குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலையாகும். குழந்தைகள் எதிரில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக பேசுதல் வேண்டும். பெற்றோரின் செயல்கள் மட்டுமல்ல, அவர்களின் பேச்சும் குழந்தைகளின் மனதை வெகுவாக பாதிக்கும். எனவே, குழந்தைகள் முன்பு பேசக்கூடிய வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை.
கிண்டல், கேலி பேச்சு வேண்டாமே: ‘சும்மா கிண்டலுக்குதானே’ என பேசும் சில வார்த்தைகள் குழந்தைகளை மிகவும் காயப்படுத்தலாம். இதெல்லாம் சாதாரண வார்த்தைகள்தானே என நீங்கள் எண்ணினால் அது தவறு. குழந்தைகளின் பிஞ்சு மனம் இதனை ஏற்காது காயப்பட்டு விடும். எனவே, குழந்தைகளின் மனதை புண்படுத்தும் வகையில் நகைச்சுவை என்ற பெயரில் கேலி, கிண்டல் செய்ய வேண்டாம்.
சுட்டிக்காட்டும் தவறுகளை நாம் செய்யாமல் இருத்தல்: பல சமயங்களில் குழந்தைகளை இது செய்யாதே, அது செய்யாதே என கட்டளையிடும் நாம், அந்த செயலைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். இது அவர்களுக்கு உங்கள் மீதான மரியாதையை குறைத்து விடுவதுடன், ‘இவர்கள் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது’ என்ற பாணியில் எதிர்த்துப் பேசி நடந்து கொள்வார்கள்.
உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை திணிக்காதீர்கள்: உங்கள் எண்ணங்கள், கருத்துக்களை அவர்கள் மீது திணித்தால் அவர்கள் மூச்சு முட்டி போய்விடுவார்கள். எது தவறு, எது சரி என்பதை அவர்களுக்கு விளக்கி எடுத்துக் கூறுவது மட்டும்தான் நாம் செய்ய வேண்டியது. அவர்களே புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளுதல் வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு நம் மீது ஒருவித வெறுப்பு வந்துவிடும்.
குழந்தைகளுக்கு கண்டிப்பாக உணர்த்த வேண்டிய விஷயங்கள்: சில குழந்தைகள் எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்வார்கள். கேட்டால் இல்லையென்று சத்தியம் கூட செய்வார்கள். இதற்குக் காரணம் நாம்தான். உண்மை என்பது எவ்வளவு வலுவானது, அதன் தாக்கம் எப்படி இருக்கும், பொய்யால் உருவாகும் மாயத்தோற்றம் எப்படி நம்மை பிறருக்கு எதிரில் அசிங்கப்படுத்தி விடும் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தத் தவறி இருப்போம். எனவே, குழந்தைகளுக்கு உண்மை பேச பழக்குதல், உண்மையாக இருப்பதற்கு பழக்குதல் நல்லது.
கடுமையாகப் பேசுதலை தவிர்த்தல்: சில சமயம் நம்மை அறியாமல் மிகக் கடுமையாக பேசி விடுவோம். அதை உணர்ந்தவுடன், குழந்தைகள்தானே அவர்களுக்கு எதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என எண்ணாமல், முதலில் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதல் நல்லது. அத்துடன் என்ன நினைத்து பேச வந்தோம், எதனால் அது இப்படி தவறாய் போய் முடிந்தது என விளக்கம் கொடுத்தல் நல்லது. இதனால் குழந்தைகளுக்குக் கடுமையாகப் பேசுதல் தவறு என்ற எண்ணம் மனதில் பதிந்து விடும்.
குழந்தைகளின் தன்னம்பிக்கையை குறைக்காமல் இருத்தல்: இது மிகவும் முக்கியம். காரணம், தன்னம்பிக்கைதான் அவர்களை வாழ்வில் மென்மேலும் வளர, உயர உதவும். எனவே, அவர்கள் ஏதேனும் தவறு செய்தால், ‘நீ எதற்கும் லாயக்கில்லை, வேஸ்ட், உன்னால் ஒரு பிரயோஜனமும் இல்லை’ போன்ற எதிர்மறை வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எதிர்மறை வார்த்தைகள் அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து விடும். நம்மால் எதுவும் முடியாது என்ற எண்ணம் அவர்கள் மனதில் வேரூன்றி விடும். எனவே, அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்காமல் அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி மாற வாய்ப்பு தருதல் வேண்டும்.