
குழந்தைகள் என்ன பேசினாலும் அதை அலட்சியப்படுத்துவது பெரும்பாலான பெற்றோர்களின் மனப்போக்காக இருக்கிறது. அது மிகப்பெரிய தவறு. அவர்கள் சொல்லும் விஷயம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு அது பெரிய விஷயமாக இருக்கும். குழந்தைகளின் வார்த்தைகளை காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள், அவர்கள் மீது அன்பு காட்டுங்கள்.
குழந்தைகள் சிரித்தால் அவர்களுடன் சிரிக்க வேண்டும், அழுதால் ‘ஏன் அழுகிறாய்?’ என்று அக்கறையோடு காரணம் கேட்க வேண்டும். அதற்கு மாறாக, குழந்தைகளை திட்டுவதோ அல்லது அடிப்பதோ கூடாது. குழந்தைகளிடம் அன்பு காட்டுவதன் மூலம்தான் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்க முடியும். அதைத் தவிர்த்து அவர்களை அலட்சியப்படுத்தவோ, காயப்படுத்தவோ செய்யாதீர்கள். இதனால் அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகக் காரணமாகிவிடும்.
சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்: குழந்தைகள் பகட்டாகவோ அல்லது ஆடம்பரமாகவோ வாழ வழி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை அவ்வப்போது நிறைவேற்றுங்கள். எல்லாவற்றிற்கும் முடியாது என்று சொல்லாதீர்கள். முளைக்கும்போதே அவர்களின் ஆசைகளின் மீது வெந்நீர் ஊற்றிவிட்டு, உங்களின் மகிழ்ச்சியை ஆண்டவனிடமும் வேறு எங்கோ தேட வேண்டாம். குழந்தைகளிடம்தான் அது நிச்சயம் கிடைக்கும். நாம் குழந்தையாக இருந்தபோது நமக்குக் கிடைக்காத சந்தோஷங்களை, நமது குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்து அந்த உணர்வில் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
உற்சாகப்படுத்துங்கள்: குழந்தைகளை ஒருபோதும் அடுத்தவர் முன்பு திட்டவோ, அடிக்கவோ கூடாது. அது அவர்களுக்குள் ஆறாத வலியை தந்துவிடும். அதோடு, அவர்களை தாழ்வு மனப்பான்மையிலும் கொண்டு போய் விடும்.
குழந்தைகளை மற்றவர்கள் முன்பு பெருமையாகப் பேச வேண்டும். குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இது பல நன்மைகளைத் தரும். இது குழந்தைகளுக்கு நல்ல ஊக்க மருந்தாக அமையும்.
மனதார பாராட்டுங்கள்: குழந்தைகள் தங்களை எல்லோரும் பாராட்டுவதைத்தான் பெரிதும் விரும்புவர். பெரியவர்களே இப்படி எண்ணும்போது. எதிர்பார்க்கும்போது குழந்தைகள் பற்றி கேட்க வேண்டியது இல்லை. அடுத்தவர் முன்பு தலை குனிவதை குழந்தைகள் விரும்புவதில்லை. குழந்தைகள் செய்யும் சிறு சிறு நல்ல செயல்களுக்காக அவர்களை மனதாரப் பாராட்ட வேண்டும். அவர்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் அடுத்தவர்கள் இல்லாத தனிமையான நேரத்தில் அவர்களிடம் அதை அன்பாக எடுத்து கூறி திருத்த வேண்டும்.
அதேசமயம். அவர்களின் நல்ல செயல்களுக்குப் பாராட்டாமல் எப்போதும் தவறுகளை மட்டும் கண்டுபிடித்துக் குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. நான்கைந்து முறை குழந்தைகளைப் பாராட்டினால் ஒரு முறை அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டலாம். இதனால் குழந்தைகள் தங்களின் பிழைகளை உணர்ந்து திருத்திக் கொள்வார்கள்.
ஊக்குவியுங்கள்: மற்ற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்து, நமது குழந்தைகள் முதல் ரேங் எடுக்கவில்லை என்று அடிப்பதாலோ அல்லது திட்டுவதாலோ ஒரு பயனும் கிடைத்து விடாது. இதனால் குழந்தைகளுக்கு மன உளைச்சல், பயம், விரக்தி, எரிச்சல்தான் வரும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் குழந்தை எதில் தனித்துவம் பெற்று உள்ளது என்பதைக் கண்டறிந்து அதை ஊக்குவிக்க வேண்டும்.
வெற்றிகளையும் சந்தோஷங்களையும் மட்டுமில்லை, தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்கவும் அவர்களைப் பழக்க வேண்டும். தோல்விகளும், வெற்றிகளும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.
உறுதிமொழியை நிறைவேற்றுங்கள்: குழந்தைகளிடம் நீங்கள் கொடுக்கும் உறுதிமொழியை நிறைவேற்றுங்கள். அது மிக மிக இன்றியமையாதது. குழந்தைகளுக்கு உங்கள் சொற்களை மீறி நம்பிக்கை எழவும் உங்களிடம் குழந்தைகள் பாதுகாப்பை உணரவும் அது வழி வகுக்கும். ‘ஒழுங்கா சாப்பிட்டால் கடைக்குக் கூட்டிட்டு போறேன், அமைதியாக இருந்தால் சாக்லேட் வாங்கித் தரேன்’ என எதைச் சொன்னாலும் அதனை நிறைவேற்றுங்கள். இதனால் குழந்தைகளும் உங்கள் மீது நம்பிக்கைக் கொள்ளும்.
கணவன், மனைவி இருவரும் குழந்தையை ஒரே பாதையில் இட்டுச் செல்ல வேண்டும். ஆளுக்கு ஒரு கருத்தை மனதில் வைத்துக்கொண்டு குழந்தையை தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப ஆளுக்கு ஒரு பாதையில் அழைத்துச் செல்ல நினைக்கக் கூடாது. இது குழந்தையின் மனதை குழப்புவதோடு, குடும்பத்தில் அமைதியை காணாமல் போகச் செய்து விடும். இதனால் குழந்தைகளின் மனம் அறிந்து பெற்றோர்கள் செயல்பட வேண்டும்.