3000 சதுர அடியாக இருந்த வீட்டு மனை 600 சதுர அடியாகக் குறைந்த கதை தெரியுமா?

House on small plot of land
House on small plot of land
Published on

முற்காலத்தில் வீடுகள் ஒன்றை ஒன்று ஒட்டியவாறு நாற்பது அடி அகலத்திலும் எண்பது அடி நீளத்திலும் இடைவெளியின்றி அமைந்திருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தோட்டம் இருக்கும். இதற்கு ‘புழக்கடை’ என்று பெயர். பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கும். நான்கு அல்லது ஐந்து குடித்தனக்காரர்கள் இருப்பார்கள். இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்தனர் அக்கால மக்கள். வீட்டு வாடகையும் மிகவும் குறைவாகவே இருக்கும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாத சூழல் அது. எண்பதுகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல அதிகரித்த ஜனநெருக்கடி மிகுந்த நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து விடுபட மக்கள் நினைத்தன் காரணமாக எண்பதாம் ஆண்டுகளுக்கு பின்னர் புறநகர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தோன்றின.

புறநகர்ப் பகுதிகளில் லேஅவுட்டுகள் அமைத்து வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டன. தொடக்கத்தில் ஒரு வீட்டுமனையின் அளவு ஏழு சென்ட் ஆக இருந்தது. 435 சதுர அடிகள் ஒரு சென்ட் ஆகும். தோராயமாக மூவாயிரம் சதுர அடி என்பது ஒரு மனையாகக் கருதப்பட்டது.

சில ஆண்டுகள் கழித்து ஐந்தரை சென்ட் அதாவது 2400 சதுர அடி ஒரு வீட்டு மனை என விற்பனை செய்யப்பட்டது. இத்தகைய வீட்டு மனைகளை வாங்கி நான்கு புறங்களிலும் முறையாக இடம் விட்டு நடுவில் வீடுகள் கட்டப்பட்டன. இதனால் அக்காலத்தில் வீடுகள் காற்றோட்டமாக இருந்தன.

நகர்ப்புறங்களில் வீட்டுமனைகளின் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. அனைவராலும் வீட்டு மனை வாங்க முடியாத சூழ்நிலை உருவானது. இதன் பின்னர் ஒரு வீட்டு மனை என்பது முக்கால் கிரவுண்ட் அதாவது 1800 சதுர அடி என்றானது.

மனையின் விலையும் கணிசமாக உயர்ந்துகொண்டேதான் இருந்தது. இந்த சூழ்நிலையில் அனைவரும் வீட்டு மனைகளை வாங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் 1200 சதுர அடி அளவில் வீட்டு மனைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தன. இந்த சூழ்நிலையில் ஒரு கிரவுண்டிலிருந்து அரை கிரவுண்டாக வீட்டு மனையின் அளவு குறைந்தது. இதில் 20 அடி அகலம் 60 அடி நீளம் என்று சில மனைகளும் 30 அடி அகலம் 40 அடி நீளம் என்ற அளவில் சில மனைகளும் பங்கிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. 20 அடி அகலத்தில் வீடு கட்டுவது என்பது சிரமமான காரியமாக ஆனது. 40 அடி அகலத்தில் வீடுகளை ஓரளவிற்கு வசதியாகக் கட்ட முடிந்தது.

இதையும் படியுங்கள்:
கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட பின்பற்ற வேண்டிய 8 வழிமுறைகள்!
House on small plot of land

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பல பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. நகரப் பகுதிகளில் வீட்டு வாடகை உயர்வும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். இரண்டு பெட் ரூம்களைக் கொண்ட ஒரு வீட்டிற்கு பத்தாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் ரூபாய் வரை மாத வாடகை செலுத்த வேண்டியிருந்தது. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பல சிக்கல்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இன்றளவும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ‘எலி வளையானாலும் தனி வளை வேண்டும்’ என்ற பழமொழிக்கேற்ப வாடகை வீட்டில் வசிப்போர் சிறியதாக இருந்தாலும் சொந்த வீட்டை வாங்கி அதில் நிம்மதியாக வசிக்க வேண்டும் என்று எண்ணத் தொடங்கினர். சமீப காலமாக இந்த எண்ணம் மக்கள் மனதில் அதிக அளவில் எழுந்துள்ளது.

சென்னை முதலான நகரப்பகுதிகளில் மனை வாங்குவது என்பது மிகவும் கஷ்டமான காரியமாகும். ஒரு சதுர அடி ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை இடத்திற்கேற்றாற் போல விற்பனை ஆகிறது. இதை கருத்தில் கொண்டு வீட்டு மனை விற்பனையாளர்கள் ஒரு வீட்டு மனையினை 600 சதுர அடி அளவில் விற்கத் தொடங்கினர். நடுத்தர மக்கள் 600 சதுர அடி வீட்டு மனையினை சிரமப்பட்டாவது வாங்க முடிந்தது.

தொடக்கத்தில் மூவாயிரம் சதுர அடி மனை ஒரு கிரவுண்ட் என்றிருந்த நிலைமை மாறி, தற்போது அறுநூறு சதுர அடி மனை ஒரு கிரவுண்ட் என்றாகிவிட்டது. அறுநூறு சதுர அடியில் வில்லா வீடுகளையும் கட்டி விற்கத் தொடங்கியுள்ளனர். இன்னும் என்னென்ன மாற்றங்கள் வருமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com