‘ஷாப்பிங் டிஸார்டர்’ எனப்படும் மன அழுத்தப் பிரச்னைக்கான காரணங்கள் தெரியுமா?

Shopping
Shopping
Published on

‘ஷாப்பிங் டிஸார்டர்’ (Shopping Disorder) என்பது ஒரு வகையான மன அழுத்தப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களுள் முதன்மையானது, 'ஷாப்பிங்.' அதனை சிறந்த பொழுதுபோக்காகக் கொண்டாடவும் செய்வார்கள். அதிலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி, வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழும் பெண்களுக்கு வெளியே சென்று வருவதற்கான வாய்ப்பை ஷாப்பிங்தான் ஏற்படுத்திக்கொடுக்கும். இதனால் ஷாப்பிங் என்றாலே பெண்கள் உற்சாகமாகக் கிளம்பி விடுவார்கள்.

மனதுக்குப் பிடித்தமான பொருளை வாங்கச் செல்வதாக இருந்தால் இன்னும் குஷியாகி விடுவார்கள். அப்படி நெடுநாட்களாக வாங்க விரும்பிய பொருட்களை தேடிச் சென்று வாங்குவதற்கு முனைப்பு காட்டுவதில் தவறில்லை. அந்தப் பொருளையும் தவிர்த்து, அங்கு பார்த்ததும் பிடித்துப்போகும் பொருட்களை எல்லாம் வாங்குவதற்கு விரும்பும் மனநிலை சிலரிடம் தொற்றிக்கொள்ளும். ஏற்கெனவே, ஆடை, அணிகலன்கள் தம்மிடம் நிறைய இருந்தாலும் மீண்டும் வாங்குவதற்கு முனைப்பு காட்டுவார்கள். அத்தகைய நிலைப்பாடுதான், 'ஷாப்பிங் டிஸார்டர்' எனப்படும் ஒருவகையான மனநிலை கோளாறுக்கு வித்திடுவதாகும்.

இத்தகைய பாதிப்பு கொண்டவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்குவதால் மட்டும் மன நிறைவு ஏற்படாது. தற்போது தேவைப்படாத, அவசியமில்லாத பொருட்களைக் கூட வாங்குவார்கள். அந்தப் பொருட்கள் அவர்களுக்கு பிடித்தமானவையாக இருக்கும் என்பது மட்டுமே அதற்கான காரணமாக இருக்கும். ஆனால், அவை தற்போது அவர்களுக்குப் பயன்படாத பொருளாகவே இருக்கும். அப்படி அவசியமின்றி விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டே இருப்பது ஷாப்பிங்குக்கு அவர்களை அடிமைப்படுத்தி விடும்.

அப்படிப்பட்டவர்களை வீட்டுக்குள்ளேயே இருப்பதால் பொழுது போக்குக்காக ஷாப்பிங் செல்கிறார்கள் என்றும் கூறி விட முடியாது. அடிப்படை தேவை பற்றியோ, கையிருப்பாக வைத்திருக்கும் பணம் பற்றியோ சிந்திக்காமல் செலவு செய்யும் எண்ண ஓட்டமே அவர்களிடம் எட்டிப்பார்க்கும். அதனால் பணத்தை இழக்கவைக்கும் பொழுதுபோக்காக அவர்களின் ஷாப்பிங் மாறிவிடக்கூடும். மன நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சரியான திட்டமிடலுடன் செயல்படாவிட்டால் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சிரமமாகும்.

தேவையறிந்து பொருட்களை வாங்குவது வேறு, அவசியமின்றி பொருட்களை வாங்குவது வேறு. இவை இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனை கருத்தில் கொள்ளாமல் ஏற்படும் 'ஷாப்பிங் டிஸார்டர்' எனப்படும் மனநிலை கோளாறு ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் பாதிக்கும். குறிப்பிட்ட பொருட்களின் மீது அலாதி பிரியம் கொள்வது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
அவகோடா பழத்தின் விதையிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Shopping

இந்த ஷாப்பிங் டிஸார்டர் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதை ஒருசில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். தினசரியோ அல்லது அடிக்கடியோ ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்காக ஷாப்பிங் செல்வார்கள். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களாக இருந்தால் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் அதில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகை காலியாகும் வரை பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். பிடித்தமான பொருட்களை பார்த்துவிட்டாலே மற்றவர்கள் முன்னிலையில் அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இவர்கள் ஷாப்பிங் செல்வதற்காக பொய் பேசக்கூட தயங்க மாட்டார்கள். சில சமயங்களில் மட்டுமே செய்த தவறுக்காக வருத்தப்படுவார்கள். ஆனாலும் ஷாப்பிங் செல்வதை ஒருபோதும் தவிர்க்க மாட்டார்கள். ஷாப்பிங் செல்வதற்காக மற்றவர்களிடம் கடன் வாங்கவும் தயங்க மாட்டார்கள். அதேவேளையில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

ஏற்கெனவே பட்ஜெட் போட்டுவிட்டு ஷாப்பிங் சென்றிருந்தாலும் கூட அதையும் மீறி தாராளமாக செலவு செய்வார்கள். மனக்கவலை தரும் ஏதாவதொரு பிரச்னையை எதிர்கொண்டால் அதில் இருந்து மீள்வதற்காகவோ, அதை மறப்பதற்காகவோ ஷாப்பிங் செல்வார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com