நாம் கடைகளிலோ அல்லது சந்தைகளிலோ ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் வாங்கும்பொழுது அதன் மேலே ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். இந்த ஸ்டிக்கரை பார்த்தவுடன் நாம் என்ன நினைப்போம், ‘ஓஹோ இது இறக்குமதி செய்யப்பட்ட பழமாக இருக்கும். ரொம்ப விலை கூட இருக்கும். இது ஒரு விளம்பர ஸ்டிக்கர்’ என்றெல்லாம் பலவிதமாக நினைத்து இருப்போம். நம்மில் 99 சதவீதம் பேருக்கு இது எதற்காக ஓட்டப்படுகிறது என்ற புரிதல் இல்லை.
உச்சகட்டமாக, இந்தப் பழங்களில் ஏதேனும் டேமேஜ் இருக்கும். அதனால் அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் என்று கூட நீங்கள் நினைக்கலாம். அதெல்லாம் தவறு. இந்த ஸ்டிக்கர் ஏன் ஒட்டப்படுகிறது, இதன் பின்னணி என்ன? இது சொல்ல வரும் செய்தி என்ன என்பதை இந்தப் பதிவில் அறியலாம்.
நாம் ஆப்பிளை வாங்கிச் சென்று சாப்பிடும்போது ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இடத்தில் ஆப்பிள் அழுகியோ அல்லது பூச்சியால் பாதிக்கப்பட்டோ இருக்கும். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிளை ஏற்றுமதி தரம் வாய்ந்தது, விலை உயர்ந்தது, அதனால்தான் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என்று கடைக்காரர் கூறி விற்பனை செய்திருப்பார். உண்மையில், மோசமான பகுதியை மறைக்கவோ அல்லது அழுகியதை மறைக்கவோ ஸ்டிக்கர் ஒட்டப்படுவது இல்லை.
பொதுவாக, நாம் ஆப்பிளை சாப்பிடுவதற்கு எடுத்ததும், அதில் இருக்கும் ஸ்டிக்கரை நீக்கி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களை படிப்பதில்லை. இது குறித்து கூறும் நிபுணர்கள், ‘ஆப்பிள் மட்டுமின்றி, தற்போது ஆரஞ்சு பழங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. ஸ்டிக்கருடன் பளபளக்கும் ஆப்பிள்களை பார்க்கும் மக்கள் பெரும்பாலானோர், அவை விலை உயர்ந்ததாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். பல நேரங்கள் கடைக்காரர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள்களை அதிக விலைக்கு விற்பதும் உண்டு. ஆனால், இந்த ஸ்டிக்கர் நமது ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, நீங்கள் ஆப்பிளை வாங்கும்போதெல்லாம் அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை படிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று அதில் எழுதப்பட்டிருக்கும்.
ஆப்பிளில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் பழத்தின் தரம் மற்றும் அது எவ்வாறு விளைந்தது போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். அத்துடன், சில ஸ்டிக்கர்களில் நான்கு இலக்க எண்கள் எழுதப்பட்டிருக்கும். அதாவது, 4026, 4987 போன்ற எண்கள் அதில் இருக்கும். அதன் பொருள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தி, இந்தப் பழங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது. இவற்றில் பூச்சிக் கொல்லிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பழங்கள் விலை குறைவானவை, இதை உண்பதால் உரம் மற்றும் பூச்சி மருந்துகளுடன் பழங்களை வாங்குகிறோம் என்று அர்த்தம்.
சில பழங்களில் ஐந்து இலக்க எண்கள் எழுதப்பட்டிருக்கும். அதாவது, 84131, 86532 என 8ல் தொடங்கும் இந்த பழங்கள் மரபணு மாற்றப்பட்டவை என்று அர்த்தம். இந்த பழங்கள் இயற்கையானவை அல்ல. இது பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்திய பழங்களை விட, சற்று விலை அதிகமாக இருக்கும். இதில் நன்மை, தீமை என இரண்டும் இருக்கும்.
சில பழங்களில் 9ல் தொடங்கும் 5 இலக்கக் குறியீடு இருக்கும். 93435 என எழுதப்பட்டிருந்தால், அது இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட பழங்கள் என்றும், பூச்சிக் கொல்லிகள், ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அர்த்தம். இது பாதுகாப்பான பழம் என்றாலும், விலை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும், இது ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஒவ்வொரு ஸ்டிக்கருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருந்தாலும், இதைப் பயன்படுத்தி சிலர் போலி ஸ்டிக்கர்களை தயாரித்து பழங்களில் ஒட்டி விடுகின்றனர். ஏற்றுமதி தரம், சிறந்த தரம் மற்றும் பிரீமியம் ரகம் எனக் கூறி, வாடிக்கையாளர்களிடம் அதிக பணத்தை வசூலிக்கவே இந்த மாதிரியான போலி ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, ஸ்டிக்கர் ஒட்டிய பழங்களை வாங்கும்போது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.