

பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை அன்பையும் பாசத்தையும் கலந்து ஊட்டி வளர்த்தால் நிச்சயமாக அவர்கள் ஒருபோதும் உங்களிடம் இருந்து எதையும் மறைக்கவும் மாட்டார்கள், உங்களுக்கு எதிராக எதையும் செய்யவும் மாட்டார்கள். இது உறுதி. ஆனால், இதை நிறைய பெற்றோர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் கருத்துப்படி பாசப்பிணைப்பு என்றால் அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கும் முறையாகும். தங்களுடைய குழந்தை எது கேட்டாலும் ஆன்லைனில் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். சமீபத்தில்தான் ஆன்லைனில் எல்லாம் கிடைக்கிறதே. ஆனால், பத்து வருடத்திற்கு முன்பு இந்த சலுகை எல்லாம் இல்லை. அப்போது கூட சில பெற்றோர்கள் குழந்தைகள் இரவு கேட்டால் கூட வண்டியை எடுத்துக்கொண்டு போய் வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், இதுதான் உண்மையான பாசப்பிணைப்பு என்று. இதுவல்ல உண்மையான பாசம்.
நீங்கள் இப்படி செல்லம் கொடுத்து வளர்ப்பதனால் ஒரு காலகட்டத்தில் உங்களுக்கே அந்தக் குழந்தை எதிரியாகிவிடும். நினைத்ததை மற்றும் கேட்டதை வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் அந்தக் குழந்தையை உங்களால் சமாதானப்படுத்தவே முடியாது. சொல்லப்போனால் நீங்கள் இவ்வாறு செல்லம் கொடுக்கும் காரணத்தால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் முற்றிலுமாக பாழடைந்து விடும்.
பாசப்பிணைப்பு என்றால் ஒரு குழந்தைக்கு நல்லது மற்றும் கெட்டது எதுவென எல்லாவற்றையும் எடுத்துரைக்க வேண்டும். ஒரு குழந்தை தவறு செய்யும்போது அதை அடிக்காமல் மேலும், வன்முறையோடு பேசாமல் நிதானமாக, அன்பாக, பாசத்தோடு பேசி புரிய வைக்க வேண்டும். அவ்வாறு பேசினால் அந்தக் குழந்தை எல்லா விஷயத்தையும் மறைக்காமல் பெற்றோர்களிடம் சொல்லும். நீங்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது அடித்தோ அல்லது திட்டினாலோ, அந்தக் குழந்தை அடுத்த முறை எல்லாவற்றையும் உங்களிடமிருந்து மறைத்து விடும். எந்த நேரத்தில் தவறு என்று எடுத்துரைக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் பாசத்தோடும் அன்போடும் அரவணைத்துக் கொண்டு எடுத்துரைக்க வேண்டும்.
குழந்தைகள் எதைக் கேட்டாலும், எது தேவையோ அதை மட்டும் வாங்கிக் கொடுக்க வேண்டும். எது தேவையில்லையோ அவர்களுக்கு நல்ல முறையில், ‘இது உனக்கு வேண்டாம்’ எனக் கூறி அதற்கான காரணத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகள், பிற்காலத்தில் எந்தவிதமான சூழ்நிலையிலும் வாழ்வதற்கான வழியை தானே உண்டாக்கிக் கொள்வார்கள்.
பெற்றோர்களே, குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து மறுக்காமல் ஓவராக செல்லமாக அதாவது pampering என்று சொல்வார்களே, அந்த முறையில் வளர்த்தீர்கள் என்றால், அது அன்பையும் பாசத்தையும் கொடுத்து வளர்ப்பது அல்ல. மாறாக, நீங்களே உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை அழிக்கிறீர்கள் என்று பொருள்.
அதிகக் கண்டிப்போடு வளர்த்தால், அந்தக் குழந்தைகள் பயத்தில் எல்லாவற்றையும் நம்மிடம் இருந்து மறைக்கும். அதைப் போலவே இந்த pampering முறையில் வளரும் குழந்தைகளும் advantage எடுத்துக் கொண்டு பாதி விஷயங்களை நம்மிடம் இருந்து மறைத்து விடுவார்கள்.
ஆகவே, குழந்தைகளை பாசத்தோடும் அன்போடும், தக்க சமயத்தில் நல்லதையும் கெட்டதையும் நல்ல விதத்தில் எடுத்துரைத்து, அதிக செல்லம் கொடுக்காமல் வளர்க்கப் பழகுங்கள். அதுதான் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும்.