பருவ வயதை அடைந்து விட்ட பிள்ளைகளை கவனிப்பதில் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளர் இளம் பருவத்தில் அவர்களுக்கு தோன்றும் சில கருத்துகளுக்கு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் சரியான பதில் கொடுக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அறிவியல் ரீதியான விளக்கங்களும் தேவைப்படும். இவற்றை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மென்மையாக சொல்லித் தந்தால் அவர்கள் இயல்பாக பேச, நடந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். அதற்கு நாம் செய்ய வேண்டியதை இந்தப் பதிவில் காணலாம்.
நண்பர், தோழிகளை மதியுங்கள்: பருவ வயது பிள்ளைகள் அந்த வயதில் அதிகம் விரும்புவது தோழிகளைத்தான். அவர்களுடன் வரும் தோழிகளை நல்ல மரியாதை கொடுத்து, தின்பண்டங்கள் கொடுத்து, அன்பாக உபசரிப்பதை இந்த வயது பிள்ளைகள் அதிகம் விரும்புவார்கள். ஆதலால் அதுபோல் அரவணைத்து சென்றால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்து வீட்டில் பெற்றோர் சொல் தட்டாமல் நடந்து கொள்வார்கள். இதனால் பெற்றோரும் மற்ற பெரியவர்களும் தன்னை மதிப்பதாக அவர்கள் பெரும் நிறைவு அடைகிறார்கள்.
ஷாப்பிங் செல்லும் போது சுதந்திரம் கொடுங்கள்: குடும்பத்தோடு ஷாப்பிங் சென்றாலும், ஹோட்டல் , மால், பயணம் என்று எந்த இடத்திற்கு சென்றாலும் வளர் இளம் பெண்கள் விரும்பும் எதையாவது வாங்க விரும்பினால் அதற்கு தடை சொல்லாமல் அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். ‘இவ்வளவுதான் பணம் இதற்குள் வாங்கிக்கொள்’ என்று பாக்கெட் மணியை கொடுத்து விடுங்கள். அதற்கு அவர்களே தயாராகி விடுவார்கள். குழப்பமான நேரத்தில் கூடவே நீங்களும் இருந்து சில ஐடியாக்களை சொல்லலாம். அவர்கள் கைகளாலே சில பொருட்களை வாங்கும் போது அவர்களுக்குள் ஒரு நிறைவுத்தன்மை ஏற்படும். இதனால் அவர்களின் சிடுசிடுப்பு அடங்கி பெற்றோர்களிடம் மிகவும் பணிவன்புடன் நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள்.
பிறரிடம் புத்திமதி கூறச் சொல்லாதீர்கள்: சில பெற்றோர்கள் வளரிளம் பருவத்துப் பிள்ளைகள் இருக்கும் வீட்டில், ‘நான் எதை சொன்னாலும் இந்த பிள்ளைகள் கேட்க மாட்டேன் என்கிறார்கள். நீங்களாவது அவர்களுக்கு புத்திமதி கூறி நல்வழிப்படுத்துங்கள். படி என்றால் விளையாடுகிறார்கள். விளையாடும் பொழுது டிவி பார்க்கிறார்கள். அளவுக்கு அதிகமாக செல்ஃபோன் பார்க்கிறார்கள் என்று இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை நீங்களே சொல்லிக் கொடுங்கள்’ என்று உறவினர்களிடம் கூறினால் குழந்தைகள் அதைத்தான் அதிகமாக வெறுப்பார்கள். ஆதலால் உற்றார் உறவினரிடம் கூறி புத்திமதி சொல்லச் சொல்வதை நிறுத்தி விடுங்கள். நீங்களாகவே உங்கள் குழந்தைகளுக்கு நல்லதை கூறி நல்வழிப்படுத்துங்கள். இல்லையேல், அவர்கள் குற்றம் செய்வது போலவும், அதை நாம் வன்மையாக கண்டிப்பதை போலவும் அவர்கள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு அதிகம். அந்த வயது அப்படி. ஆதலால் அவர்களை தான்தோன்றிகளாகவோ திமிர் பிடித்தவர்களாகவோ சொல்லாமல் சொல்வதை தவிர்ப்பது நல்லது.
பருவத்துக்கான மாற்றம் குறித்து பேசுங்கள்: வளரிளம் பருவத்துப் பிள்ளைகள் டீன் ஏஜில் காலடி எடுத்து வைத்ததுமே உளவியல் ரீதியான மாற்றங்களை உணர்கிறார்கள். உடலில் ஏற்படும் வித்தியாசமான மாற்றங்கள் அவர்களின் பிரிவுக்கும் பக்குவத்திற்கும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அந்த மாற்றங்களை குறித்து தனிமையில் சிந்திப்பதால் பெற்றோரிடமிருந்து விலகுகிறார்கள். அதைப் புரிந்து கொண்டு பெற்றோர்கள் இந்த வயதில் இன்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிவியல் பூர்வமாக எடுத்துரைத்தால், எதிர் கேள்விகள் அதிகம் கேட்டாலும் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். பெற்றோர்கள் மிகவும் பொறுமையாக எடுத்துச் சொல்ல வேண்டியது இந்தக் காலகட்டத்தில் தான்.
டீன் ஏஜ் பிள்ளைகள் செய்ய வேண்டியது: இந்தப் பருவத்துப் பிள்ளைகள் அவர்களின் தோழி, நண்பர்களைப் பற்றிய, அவர்களின் குடும்பங்களைப் பற்றிய விபரங்களை பெற்றோரிடம் நன்றாகக் கூறி விட வேண்டும். அவர்களிடம் அவ்வப்பொழுது பேசி பழகும் வாய்ப்பை இரண்டு தரப்பு பெற்றோர்களும் நடைமுறைக்கு கொண்டு வந்தால் வீணான சந்தேகம் ஏற்படாது. நட்பு முறை விரிவடையும்.
வீட்டில் பெற்றோர், பெரியோர் உறவு முறைகள் ஏதாவது அட்வைஸ் செய்தால் இந்த வயது பிள்ளைகள் அதை நிதானமாகக் கேட்பது நல்லது. அதில் அவர்களின் அனுபவம் அதிகமாக இருக்கும். அந்த அனுபவத்தால்தான் உங்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மேல் உள்ள அக்கறையால்தான் உங்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் நடை, உடை, பாவனைகளில் தனிக் கவனம் செலுத்துங்கள். நாகரிகமாக உடை உடுத்துங்கள். எவ்வளவு அவசரமாக வெளியில் சென்றாலும் பெற்றோரிடம் கூறிவிட்டு செல்வதை வழக்கமாக்கி வைத்திருங்கள். இதனால் பெற்றோர்களின் அச்சம் மற்றும் மனப்பதற்றம் குறையும். நீங்கள் நேரம் கழித்து வந்தாலும் , உண்மையை புரிந்து கொண்டு எதிலும் சந்தேகமில்லாமல் அன்பு பாராட்ட முடியும்.
இதுபோல் பிள்ளைகளும் பெற்றோரும் நடந்து கொண்டால் பிடிவாதம் பிடிப்பது, மரியாதை குறைவாக நடந்துகொள்வது, பொய் சொல்வது என்ற குற்றச்சாட்டுகள் இரண்டு தரப்பிலிருந்தும் வருவதை குறைக்கலாம். இன்னும் சொல்லப்போனால் இவற்றை இல்லாமலே செய்து விடலாம். இதனால் டீன் ஏஜ் பிள்ளைகள் இருக்கும் ஒருசில வீடுகள் ஒரே களேபரமாக இருப்பதை தவிர்த்து வீட்டில் அமைதி நிலவும்.