பெண்களுக்கு அழகு சேர்க்கக்கூடிய நகைகள் நிறைய இருந்தாலும், மூக்குத்திக்கு எப்போதும் பெண்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உண்டு. முற்காலத்தில் திருமணமான பெண்களே மூக்குத்தி அணிவதை வழக்கமாக வைத்திருந்தனர். பின்பு நாகரிக வளர்ச்சியில் மூக்குத்தி அணிவது பேஷனாகவே மாறிவிட்டது.
மூக்கில் துளையிட்டு இதை அணிவதால் இதற்கு மூக்குத்தி என்று பெயர் வந்தது. மூக்கில் தங்க மூக்குத்தி அணிவதால் உடல் வெப்பத்தை அது கிரகித்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. மூக்குத்தியை பற்றி சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. 17ம் நூற்றாண்டுக்கு பிறகே மூக்குத்தி அணியும் பழக்கம் வந்தது. மதுரை மீனாட்சி அம்மனுக்கும், குமரியம்மனுக்கும் மூக்குத்தி பிற்காலத்திலேயே அணிவிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றாற்போல் மூக்குத்தியின் பெயர் வேறுபடுகிறது. ராஜஸ்தானில் இதன் பெயர் நாதையா என்றும், தமிழகத்தில் மூக்குத்தி, ஜம்மு காஷ்மீரில் நாத் மற்றும் நாக், மேற்கு வங்கத்தில் புல்லாக்கு, உத்திர பிரதேசத்தில் முர்க்கிலா என இது அழைக்கப்படுகிறது.
பெண்கள் மூக்குத்தி அணிவதில், சிலர் இடப்பக்கமும் இன்னும் சிலர் வலப்பக்கமும் அணிவார்கள். தென் இந்தியர்கள் வலப்பக்கமும், வடஇந்தியர்கள் இடப்பக்கமும் அணிவார்கள். முன்பெல்லாம் ஆண்களும் மூக்குத்தி அணிவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். ஆண்கள் வலப்பக்கமும், பெண்கள் இடப்பக்கமும் மூக்குத்தி அணிவது நல்லதெனக் கூறப்படுகிறது. இடப்பக்கம் மூக்குத்தி அணிவதால் வடப்பக்க மூளை நன்றாக வேலை செய்யும். பெண்கள் இடப்பக்கத்தில் மூக்குத்தி குத்திக்கொள்வதால் இனப்பெருக்க உறுப்புகள் நன்றாக வேலை செய்யும், கர்ப்பகாலத்தில் எளிதாக இருக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
தற்போது மூக்குத்தி பேஷனாகி விட்டதால் துளையிடாமலேயே அணிந்துகொள்வது போல மூக்குத்திகள் வந்துவிட்டன. வெளிநாட்டவர்களும் மூக்கு குத்தி கொள்வதில் இப்போதெல்லாம் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டனர். தற்போது மூக்கு குத்திக் கொள்வதை ப்யூட்டி பார்லரிலேயே குத்தி விடுகிறார்கள். தற்போது டீன் ஏஜ் பெண்களும் மூக்கு குத்திக்கொள்ள ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
மூக்குத்தி ஒற்றைக் கல் பதித்தது என்று ஆரம்பித்து தங்கம், வைரம், வைடூரியம் என்று எல்லா டிசைன்களிலேயும் மற்றும் விலையிலும் இருக்கிறது. வளையம் போன்ற மூக்குத்தியை முத்துக்கள் கோர்க்கப்பட்ட சங்கிலியால் இணைத்து மட்டிக்கொள்வது வட இந்தியாவில் மிகவும் பிரபலமான மூக்குத்தியாகும்.
பெண்கள் மூக்குத்தி அணிவதில் ஆர்வம் காட்டினாலும் அதனை சுகாதாரமாக பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். பெரும்பாலும் தங்கத்தில் மூக்குத்தியை தேர்வு செய்வதே நல்லது. மற்றவையால் அலர்ஜி வர வாய்ப்புள்ளது. மூக்கு குத்தியதும் அதை தொட்டுப் பார்த்துக்கொண்டே இருக்கக் கூடாது. இதனால் நோய்தொற்று வர வாய்ப்புள்ளது. பெண்கள் தாங்கள் பயன்படுத்தும் மூக்குத்தியை அவ்வப்போது உப்பு தண்ணீரில் போட்டு அழுக்குகளை நீக்கி சுத்தமாக அணிந்து கொள்வது நல்லதாகும்.