நமது கைகளில் உள்ள இருதய ரேகை காதல் ரேகை அல்லது உணர்ச்சி ரேகை என்று அழைக்கப்படுகிறது. இது கைரேகையில் முக்கியமான ஒன்றாகும். இது ஒரு நபரின் ஆளுமை, உணர்ச்சிகள் மற்றும் வாழ்க்கைப் பாதையை வெளிப்படுத்தும். இருதய ரேகை பொதுவாக உள்ளங்கையின் மேற்புறத்தில் கிடைமட்டமாக ஆட்காட்டி விரலுக்கும் நடு விரலுக்கும் இடையில் செல்கிறது. இது ஒரு நபரின் உணர்ச்சிகரமான வாழ்க்கை அன்பு மற்றும் உறவுகளை குறிக்கும் என்று நம்பப்படுகிறது.
நீண்ட இருதய ரேகையின் ஆளுமைப் பண்புகள்: உள்ளங்கையின் குறுக்கே நீண்டிருக்கும் நீண்ட இருதய ரேகை உள்ள ஒருவர் அதிக உணர்திறன் மற்றும் பச்சாதாப உணர்வு கொண்டவர் என்பதைக் குறிக்கிறது. ஆழமான உணர்ச்சி ரீதியான தொடர்புகளை மதிப்பவர் மற்றும் பிறருக்கு மிகவும் உதவும் குணம் கொண்டவர். இவர்கள் பெரும்பாலும் வலுவான காதல் உணர்வை கொண்டிருப்பார்கள்.
குறுகிய இருதய ரேகை: இதுபோன்ற அமைப்பு உள்ளவர்கள் மிகவும் நடைமுறை சிந்தனை உடையவராகவும் சுதந்திர உணர்வு மிக்கவராகவும் இருக்கலாம். வார்த்தைகளை விட செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்த விரும்புவார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் முதன்மையான கவனம் உணர்வு சார்ந்த விஷயங்களாக இருக்காது. தொழில் அல்லது தனிப்பட்ட சாதனைகள் போன்ற பிற அம்சங்களுக்கு இவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள்.
வளைந்த இருதய ரேகை: ஆட்காட்டி விரல் அல்லது நடு விரலை நோக்கி மேல் நோக்கி வளைந்திருக்கும் இருதய ரேகை ஒருவரது இரக்கமுள்ள இயல்பைக் குறிக்கிறது. பாச உணர்வு மிக்கவர்களாகவும் உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தக் கூடியவராகவும் இருப்பார்கள். மிகுந்த உணர்ச்சி வசப்படும் இயல்புடையவராகவும் பிறரை ஈர்க்கும் திறனைக் கொண்டவர்களாகவும் பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
நேரான இருதய ரேகை: இருதய ரேகை நேராகவும் நடுவில் உள்ள புத்தி ரேகைக்கு இணையாகவும் இருந்தால் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள். எச்சரிக்கையான அணுகுமுறை உள்ளவர்கள். உணர்வுகளை விட தர்க்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். காதல் உணர்வுகள் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால், நம்பகத்தன்மை மிக்கவார்களாகவும் நேர்மையாளராகவும் இருப்பார்கள்.
உடைந்த அல்லது சங்கிலி போன்ற இருதய ரேகை: இருதய ரேகையில் முறிவுகள் அல்லது சங்கிலி போன்ற தோற்றம் உறவுகளில் உணர்ச்சிக் கொந்தளிப்பு அல்லது சிக்கலான தன்மையை குறிக்கும். காதலில் சவால்களை சந்திப்பார்கள். உணர்ச்சிகரமான ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கும். உணர்ச்சி சமநிலையை கண்டறிவதில் மிகவும் போராடுவார்கள்.
இரண்டாகப் பிரியும் இருதய ரேகை: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகளாக பிரியும் இருதய ரேகை அமைப்பு இருந்தால், வாழ்க்கை, தொழில் மற்றும் உறவுகளுக்கு சமநிலையான அணுகுமுறையை கொண்டிருப்பார்கள். சூழ்நிலையின் இரு பக்கங்களையும் பார்ப்பதில் வல்லவராகவும் அன்பில் அனுசரித்து செல்லக்கூடியவராகவும் இருப்பார்கள். அதே சமயம் சுதந்திர உணர்வுடனும் தங்கள் துணையின் தேவைகளைப் புரிந்து கொண்டு அன்பை செலுத்துவதிலும் வல்லவர்கள்.
இருதய ரேகையின் தொடக்கப் புள்ளி அமைப்பு: இருதய ரேகை ஆள்காட்டி விரலின் கீழ் தொடங்கினால் திருப்தியான காதல் வாழ்க்கையை உடையவர்கள். நடுவிரலின் கீழ் தொடங்கினால் அன்பில் அதிக சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆள்காட்டி மற்றும் நடுவிரலுக்கு இடையில் தொடங்கினால் அவர்கள் முழுக்க சுயநலவாதிகளாக இல்லாமல் தங்கள் துணையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு தருவார்கள்.
இருதய ரேகை தெளிவாகவும் ஆழமாகவும் இருந்தால் அவர்கள் வலுவான தெளிவான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள். அதைப்போல மங்கலான அல்லது தெளிவற்ற கோடு இருந்தால், மிகவும் நுட்பமான அல்லது குழப்பமான உணர்ச்சி நிலையை கொண்டிருப்பார்கள்.