எதிர்மறையான சுய பேச்சு தரும் தீமைகள் தெரியுமா?

Self-criticism
Self-criticismhttps://twitter.com

ம் அனைவருக்குள்ளும் ஒரு சுய உள் விமர்சகர் இருக்கிறார். நிறைய நேரங்களில் இந்தக் குரல் உதவிகரமாக இருக்கிறது. புத்திசாலித்தனமாக செயல்பட அனுமதிக்கிறது. ஆனால், அதேசமயம் எதிர்மறையான சுய விமர்சனங்களும் அடிக்கடி ஒருவருள் எழும். அது தரும் தீய பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

எதிர்மறை சுய பேச்சு: ஏதாவது ஒரு சிறிய விஷயத்திற்கு கூட நம்பிக்கை இழந்து, 'நான் எதுக்குமே லாயக்கில்லை, என்னால் எதுவும் முடியாது, என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே கிடையாது’ என்று சொல்வது, 'என்ன முயற்சி பண்ணினாலும் என்னால ஜெயிக்கவே முடியாது' என்று ஒருவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது எதிர்மறையான சுய பேச்சு (Negative self talk) என்று அழைக்கப்படுகிறது.

எதிர்மறை சுய பேச்சின் தீங்குகள்:

1. மன அழுத்தம் அதிகரித்தல்: அடிக்கடி எதிர்மறையாக தனக்குள்ளே பேசிக்கொள்ளும் நபர்கள் சிறிய விஷயங்களைக் கூட பெரிதுபடுத்துவதால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதனால் எதையும் சரியாக செய்யவோ, நிதானமாக யோசிக்கவோ முடியாது. இவருடைய நடத்தையில் பெருமளவு மாற்றம் உண்டாகும்.

2. தோல்விகள்: நம்பிக்கையே இல்லாமல் இவர்கள் காரியம் செய்யத் தொடங்குவதால் வெற்றியை விட தோல்விகளை அதிகம் சந்திப்பார்கள். தோற்பதற்காகவே அவதாரம் எடுத்ததாகக் கருதுவதால் அவர்களால் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியாது.

3. உறவுச் சிக்கல்கள்: எதிர்மறை பேச்சுக்கள் ஒருவரை பாதுகாப்பற்றவராகவும் திறனற்றவர் ஆகவும் கருத வைப்பதால் அவரால் உறவு மேலாண்மையை சிறப்பாக கடைபிடிக்க முடியாது. குடும்பத்தில் உள்ள நபர்களுடன் சிறு சிறு தவறுகளுக்குக் கூட சண்டை சச்சரவில் ஈடுபடுவார்கள். அதனால் உறவு சிக்கல்கள் எழுகின்றன. உறவு மேலாண்மையை இவர்களால் கடைபிடிக்கவே முடியாது.

4. தீ போல பரவும் சுய வெறுப்பு: இவர்களுக்குத் தங்களைத் தாங்களே பிடிக்காது. பிறரையும் பிடிக்காது. அதனால் மிக எளிதாக சுய வெறுப்பு பிறர் மேல் வெறுப்பாக மாறுகிறது. அதேபோல, பிறரும் இவர்களை வெறுக்கத் தொடங்குகிறார்கள்.

எதிர்மறையான சுய பேச்சை மாற்றுவது எப்படி?

1. தனக்குத்தானே பேசிக்கொள்ளும்போது என்ன பேசுகிறோம் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். மனதிற்குள் பேசிய அந்த விஷயத்தை நெருங்கின நண்பர்களிடமோ அல்லது ஒரு சிறு குழந்தையிடமோ சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். அது பிறரிடம் சொல்லத் தகாததாக இருந்தால் அது உங்களுக்குள்ளும் சொல்லிக்கொள்ள தகாததுதான்.

2. நீங்கள் உண்மையில் நல்லவர்தான். தேவையில்லாமல் தன்னைப் பற்றி மோசமாக எண்ணுகிறீர்கள் என்று உணர வேண்டும்.

3. சுய உள் விமர்சகருக்கு ஒரு முட்டாள்தனமான புனைப்பெயரைக் கொடுக்க வேண்டும். அது பேசும் எல்லாமும் முட்டாள்தனமானதுதான் என்ற எண்ணம் அந்தக் குரலை படிப்படியாக லட்சியம் செய்வது குறையும்.

இதையும் படியுங்கள்:
கோரைக்கிழங்கு பிரசாதமாக தரும் கோயில் எது தெரியுமா?
Self-criticism

4. நீ சொல்வதெல்லாம் உண்மைதானா என்று உள்விமர்சகரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். உதாரணமாக, ‘நீ எதற்கும் லாயக்கில்லை’ என்று உள்குரல் சொன்னால் சற்றே சிந்தித்து, எத்தனை நல்ல விஷயங்களை சாதித்து இருக்கிறீர்கள் என்று நினைத்துப் பார்க்கவேண்டும். அப்போது உள் மனக்குரலின் அபத்தமான குற்றச்சாட்டு புரியும்.

5. எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்போது அவற்றை வாய்விட்டு சத்தமாக சொல்லுங்கள். அதைக் கேட்டு உங்களுக்கு சிரிப்பு வரும். எவ்வளவு கேலிக்கூத்தாக உங்களை நீங்கள் நினைக்கிறீர்கள் என்று புரியவரும்.

6. எதிர்மறை எண்ணத்தை உடனே நிறுத்துங்கள். 'போதும் எனக்கு வேலை இருக்கிறது. நான் அப்புறம் உன்னை கவனிக்கிறேன்' என்று உள் மனதிற்கு பதிலளித்து விட்டு வேலையைத் தொடருங்கள். உங்களைப் பற்றிய நேர்மறையான நல்ல விஷயங்களை சத்தமாக சொல்லும்போது எதிர்மறையான சுயபேச்சு மெதுவாக அடங்கிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com