வளர்ந்து வரும் குழந்தைகளை எப்படி பேச பழக்குவது என்பது குறித்த சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். இதுகுறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை என்றே கூறலாம். அவர்களுக்கு எப்போது என்ன கற்றுத்தர வேண்டும், எந்த வயதில் எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும், எந்த வயதில் எந்த பழக்கங்களையெல்லாம் கற்றுத்தர வேண்டும் என்றுத் தெரிந்து கற்றுத்தருவதே கலையாகும். அதாவது சாதாரண கல்லை கற்சிலையாக மாற்றும் கைவண்ணம் பெற்றோர்களுக்கே உள்ளது. அந்தவகையில் குழந்தைகள் வாய்த்திறந்து பேச எப்படி கற்றுத்தருவது என்று பார்ப்போம்.
1. குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று பொம்மைகள். ஆகையால், அவற்றின் மூலமாக கற்றுத்தர செய்யுங்கள். அதாவது ஒரு பொம்மைக் கொடுத்து அதன் பெயர், அது என்ன செய்யும், அதை குழந்தைகள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கலாம். இதனை அவர்கள் கவனித்து கேட்டு, பின் புரிந்துக்கொண்டு பேச முயற்சிப்பார்கள்.
2. பின் உறவுமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதேபோல், விலங்குகள் பெயர், மரங்கள் பெயர், பழத்தின் பெயர் என எது கையில் இருந்தாலும், அதைப் பற்றி நீங்கள் சொல்லித்தரலாம். குறிப்பாக அதன் பெயர்களை சொல்லித்தரலாம்.
3. மிகவும் முக்கியமான ஒரு விஷயம் தினமும் ஒரு கதைப் புத்தகத்தை வைத்து கதை சொல்ல வேண்டும். இதன்மூலம் கதைகளில் வரும் ஏராளமான வார்த்தைகளை அவர்கள் கேட்கக்கூடும். நிறைய வார்த்தைகள் குழந்தைகளுக்கு மறந்துவிடும் என்றாலும், தினமும் கதைக் கூறினால், குறைந்தபட்சம் சின்ன சின்ன ஓரிரண்டு வார்த்தைகளாவது மனதில் பதிந்து அதைப் பயன்படுத்த தொடங்குவார்கள்.
4. குழந்தைகளிடம் பேசினால் என்ன புரிய போகிறது என்று பேசாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள். அவர்களிடம் எப்போதும் எதாவது பேசிக்கொண்டே இருங்கள். நல்ல விஷயங்களை, வாழ்க்கை நடைமுறைகளை பற்றிப் பேசுங்கள்.
5. சிறு வயதிலிருந்தே நம்பிக்கை வார்த்தைகளை பற்றி சொல்லித் தாருங்கள். இது அவர்களுக்கும் அதே பழக்கத்தைக் கொடுக்கும்.
6. அதேபோல், குழந்தைகளை வீட்டில் வைத்து முடக்கி விடாதீர்கள். வெளியில் அழைத்துச் சென்று இயற்கையோடு உறவாட விடுங்கள். அது அவர்களின் மனதை லேசாக்கி, மேலும் உங்கள் பயிற்சியை சுலபமாக்கும். அதேபோல், பொது இடங்களில் சிறு குழந்தைகள் பேசுவதைப் பார்த்து, உங்கள் குழந்தையும் சீக்கிரம் பேச ஆசைப்படும்.
இந்த வழிகளைப் பின்பற்றி குழந்தைகளுக்கு பேசக் கற்றுக்கொடுங்கள். விரைவாக அழகாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.