
வெப்பம் அதிகமிருக்கும் கோடைக் காலங்களில் குடியிருக்கும் வீடுகளில் தீப்பற்றி விபத்து நேரும் சம்பவங்கள் அதிகரிப்பதுண்டு. இதற்கான காரணங்களையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
புதுப்பிக்கப்படாத மிகப் பழைமையான வயர்கள், வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் தரமற்ற மின் சாதனைங்கள் மற்றும் அதிகப்படியான மின் அழுத்தம் போன்றவையே வீடுகளில் தீ விபத்து ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாகும். குளிர்விக்கச் செய்யும் மின் விசிறிகள், ஏர் கண்டிஷனர் போன்ற உபகரணங்கள் வீட்டிலுள்ள மின் சர்க்யூட்கள் மீது அதிக அழுத்தத்தை உண்டுபண்ணக்கூடும். அதிலும், மேம்படுத்தப்படாத பழைய வயர்கள் உள்ள பழங்கால வீடுகள் அதிக பாதிப்புக்குள்ளாகும். சர்க்யூட்கள் மீது அழுத்தம் அதிகரிக்கும்போது, வெப்பப் அதிகரிக்கும். ஷார்ட் சர்க்யூட்டாகி தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். இம்மாதிரி மறைந்திருக்கும் அபாயங்களை உணராமலும், தங்கள் வீட்டு மின் இணைப்பின் தாங்கும் திறன் தெரியாமலும் வீட்டில் மேலும் மேலும் மின் சாதனங்களை வாங்கிக் குவித்து ஆபத்தை வலிய வரவழைத்துக் கொள்கின்றனர் மக்கள்.
கோடைக்காலங்களில் மின்சாரத்தால் வேலை செய்யும் ஏர் கண்டிஷனர், கூலர், ஃபிரிட்ஜ் மற்றும் மின் விசிறிகள் போன்றவற்றை அனைவரும் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்குவர். இவை அனைத்தின் அழுத்தத்தையும் தாங்கும் வகையில் அமைக்கப்படாத இணைப்புகளில் வயர்கள் சூடாகி, மின்காப்பு உபகரணம் (Insulation) எரிந்துவிடும். பின் ஷார்ட் சர்க்யூட் உண்டாகி நெருப்பு பற்றிக்கொள்ளும். புதுப்புது மின் சாதனைங்களை வாங்கி வந்து பழைய வயர்களுடன் இணைப்பதே விபத்துக்குக் காரணியாகிறது.
தீ விபத்தைத் தடுக்க சில ஆலோசனைகள்:
1. உங்கள் வீடு கட்டப்பட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டால், உரிமம் பெற்ற எலக்ட்ரீஷியனைக் கொண்டு, நவீன மின் சாதனங்களின் அழுத்தத்தை தாங்கும் வகையில் வயர்களைப் புதுப்பித்தல் நலம்.
2. ஷார்ட் சர்க்யூட் உண்டாவதைத் தடுக்க, தரமான தானியங்கி MCB (Miniature Circuit Breaker) வாங்கிப் பொருத்துவது விபத்தைத் தடுக்க உதவும்.
3. வீட்டில் எந்த இடத்தில் மெயின் ஸ்விட்ச் அமைந்துள்ளது என்பதை வீட்டிலுள்ள அனைவரும் அறிந்திருப்பது அவசியம். சிறிய அளவில் பிரச்னை உண்டாகும்போது மெயின் ஸ்விட்ச்சை ஆஃப் பண்ணி, வீண் விரயங்களைத் தடுக்கலாம்.
4. கிச்சனில் LPG சிலிண்டர் அருகில் மிக்ஸி, டோஸ்டெர், மைக்ரோவேவ் போன்றவற்றை வைக்காதிருப்பது நலம். ஏனெனில், ஷார்ட் சர்க்யூட் உண்டானால் சிலிண்டர் வெடிப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
5. வீட்டிற்குள்ளிருந்து புகை பிடிப்பதைத் தவிர்ப்பது நலம்.
6. இரண்டு வகையான உலோகத்தால் அமைந்த வயர்களை இணைப்பது (உ.ம்.: காப்பர் மற்றும் அலுமினியம்), இணைப்பின் தரத்தில் குறை உண்டுபண்ணி மின் கடத்தலிலும் குறைபாட்டை உண்டாக்கும். இதனால் நெருப்பு பற்றும் அபாயம் உண்டாகும்.
7. உயர் அழுத்த மின் சாதனங்களை குறிப்பிட்ட இடைவெளிகளில் சர்வீஸ் செய்வது அவசியம். மின் தாக்கத்தால் உண்டாகும் நெருப்பு தடுக்கக் கூடியதே. தொடர் கண்காணிப்பு, நல்ல எலக்ட்ரிகல் கண்ட்ரோல், பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றினால் வீடுகளை இம்மாதிரி நெருப்புப் பற்றும் ஆபத்திலிருந்து காப்பாற்றலாம்.