இன்றைய காலகட்ட இயந்திர வாழ்க்கையில், ஒரு நாளைக்கு எத்தனை முறை சிரித்திருப்போம் என்று யாராவது யோசித்துப் பார்த்ததுண்டா? எத்தனை முறை சிரித்திருப்போம் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏன் சில நாட்களில், நேரங்களில் சிரிக்காமல் கூட இருந்திருப்போம்.
எங்கள் ஊரிலே அரிசி கடை அண்ணாச்சி ஒருவர் இருக்கிறார். வெள்ளை வேட்டி சட்டை அணிந்து கொண்டு தெத்து பல்லை காட்டிச் சிரிப்பார். அவருடைய புன்னகை மட்டும் தனியாக பளிச்சென்று தெரியும். அவர் கடையில் அரிசி வாங்கினால் புன்னகை ஒன்றை இலவசமாகத் தருவார். இதனால் அவர் அரிசி கடையில் மட்டும் கூட்டம் அலைமோதும்.
எனவே, சிரிப்பது ஒரு பாஸிட்டிவிட்டியை பரப்புகிறது. சிரிப்பு, மகிழ்ச்சியை வெளிப்படுத்துபவர்களை சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் இருப்பதுண்டு. நாம் சிரித்து ஒருவருக்கு பரப்பும் பாஸிட்டிவிட்டியை அவர் வேறு ஒருவருக்கு பரப்புவார். இப்படி நாம் ஒருவரின் நாளை புன்னகைத்து நல்ல நாளாக மாற்றினால், அவர் வேறு ஒருவரின் நாளை நல்ல நாளாக மாற்றுவார்.
ஒருவரைப் பார்த்து புன்னகைப்பதற்கு அவர் பேர், ஊர், முகவரியை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. யாரோ முகம் தெரியாத நபரை வழியில் பார்க்க நேரும்போது ஒரு சிறு புன்னகையை உதிருங்கள். அது ஒரு நல்ல எண்ண வெளிபாடுதானே!
ஏன் கண்டிப்பாக சிரிக்க வேண்டும் தெரியுமா? சிரிப்பது நமக்கு நல்ல உணர்வை தரும். சிரிக்கும்போது நரம்பணுக்கள் மூளையை கிளர்வுற செய்து டோப்பமைன், என்டோர்பைன், செரோடோனினை வெளியிடுவதால் நம்முடைய உடல் அமைதியுற்று, இதயத் துடிப்பு சீராகி, ஸ்ட்ரெஸ் குறைந்து நமக்கு நல்ல மனநிலையை கொடுக்கும்.
சிரிப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நாம் புன்னகைப்பதால் மிகவும் தன்னம்பிக்கையாக உணர்வோம். அது வேலையிலோ அல்லது அடுத்தவர்களிடம் பேசும் போதோ நமக்கும் மற்றவர்களுக்கும் நல்ல உணர்வை கொடுக்கும். புன்னகைப்பதால் நாம் மற்றவர்களுக்கு அதிக கவர்ச்சிகரமாகத் தெரிவோம். மற்றவர்கள் கண்களுக்கு நாம் வசீகரமான, சுவாரஸ்யமான நபராகத் தெரிவோம்.
நாம் சந்திக்கும் முக்கியமான நபரிடம் நம்மைப் பற்றிய ஒரு அடையாளத்தை உருவாக்குவதில் புன்னகைக்கு முதலிடம் உண்டு. சாதாரணமாக இருப்பதை காட்டிலும் புன்னகைத்த முகத்துடன் பேசும் போது அடுத்தவர்களின் மனதில் நம் பிம்பம் சுலபமாகவே பதிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாக சிரிப்பவர்களுக்கு ஆயுள் அதிகமாகும் என்று கூறுவதுண்டு. சந்தோஷமாக கவலையின்றி இருக்கும்போது கண்டிப்பாக மகிழ்ச்சியாக வாழலாம். சிரிப்பதனால் இரத்த அழுத்தம் குறைவதாகக் கூறப்படுகிறது.
நகைச்சுவையுடன் பேசுபவர்கள், அதிகம் புன்னகைப்பவர்களுக்கு அதிகமாக நண்பர்கள் கூட்டம் இருப்பதைக் காணலாம். எனவே, மகிழ்ச்சி, சிரிப்பு, சந்தோஷம் போன்றவை அதிக மக்களை கவர்வதை காணலாம். இதுவே இன்று நிறைய பேருக்கு தேவைப்படக்கூடிய அருமருந்தாகும். எனவே அதிகம் புன்னகைத்து அடுத்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து நாமும் மகிழ்ச்சியாக வாழுவோம்.