கண்புரை நோய் என்று சொல்லப்படும் Cataract பிரச்னை ஏன் பெரும்பாலும் வயதானவர்களை தாக்குகிறது. இதற்கான காரணம் என்ன? இதைக் குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.
கண்களில் உள்ள Lens பகுதியில் புகை போன்ற அல்லது மேகம் போன்ற அமைப்பு படர்ந்து விடுவதால் பார்வையில் பிரச்னைகள் ஏற்படும். இது பெரும்பாலும் வயதானவர்களையே தாக்குகிறது.
கண்புரை வந்துவிட்டதை உடனடியாகத் தெரிந்துக்கொள்ள முடியாது. அந்த நோயின் அறிகுறிகளை வைத்தே தெரிந்துக்கொள்ள முடியும். பார்வை மங்குவது, நிறம் மங்குவது, தினசரி வேலைகளைச் செய்ய முடியாமல் போவது, எழுத்துக்களைப் படிப்பதில் சிரமம் ஏற்படுவது போன்ற பிரச்னைகள் வரும். வெகுகாலம் இதை அலட்சியப்படுத்துவது கண் பார்வை இழப்பிற்குக்கூட வழி வகுக்கும்.
இதில் ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், கண்புரையை அறுவை சிகிச்சை மூலமாக சரிசெய்ய முடியும். கண்புரை வயதானவர்களை மட்டும் தாக்குவதில்லை. கண்புரை பிரச்னை வருவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. சர்க்கரை நோய், அதிகமாக புகைப்பிடித்தல், மது அருந்துதல், குடும்பத்தில் வேறு நபருக்கு கண்புரை இருத்தல், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவழிப்பது, கண்களில் காயம் ஏற்படுவது, ஸ்டீராய்ட் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் இதற்கான காரணங்களாக அமையலாம்.
இளமையாக இருக்கும்போது கண்களில் உள்ள lens மிகவும் தெளிவாக இருக்கும். ஆனால், 40 வயதைக் கடந்த பிறகு கண்களில் புகை மூட்டம் போன்று அல்லது மேகம் போன்று Lens மீது படரத் தொடங்கும்.
கண்புரை பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்கு சிறந்த வழிகள், உங்கள் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். கண்களில் காயம் ஏற்படாதவாறு பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும், புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும், ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானிய வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கண்புரை இருக்கிறதா இல்லையா? என்பதை மருத்துவரை அணுகி சுலபமாக பரிசோதித்து தெரிந்துக் கொள்ளலாம்.
இதற்கு மருத்துவர்கள் கண்களில் Eye drops விட்டு கண்களில் dilated eye exam செய்து பார்த்துக் கூறிவிடுவார்கள். 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்தப் பரிசோதனையை 2 வருடத்திற்கு ஒரு முறை செய்து பார்த்துக்கொள்ளலாம். இந்தப் பரிசோதனை வலியற்றதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கண்புரையை நீக்க அறுவை சிகிச்சையை கண்டிப்பாக செய்துகொள்வது சிறந்தது. இந்த அறுவை சிகிச்சையின்போது மருத்துவர் பாதிக்கப்பட்ட Lens ஐ நீக்கிவிட்டு செயற்கையான Lens ஐ பொருத்துவார்கள். இந்த அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பானதாகும்.