சமையல் எண்ணெய்களைப் பொறுத்தவரை ஆலிவ் எண்ணெய் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு மிகவும் பிரபலமானது. இந்தியாவில் பெரும்பாலும் பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்பட்டாலும், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு அது சமையலுக்கு உகந்ததா என்பதில் சந்தேகம் உள்ளது. அதன் உண்மை என்ன என்பதை இப்பதிவில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
ஆலிவ் எண்ணெய் ஆலிவ் பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதயத்திற்கு தேவையான ஆரோக்கிய கொழுப்பாகக் கருதப்படும் மோனோசர்ரேட்டட் கொழுப்புகள் ஆலிவ் எண்ணெயில் அதிகம் உள்ளன. இந்த கொழுப்புகள் இதய நோய் அபாயத்தை குறைப்பதோடு ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. மேலும் ஆலிவ் எண்ணெயில் விட்டமின் ஈ போன்ற ஆக்சிஜனேற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், அது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
சமையலுக்கு உகந்ததா?: ஒரு சமையல் எண்ணெயை தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான காரணி அதன் ஸ்மோக் பாயிண்ட். அதாவது எந்த வெப்ப நிலையில் எண்ணெயிலிருந்து புகை வரும் என்பதைக் குறிப்பதாகும். மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில் ஆலிவ் எண்ணெய் குறைந்த புகைப்புள்ளியைக் கொண்டுள்ளது. இதனால் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி வதக்குதல், பேக்கிங் வறுவல், போன்ற சமையல் முறைகளுக்கு பயன்படுத்தலாம்.
மேலை நாடுகளில் ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். அதன் தனித்துவமான சுவை உணவுகளுக்கு கூடுதல் சுவையை வழங்குகிறது. இது உணவின் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிப்பதால், சமைத்த உணவுகளின் மேல் சுவை மற்றும் நறுமணத்திற்காக ஆலிவ் எண்ணெயை லேசாக தெளிக்கலாம்.
ஆலிவ் எண்ணெய் பல நன்மைகளை வழங்கினாலும் அதை சமையலுக்கு பயன்படுத்தும்போது சில காரணிகளை கருத்தில் கொள்வது அவசியம். மற்ற எண்ணெய்களைப் போல ஆலிவ் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது குறைந்த புகைப் புள்ளியைக் கொண்டிருப்பதால், அதிகமாக சூடு படுத்தும்போது, இதன் தன்மை மாறி சுவை இழப்பு மற்றும் ஊட்டச்சத்து இழப்புக்கு வழிவகுக்கும்.
எனவே ஆலிவ் எண்ணெயை லேசான சமையல் மற்றும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்துங்கள். அதிக வெப்பம் சார்ந்த உணவுகளுக்கு ஆலிவ் எண்ணெய் பொருத்தமற்றது.