மஷ்ரூம்களில் மறைந்திருக்கும் மகத்தான நன்மைகள்!

காளான்
Mushroom

ஷ்ரூம் எனப்படும் காளான்களில் எண்ணற்ற வகைகள் இருப்பதுபோல், அவை நம் உடலுக்குத் தரும் ஆரோக்கிய நன்மைகளும் எண்ணற்றவைதான். காளான்களை வளர்ப்பது மிகவும் சுலபம். காளான் பலதரப்பட்ட சூழல்களிலும் இயற்கையாக வளரக்கூடியது. பல நாடுகளில் பண்ணைகளில் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்பட்டு அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியும்  செய்யப்படுகிறது. காளான்களிலுள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

ரெய்ஷி மற்றும் ஷீடேக் வகை மஷ்ரூம்களில் உள்ள பீட்டா க்ளூகன்ஸ் எனப்படும் பாலிசாச்சரைட்ஸ், ப்ரீபயோடிக்ஸ்ஸாக செயல்பட்டு நம் ஜீரண மண்டல உறுப்புகளிலுள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றன.

லயன்'ஸ் மனே(Lion's Mane) என்ற காளானில் உள்ள ஒரு வகை கூட்டுப்பொருள் மூளையில் புதுப்புது செல்கள் உருவாகவும், நரம்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்தக் காளானின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது மன அழுத்தம் மற்றும் கவலைகளைக் குறைக்க உதவி புரிகிறது.

மஷ்ரூம்களின் மீது சூரிய வெளிச்சம் அல்லது அல்ட்ரா வயலட் கதிர்கள் படும்போது, இயற்கை முறையில் வைட்டமின் Dயை உற்பத்தி செய்துகொள்ளக்கூடிய தனித்துவமான குணம் காளான்களுக்கு உண்டு. அதிகம் வெயிலில் செல்ல முடியாதவர்களுக்கு இது பயன் தரும். வைட்டமின் D எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், மனதை மகிழ்ச்சியாக வைக்கவும் உதவும்.

ஷீடேக் மற்றும் மைடேக் வகைக் காளான்களில் உள்ள கூட்டுப்பொருள்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் இரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், கொலஸ்ட்ரால் ஆக்ஸிடேஸனை தடுத்து இரத்தக் குழாய்களின் உட்புற சுவரில் பிளேக்குகளால் உண்டாகும் தடிப்பைத் தடுக்க உதவுகின்றன. இதிலுள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும் இதய ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது. மஷ்ரூம்களில் உள்ள பாலிசாச்சரைட்ஸ், இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை அதிகரிக்கச் செய்து இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
நீச்சல் காது என்றால் என்ன தெரியுமா? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை அறிவோம்!
காளான்

லயன்'ஸ் மனே மற்றும் ரெய்ஷி போன்ற மருத்துவ குணமுடைய காளான்கள் அல்ஸிமெர் மற்றும் பார்கின்சன் போன்ற நியூரோ டீஜெனரேடிவ் நோய்கள் வரும் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன. மேலும், இவை வீக்கங்களைக் குறைக்கவும், சிதைவுற்ற நரம்பு செல்களைப் புதுப்பிக்கவும் செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

ரெய்ஷி உள்ளிட்ட வேறு சில காளான்கள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஹிஸ்டமைன் குணம் கொண்டுள்ளன. இவை ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா நோய்களைக் குணப்படுத்த உதவும் பாரம்பரிய மருந்துகளின் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டு வீரர்களின் சக்தியின் அளவையும் உடலின் செயல்பாடுகளையும் அதிகரிக்கச் செய்வது

கார்டிஸெப்ஸ் வகை மஷ்ரூம்ஸ். தசைகளுக்கு சக்தியை வழங்கக்கூடிய அடினோசின் ட்ரெய்பாஸ்பேட் (Adenosine triphosphate) என்ற  பொருளின் உற்பத்திக்கு நம் உடலுக்கு சிறந்த முறையில் உதவக்கூடியது கார்டிஸெப்ஸ். இது விளையாட்டு வீரர்களின் சகிப்புத் தன்மையையும் சக்தியையும் மீட்டெடுக்க உதவும். காளான்களில் விஷத் தன்மையுடையவைகளும் உண்டு. எனவே, அதை நம்பகமான இடங்களிலிருந்து வாங்கி உபயோகிப்பது நலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com