற்றை வளர்க்க ஆரம்பித்தார்கள். மனிதர்களும் நாய்களுக்குத் தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை வழங்கினர்.

இணைப்புப் பாலங்கள்: மற்ற விலங்குகளை விட நாய்கள் மனிதர்களின் உடல் மொழி மற்றும் முக பாவனைகளை புரிந்து கொள்வதிலும், ரெஸ்பான்ஸ் செய்வதிலும் மிகவும் திறமையானவை. அதைப்போலவே நாயின் குரைப்பொலி, செல்லச்சிணுங்கல்கள் மற்றும் உடல் சமிக்ஞைகளை மனிதர்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அவை இருபாலருக்கும் ஏற்ற இணைப்புப் பாலங்களாக இருக்கின்றன.

உணர்ச்சிப் பிணைப்பு: நாய்கள் மனித உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் உணர்திறன் கொண்டவை. அவற்றின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக, சோகமாக அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது அதை எளிதாக உணர முடியும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாய்கள் மனிதர்களுக்கு ஆறுதலையும் ஆதரவையும் வழங்கி அவர்களது மன அழுத்தத்தை நீக்குகின்றன. எனவே, இந்த உணர்திறன் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை வளர்க்கிறது.

விசுவாசம்: நாய்கள் விசுவாசத்திற்கு மிகவும் பெயர் பெற்றவை. மேலும், நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்குபவை. நாய்களைப் போல விசுவாசமான விலங்குகள் வேறில்லை. தன் எஜமானருக்கு ஆபத்து எனில், கடுமையாகப் போராடத் தயங்காதவை. அதேபோல, பல ஆண்டுகள் ஆனாலும் அவை தங்கள் முன்னாள் எஜமானர்களை மறப்பதில்லை.

நீடித்த உறவு: பிற விலங்குகளைப் போல அல்லாமல் நாய்கள் மனிதர்களின் அன்றாட நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும். நடைப்பயிற்சி செய்யும்போது கூட வருவது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பிரியமாக விளையாடுதல், சில பயிற்சிகள் மூலம் அவை மனிதர்களுக்கு தேவையான எளிய வேலைகளைக் கூட செய்துத் தரும். செய்தித்தாள் எடுத்துக்கொண்டு வருவது, தூக்கி எறியப்பட்ட பந்தை எடுத்துத் தருவது போன்ற செயல்கள் மூலம் இருவருக்கும் இடையேயான நீடித்த உறவு மற்றும் நினைவுகளை உருவாக்கி அவர்கள் இடையேயான தொடர்பை ஆழமாக்குகின்றது.

இதையும் படியுங்கள்:
பூர நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய நாலூர் மாடக்கோயில்!
Bonding with the dog

நன்றி உணர்வு: மனிதர்களும் தங்கள் வீட்டு நாய்களுக்கு இருப்பிடம் தருதல், நல்ல முறையில் தண்ணீர் தந்து, உணவளித்தல் போன்ற அவற்றின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து, சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். மேலும், நாய்கள் மனிதர்கள் மேல் பாச உணர்வுடன் இருக்கின்றன. நாய்கள் தங்கள் நல்வாழ்வுக்காக அவர்களின் உரிமையாளரை சார்ந்து இருப்பது உணர்ச்சிப் பிணைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன.

சமூகத் தொடர்பு: இயல்பிலேயே நாய்கள் தோழமையை விரும்பும் சமூக விலங்குகள். மனிதர்கள் வழங்கும் தோழமை இந்த தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும், அவற்றை பூங்காக்களுக்கு நடைப்பயிற்சிக்காக அழைத்துச் செல்கின்றனர். அங்கு அவை பிற நாய்களுடன் ஒரு சமூகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றன. இதனால் அவற்றின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதோடு மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன.

இதுபோன்ற காரணங்களால்தான் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான பாசப்பிணைப்பு அதிகரிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com