வியர்வை நாற்றத்தை மறைக்க நிறைய பேர் வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறார்கள். அதுபோல, முகம் பளிச்சென்று தெரிய வேண்டும், பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக லோஷன்கள், கிரீம்களை உபயோகிக்கிறார்கள். இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி அவர்கள் அறிவதில்லை.
நாம் உபயோகிக்கும் பெர்ஃப்யூம் எப்போதும் மிகவும் மெல்லிய நறுமணம் கொண்டதாக, இதமான நறுமணமாக இருக்க வேண்டியது அவசியம். சிலர் தொலைவில் வரும்போதே அவர்கள் அடித்துக் கொண்டு வரும் பெர்ஃப்யூம் வாசனை மூச்சை திணறடிக்கும் அளவுக்குக் காட்டமாக இருக்கிறது. இதை சிலர் பெருமையாக நினைப்பதுதான் பரிதாபம். இதனால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்ப்போமா?
மிகுந்த வாசனையுடைய பெர்ஃப்யூம்களை உபயோகிப்பதால் அல்லது அந்த வாசனையை நுகர்வதால் கடுமையான தலைவலி, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆஸ்துமா இருப்பவர்களுக்கு நிலைமை இன்னும் மோசம்.
வாசனை திரவியங்களில் கலந்துள்ள ரசாயனங்கள் மிகுந்த ஆபத்தை விளைவிப்பவை. அதிலும் பேருந்து மற்றும் கார் பயணங்களில் அடைத்து வைக்கப்பட்ட அல்லது மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் இந்த வாசனை பலரையும் பாதிக்கக்கூடும். அவர்களுக்கு உடனே தலைவலியையும் வாந்தியையும் தோற்றுவிக்கும். எனவே, இதுபோல மிகுந்த வாசனை உள்ள பெர்ஃப்யூம்களை வாங்கக் கூடாது அது சருமத்துக்கும் கெடுதல்.
வாசமிகு கிரீம்கள், லோஷன்கள் உபயோகிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்: நாம் உபயோகிக்கும் லோஷன்கள் மற்றும் கிரீம்கள் போன்ற அழகு சாதன பொருட்களில் ஏராளமான ரசாயனங்கள் கலந்து இருக்கின்றன. அதிலும் அதிக வாசனை உள்ள கிரீம்களும் லோஷன்களும் இன்னும் அதிகளவு ரசாயனத்தை கொண்டு இருப்பதால் அவை உடலுக்கு தீமையை விளைவிக்கின்றன.
1. நமது சருமம் மிகவும் மென்மையானது. அதிக வாசனையுள்ள கிரீம்களை உபயோகிக்கும்போது சருமம் சிவந்து அரிப்பும் எரிச்சலும் உண்டாகும்.
2. அந்த அதீத வாசனை தும்மல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற விளைவுகளை உண்டாக்கும்.
3. இவற்றைப் பூசிக்கொண்டு வெளியே செல்லும்போது சூரிய ஒளியுடன் வினைபுரிந்து சருமத்தை கருப்பாக்கி விடும். இதனால் சருமம் சிவந்து எரிச்சல் அடையத் தொடங்கும்.
4. சருமத்தில் இயற்கையாகப் படிந்துள்ள எண்ணெயை பாதிக்கும். அதனுடைய அளவைக் குறைத்து சருமத்தை வறண்டு போகச் செய்யும்.
அழகு சாதனப் பொருட்கள் வாங்கும்போதும் பயன்படுத்தும்போதும் கவனிக்க வேண்டியவை:
1. சோப்பு, அழகு சாதனப் பொருட்கள், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் அல்லது சோப்பு, ஈரமான டிஷ்யூ பேப்பர்களை வாங்கும்போது வாசனையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்த லேபிளில் பிராக்ரன்ஸ் ஃப்ரீ என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
2. முகம், கழுத்து, கை, கால்கள் போன்றவற்றில் கிரீம்கள், லோஷன்களை தடவிய பின்பு குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவை சரும பாதிப்புக்கு வித்திடும்.
3. பெர்ஃப்யூம் வேறு, டியோடரண்ட் வேறு என்று அறிந்துகொள்ள வேண்டும். டியோடரண்ட்டை உடலில் நேரடியாகத் தடவிக் கொள்ளலாம். ஆனால், பெர்ஃப்யூமை உடையின் மேல்தான் தெளிக்க வேண்டும். லேசாக ஸ்பிரே செய்து கொண்டால் போதும். அந்த வாசனை உங்களால் மட்டும் உணர முடிந்ததாக இருக்க வேண்டுமே தவிர, பக்கத்தில் இருக்கும் நான்கு பேருக்கு அந்த வாசனை பரவக்கூடாது. அப்படி என்றால் நீங்கள் அதிகமாக உபயோகிக்கிறீர்கள் என்று பொருள்.