நெல்லிச்சாறை எவற்றுடன் கலந்து குடித்தால் என்ன ஆரோக்கியம் கிட்டும்?

Health benefits of drinking Amla juice
Health benefits of drinking Amla juicehttps://thamilkural.net
Published on

வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய் பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்கும் ஆற்றல் பெற்றதாகும். எனவே. பெண்கள் கண்டிப்பாக தினமும் ஒரு நெல்லிக்கனி உட்கொண்டு வர வேண்டும். மேலும், அதன் சாறுடன் இன்னும் சில பொருட்களை கலந்து சாப்பிடும்பொழுது உடல் ஆரோக்கியம் இன்னும் மேம்படும். அதனைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

நெல்லிக்கனி மூலம் சர்க்கரை வியாதியை குணப்படுத்தலாம். இதற்கு நெல்லிக்காய் அதிகமாய் கிடைக்கும் காலத்தில் நன்கு முற்றிய நெல்லிக்காய்களை எடுத்து கல்லுரலில் இட்டு இரும்பு பூண் இல்லாத மர உலக்கையால் இடித்து சாறு எடுத்து பிழிந்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாற்றில் போதிய அளவு வெந்தய பொடியையும் சேர்த்து காலை வேளையில் குடித்து வர சர்க்கரை வியாதி கட்டுப்படும்.

இரண்டு நெல்லிக்காய்களின் விதை நீக்கி சிறுத் துண்டுகளாக நறுக்கி நன்கு அரைத்து இரண்டு ஸ்பூன் வெல்லம், ஒரு ஸ்பூன் தேன், சிட்டிகை உப்பு, சிறிதளவு சீரகத்தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி குளிர வைத்து அருந்தலாம். மேலும், ஏழெட்டு நெல்லிக்காய்களை எடுத்து சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அதில் இளநீர் சேர்த்து குடிக்கலாம். இதனால் வியாதிகள் பலவும் நீங்கி, உடல் புத்துணர்ச்சி பெறும்.

நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, சிறிதளவு கருவேப்பிலை தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, தேன், சர்க்கரை கலந்தும் அருந்தலாம். நெல்லிக்கனி சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து கலந்து பருகி வந்தால் சீதபேதியை குணப்படுத்தி விடலாம்.

நெல்லிச் சாற்றுடன், திப்பிலி பொடி, தேன் மூன்றையும் சேர்த்து குழைத்து நாக்கில் தடவி வந்தால் வாய்ப்புண் குணமாகும். நெல்லிக்காய் சாற்றை வாயில் ஊற்றி கொப்பளித்து சிறிது நேரம் வாயிலேயே வைத்திருந்து பின்னர் துப்பினால் பல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

நெல்லிக்காயை அரைத்து அந்த விழுதுடன் இரண்டு மடங்கு வெல்லத் துருவல் சேர்த்து கிராம்பு, பட்டை தட்டி போட்டு, சிறிதளவு நெய் விட்டு ஜாமாக செய்து குழந்தைகளுக்கு சப்பாத்திகளில் கொடுத்து வந்தால் எல்லா விதமான சத்துக்களும் சிறுவயதில் இருந்தே கிடைக்க ஆரம்பித்து விடும். இது கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த பெண்களுக்கு அருமையான அனைத்துச் சத்துக்களும் மிகுந்த லேகியமும் கூட. உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சிப் பண்புடன் விளங்கும் நெல்லியானது சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சுமைகளை சுகமாக மாற்றும் வழி தெரியுமா?
Health benefits of drinking Amla juice

நெல்லிக்காய் பசியின்மையை போக்கும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். இரும்புச்சத்தை கொடுத்து இரத்த சோகையை குணப்படுத்தும். கண் பார்வை கோளாறுகளை சரி செய்யும். குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலையும் இது குணப்படுத்துகிறது. மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்கையும் நிறுத்த உதவுகிறது.

மேலும், இதயத்துக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் கொழுப்பு நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரித்து மாரடைப்பு வராமல் தடுக்கும் பண்பும் நெல்லிக்காய்க்கு உண்டு. ஆதலால், நெல்லிக்காயை தினசரி துவையல், சாறு, பச்சையாக கடித்து சாப்பிடுவது, பச்சடியாக, ஊறுகாய் செய்து சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுவது என்று ஏதாவது ஒரு ரூபத்தில் எடுத்துக்கொண்டால் பல்வேறு உடல் ஆரோக்கியங்களையும் பெற்று இளமையுடன் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com