bird with peace
bird with peacehttps://www.ehamall.com

அமைதியின் அர்த்தம் எதுவென்று தெரியுமா?

மைதியே நிம்மதியான வாழ்வின் அடித்தளமாக அமைகிறது. சிலருக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தால் அமைதி. வேறு சிலருக்கோ வீட்டில் இருப்பதை விட அலுவலக அமைதி பிடிக்கும். இந்த கோடை விடுமுறையில் அமைதியை அனுபவிக்கவே பெரும் செலவு செய்து மலைவாசஸ்தலங்கள் செல்பவர்கள் பலர். இப்படி பல வகைகளில் நாம் அமைதியைத் தேடுகிறோம். உண்மையான அமைதி என்பது என்ன தெரியுமா? இதோ இந்தக் கதை மூலம் தெரிந்து கொள்வோம்.

வளங்கள் மிகுந்த நாட்டின் மன்னர் அவர். அவ்வப்போது வித்தியாசமான நிகழ்வுகள், போட்டிகள் மூலம் மக்களை மகிழ்விப்பது அவர் வழக்கம். மக்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்தான் நாடு நலம் பெறும் என்பது அவரது நம்பிக்கை. போட்டிகள் நடத்துவதுடன் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பதும் அந்த மன்னரின் வழக்கம். போட்டிகளுக்கான கருக்களை புதிது புதிதாக சொல்பவருக்குக் கூட பரிசுகள் தருவார்.

ஒரு சமயம், ‘அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்’ என்று அறிவித்தார் மன்னர். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான  ஓவியங்களை வரைந்து  மன்னரிடம் காட்ட எடுத்து வந்து வரிசைப்படுத்தினார்கள்.

மன்னர் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தார். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு வகையில் பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஒரு ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே அற்புதமாக இருந்தது.

மற்றொருவர் அழகிய வண்ண வண்டி மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் அவ்வளவு  தத்ரூபமாக இருந்தன. இன்னொருவரோ, பனி மலையின் பின்னணியில் ஆனந்தமாக விளையாடும் பனிக்கரடிகளை உயிரோவியமாக காட்சிப்படுத்தி இருந்தார். இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். வரைந்த அனைவரும் அமைதியைக் குறிக்கும் ஓவியங்களையே வரைந்து அசத்தியிருந்தனர்.

கடைசியாக இருந்த  ஒரு ஓவியத்தில் மட்டும் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல என நினைத்த மன்னர், சினத்துடன் அந்த ஓவியத்தை வரைந்த ஓவியரை அழைத்து, “என்னப்பா இதில் எங்கே அமைதி உள்ளது?” என்று கேட்டார்.

“மன்னரே, இன்னும் சற்று ஆழமாக எனது ஓவியத்தை கவனியுங்கள் புரியும்” என அந்த ஓவியர் சொல்ல, சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்:
வயிற்றுக் கோளாறு மற்றும் மலச்சிக்கலுக்குக் காரணமாகும் உணவுகள் எவை தெரியுமா?
bird with peace

மன்னர் சற்று யோசித்தார். நிதானத்துடன் அந்த ஓவியரிடம், "இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால், இதில் அமைதி எங்கே இருக்கிறது?" என்று  மீண்டும் கேட்டார்.

அதற்கு அந்த ஓவியர், "மன்னா, சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல, இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!  அப்படிப் பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!” என்றார்.

"ஆஹா... அமைதிக்கு இப்படி ஒரு அற்புதமான விளக்கமா?" வியந்து கைதட்டிய மன்னன், அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.

இப்போது புரிந்திருக்குமே அமைதியின் அர்த்தம் என்னவென்று? அனைத்து  வசதிகளும் அமையப்பெற்று எந்தவித பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல. பல பிரச்னைகள் சூழ்ந்தாலும் மனோவலிமையுடன் நிச்சயம் ஒரு நாள் விடியும், என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்து நம் கடமையை செய்து வருவதுதான் அமைதி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com