கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட பின்பற்ற வேண்டிய 8 வழிமுறைகள்!
நம் உடலில் கல்லீரலானது நச்சுக்களை வெளியேற்றுவது, ஹார்மோன் உற்பத்தி, பித்தநீர் உற்பத்தி, சிறப்பான செரிமானம் போன்ற பலவகையான செயல்பாடுகளுக்கும் உதவக்கூடியது. ஒருவர் தொடர்ந்து ஆல்கஹால் உட்கொள்ளும்போது கல்லீரல் சிதைவுற்று உயிருக்கே ஆபத்து வரும் நிலை உருவாகும். ஆல்கஹால் சிறிதும் சேர்த்துக் கொள்ளாதவர்களுக்கும் கல்லீரல் நோய் வருவதுண்டு. இதை, 'நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் டிசீஸ்' (Non-Alcoholic Fatty Liver Disease) என்பர். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு மற்றும் சர்க்கரை போன்றவை கல்லீரல் மீது படிந்து, நாளடைவில் இந்நோய் உண்டாகும் வாய்ப்பை உருவாக்கி விடும். இதைத் தடுப்பதற்கு நாம் பின்பற்ற வேண்டிய 8 வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. சரிவிகித உணவு: உட்கொள்ளும் உணவுடன் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் புரோட்டீன், பருப்பு வகைகள், மீன் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நலம். சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ், சர்க்கரை மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு சேர்ந்த உணவுகள், சரியாக வேக வைக்கப்படாத ஷெல் பிஷ் போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை.
2. எடை பராமரிப்பு: உடல் பருமன் NAFLD வர ஒரு முக்கியக் காரணமாகும். எனவே ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவு உட்கொள்ளுதல் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை சமநிலையில் வைத்துப் பராமரித்து வருவது அவசியம்.
3. உடற்பயிற்சி: உடல் உழைப்பைக் கொடுத்து செய்ய வேண்டிய செயல்களை ஈடுபாட்டுடன் செய்வது ட்ரைகிளிசெரைட்களை எரிக்க உதவும். குறைந்தபட்சம் ஒரு வாரத்தில் 150 நிமிடம் மிதமான அளவிலான ஏரோபிக் பயிற்சி செய்வது நன்மை தரும்.
4. ஆல்கஹாலைத் தவிர்த்தல்: உட்கொள்ளும் ஆல்கஹாலின் அளவை ஒரு நாளைக்கு இரண்டு முறையோடு நிறுத்திக் கொண்டால் கல்லீரல் சிதைவடைவதைத் தவிர்க்கலாம். மேலும், பூச்சிகளை அழிக்க உபயோகப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உடலுக்குள் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.
5. பாதுகாப்பு: ஹெபடைடிஸ் B & C (மஞ்சள் காமாலை) நீண்ட காலம் நீடிக்கும் கல்லீரல் நோய்க்கு வழிகோலும். தனிநபர் சுகாதாரத்தைப் பேண ஒருவர் உபயோகிக்கும் ரேசர், டூத் பிரஷ் போன்றவற்றை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாதிருத்தல் நலம்.
6. தடுப்பூசி: ஹெபடைடிஸ் B & C நோய்க்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது தொற்றுக் கிருமிகளிலிருந்து கல்லீரலைக் காக்க உதவும்.
7. தேவையற்ற மருந்துகள்: சில மருந்துகளை தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது அல்லது ஆல்கஹாலுடன் சேர்த்து உட்கொள்வது கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். மருத்துவரைக் கலந்தாலோசித்து அவரின் பரிந்துரைப்படி மருத்துவ உதவியை மேற்கொள்வது சிறந்தது.
8. முறையான ஹெல்த் செக்கப்: குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரின் பரிந்துரையுடன் ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்துக் கொண்டால் கல்லீரலில் கோளாறு இருந்தால் முன்கூட்டியே மருந்துகள் எடுத்துக்கொள்ள வசதியாகும். உடல் பருமன் அல்லது பரம்பரையாக வரும் ஜெனட்டிக் குறைபாடு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுக்கவேண்டிய டெஸ்ட்களை எடுத்து மருத்துவத்தை மேற்கொள்ளவும் வசதிப்படும்.
மேற்கூறிய வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடித்து வந்தால் கல்லீரலை காப்பது மிகவும் சுலபம்தான்.