இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சி, பல வகைகளில் நமக்கு நன்மையாக இருந்தாலும், மக்களுக்குள்ளான நெருக்கத்தை அதிகமாக இது குறைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்துப் பேசுவது, நேரம் செலவிடுவது போன்றவை குறைந்துள்ளது.
இதுபோன்று உங்கள் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறதா? என்று சொல்லுங்கள். உங்களுடைய கணவரிடமோ அல்லது மனைவியிடமோ மனம் விட்டுப் பேசலாம் என்று போகும்போது அவர் உங்களிடம் முகம் கொடுத்துக்கூட பேசாமல் எப்போது பார்த்தாலும் போனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? இதற்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. அதுதான் 'Phubbing'. அதிகமாக போன் போன்ற சாதனங்களை எந்நேரமும் பயன்படுத்துவதால் கணவன், மனைவி உறவில் கூட Quality time செலவிடுவதில்லை. இதனால் மனஸ்தாபமும், பிரச்னைகளும் குடும்பத்தில் ஏற்படுகின்றன.
இது கணவன், மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. நண்பர்கள், காதலர்கள் போன்ற உறவில் கூட இது நிகழும். இவ்வாறு செய்வது சமயத்தில் உறவுகளில் கூட விரிசல் மற்றும் மன உலைச்சலை ஏற்படுத்தும்.
ஏனெனில், உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களுடன் நேரம் செலவழிக்க நினைப்பவர்களை மதிக்காமல், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது போலத் தோன்றும். இது சிறிய பிரச்னையாக ஆரம்பித்தாலும், நாளடைவில் உங்களுடைய நண்பர்களோ அல்லது பார்ட்னரோ உங்களுடன் நேரம் செலவிடுவதையே நிறுத்தி விடுவார்கள். அப்போதுதான் அதன் தாக்கத்தை நீங்கள் உணருவீர்கள்.
நீங்கள் உண்மையிலேயே அந்த உறவையும், நபரையும் மதிப்பதாக இருந்தால் அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களுடன் நேரத்தை செலவிடும்போது இதுபோன்ற சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம். உங்களுக்கு பிடித்தவருடன் நேரம் செலவழிக்கும்போது தலையாட்டுவது, கண்களைப் பார்த்துப் பேசுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் கூட முக்கியமாகும்.
சிலர் உணவு சாப்பிடும்போது கூட போனை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு செய்வது மிகவும் தவறாகும். இதுபோன்று எந்நேரமும் போனை பயன்படுத்துவதைத் தவிர்க்க, மொபைலை ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் பயன்படுத்துங்கள். வேறு ஏதேனும் பொழுதுபோக்கை உருவாக்கிக் கொண்டு, அதில் ஆர்வம் காட்டத் தொடங்குங்கள். மொபைலை சிறிது நேரம் அணைத்து வையுங்கள். இவ்வாறு செய்யும்போது, வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற புரிதல் தானாகவே உங்களுக்குள் வந்துவிடும். முயற்சித்துதான் பாருங்களேன்.