சாதாரணமாக வாசல் படியில் உட்கார்ந்தாலும், தலைவைத்து படுத்தாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள், ‘இது மாதிரி உட்கார கூடாது’ என்று சொல்லித் தருவார்கள். மீண்டும் வாசற்படியில் அமர்ந்தால், 'வயிறு பெருக்கும் எழுந்திரு’ என்பார்கள். தலை வைத்துப் படுத்தால் 'சாமி அழுத்தும்' என்று சொல்வார்கள். அதனால் வாசற்படியில் எக்காரனத்தைக் கொண்டும் அமரவோ, படுக்கவோ விட மாட்டார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்பதன் காரணத்தை இந்தப் பதிவில் காண்போம்.
வாசற்படியில் இருக்கும் சிறுவர்களை பாட்டிமார்கள் விரட்டி அடிப்பதுண்டு. வாசற்படியில் அமர்ந்தால் வாசல் வழியாக வரும் போகும் நபர்கள் தட்டிவிழும் சாத்தியம் உள்ளதாலே இவ்வாறு கூறுகின்றனர் என்று கருதி வருகின்றோம். ஆனால், வாசல்படியிலோ நிலைப்படியிலோ இருக்கக் கூடாது என்பதன் சரியான காரணம் என்னவென்றால், எதிர்சக்திகள் நம் உடலில் புகுந்து செல்லும். எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் என்பதற்காகவே அவ்வாறு கூறி வந்தனர். அதேபோல், வாசற்படிக்கு உட்பக்கமும், வெளிப்பக்கமும் நின்று எதையும் வாங்கவும் கொடுக்கவும் கூடாது என்பதற்கும் சரியான காரணமும் இதுவேதான்.
வாசல் நிலையின் நாலு பக்கங்களும் சமசதுர வடிவில் உள்ளதானதால் நெகட்டிவ் சக்தி வெளி வருகின்றது. வாஸ்து சாஸ்திரத்தை முக முக்கியமாகக் கருதும் சீன மக்கள் தங்கள் வீடுகளில் அமைக்கும் வாசல்கள் மற்றும் ஜன்னல்களின் நிலைகள் போன்றவற்றை வேறு வடிவத்தில் மேல் பாகம் நோக்கி வளைந்திருக்கும்படி அமைத்திருப்பதைக் காணலாம். அதாவது ஆர்ச் ரூபத்தில் அமைக்கின்றனர். இது நெகட்டிவ் சக்திகளை தவிர்ப்பதற்காகவே. நமது கோயில் வாசல்களிலும் இவ்விதமே அமைத்துள்ளனர்.
வாசற்படியில் தலை வைத்துத் தூங்கினால் இவ்வாறு பரவும் நெகட்டிவ் சக்திகள் நமது மூளையை பாதிக்கும் என்று கண்டறிந்துள்ளனர். ஆதலால் வாசற்படியில் தலை வைத்துப் படுப்பதோ, அதில் உட்கார்ந்து இருப்பதோ, அங்கு நின்று எதையும் கொடுத்து, வாங்குவதோ தடை செய்யப்படுகிறது.