பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தெரியுமா?

School teachers
School teachers
Published on

சிரியர் பணி அறப்பணி என்பது எத்தனை உண்மையோ, தற்கால ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் ஏராளம் என்பதும் உண்மை. இந்தியாவில் உள்ள பல அரசுப் பள்ளிகளில் சரியான வகுப்பறைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. போதிய நிதி இல்லாமல் பாடப்புத்தகங்கள், எழுது பொருள்கள், கற்பித்தல் கருவிகள், தொழில்நுட்ப வசதிகள் போன்றவையும், அடிப்படை வசதிகளான சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது.

அத்துடன் மாணவர்களுக்கு ஏற்றவாறு போதிய ஆசிரியர்கள் இல்லாததும் பெரும் குறை. அதேசமயத்தில் சில கிராமங்களில் மாணவர்களின் வருகையும், எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க அதிகாரத்துவ மற்றும் நிர்வாகப் பணிகளை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். அதிகப்படியான ஆவணங்களை கையாள்வதால் அவர்களது கற்பித்தல் நேரம் குறைகிறது. சில பகுதிகளில் கல்விக்கான பெற்றோரின் ஈடுபாடும் ஆதரவும் குறைவாக உள்ளதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புகின்றனர். இதனால் மாணவர்களின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

நகர்புறப் பள்ளிகளின் நிலை: நகர்ப்புறங்களில் அதிக மாணவர்கள் கொண்ட நெரிசலான வகுப்பறைகள் உள்ளன. இதனால் மாணவர்களின்பால் தனிப்பட்ட கவனம் செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த போதிய பயிற்சி ஆசிரியர்களுக்கு தரப்படுவதில்லை. தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அதிக அளவு வேலைச் சுமையும் குறைந்த ஊதியமும் தரப்படுகிறது. பலவிதமான மன அழுத்தங்களுக்கு அவர்கள் உள்ளாகிறார்கள். அவர்களும் அதிகப்படியான ஆவணங்கள் மற்றும் நிர்வாகப் பணிகளை சுமக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மேலும், மாணவர்களை முறையாகக் கண்டிக்கும் அதிகாரம் ஆசிரியர்கள் கையில் இல்லை. பல்வேறு பின்னணியில் இருந்து வரும் மாணவர்களை சமாளிப்பது சவாலாகவே உள்ளது.

காலாவதியான பாடத்திட்டம்: கடுமையான காலாவதியான பாடத்திட்டம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனச்சோர்வையே ஏற்படுத்துகிறது. புதுமையான கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்தும் ஆசிரியர்களின் திறனை கட்டுப்படுத்துகிறது. முறையான வளர்ச்சியை காட்டிலும் கற்றல் மற்றும் தேர்வு தயாரிப்புகளில் கவனம் செலுத்த அழுத்தம் தரப்படுகிறது.

ஒழுக்க சிக்கல்கள்: வகுப்பறையில் மாணவர்களின் நடத்தையை நிர்வகிப்பது மற்றும் ஒழுக்கத்தை பேணுவது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. இதற்கு போதிய அளவு ஆதரவு அமைப்புகள் பள்ளிகளில் இருப்பதில்லை அதிகப் பணிச்சுமை. ஆதரவின்மை சவாலான பணி என ஆசிரியர்கள் அடிக்கடி மன அழுத்தம் மற்றும் சோர்வை எதிர்கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
வளரும் குழந்தைகளைப் பேச பழக்குவது எப்படி?
School teachers

உணர்வு ரீதியான சிக்கல்கள்: ஆசிரியர்களுக்கு நாள்பட்ட மன அழுத்தம், உணர்ச்சி ரீதியான சோர்வு, மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெறாத மரியாதை மற்றும் ஒழுக்கக் குறைவு போன்றவை மிகுந்த மனச்சோர்வை உண்டாக்குகிறது. இது ஆசிரியர்களின் ஒட்டுமொத்த மனநிலையையும் ஆற்றல் நிலைகளையும் பாதிக்கிறது. இதனால் ஒழுங்கற்ற தூக்க முறைகள் அல்லது தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது.

வேலை - வாழ்க்கை சமநிலையின்மை: பாடம் மற்றும் கற்பித்தலைத் திட்டமிடல், நிர்வாகப் பணிகள், தேர்வுத்தாள்கள் திருத்தம் உள்ளிட்ட பணிகளை அடிக்கடி வீட்டிற்கு கொண்டு வரும் ஆசிரியர்களுக்கு ஆரோக்கியமான வேலை வாழ்க்கை சமநிலையை நிர்வகிப்பது சவாலாக இருக்கிறது. இது மன அழுத்தத்திற்கு வித்திட்டு தனிப்பட்ட உறவுகளையும் பாதிக்கும்.

தற்காலிக அல்லது ஒப்பந்த நிலைகளில் உள்ள ஆசிரியர்கள் வேலை பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறார்கள். இது அவர்களின் எதிர்கால வேலை மற்றும் நிதி ஸ்திரத்தன்மை பற்றிய கவலைகளை உருவாக்குகிறது.

ஆசிரியர்கள் வருங்கால தூண்களை உருவாக்கும் முக்கியமான பணிகளில் உள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு கல்வி முறை மேம்படுத்தப்பட்டு, பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களின் மேம்பாட்டுக்காக சில சட்ட திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com