
‘எலிவேட்டர் ஸ்பீச்’ (elevator speech) என்பது ஒருவரை அல்லது ஒரு நிறுவனத்தை 30 வினாடிகளில் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் ஒரு பேச்சாகும். இது நம்மைப் பற்றியும், நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்கிறது. மேலும், இது ஒரு குறுகிய வற்புறுத்தும் பேச்சு. ஒரு லிப்டில் செல்லும் நேரத்தில் ஒருவரை சந்திக்கும்பொழுது, நம்மைப் பற்றி, நம் வேலையைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் நம்மைப் பற்றி நினைவில் வைத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து தகவல்களைப் பெற அவர்களை தூண்டவும் உதவும்.
லிஃப்ட் பேச்சு, லிப்ட் பிட்ச் என்றும் அழைக்கப்படும் இது, நம்மை, நம் நிறுவனத்தை அல்லது நம்முடைய தயாரிப்பை விரைவாக அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு சுருக்கமான பேச்சாகும். பொதுவாக, லிஃப்ட் சவாரி நேரத்திற்குள் (30 முதல் 60 வினாடிகள்) ஒரு வலுவான முதல் தோற்றத்தை உருவாக்குவதற்கும், உரையாடலை தூண்டுவதற்கும் ஏற்றது.
எலிவேட்டர் ஸ்பீச்சின் முக்கிய அம்சங்கள்:
சுருக்கம்: எலிவேட்டர் ஸ்பீச் என்பது மிகக் குறுகியதாக 30 வினாடிகளில் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.
தெளிவு: அந்தக் குறுகிய பேச்சு நாம் கூற வரும் செய்தியை தெளிவாகவும், சுருக்கமாகவும், எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும் இருக்க வேண்டும்.
தனித்துவமாக்குவது: நம் பேச்சை தனித்துவமாக ஆக்க வேண்டும். இதன் மூலம் நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு தெரிவோம்.
தூண்டப்படுதல்: நம் பேச்சை கேட்பதற்கு ஆர்வப்படுத்தவும், மேலும் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ளவும் தூண்டும் வகையில் அது இருக்க வேண்டும்.
சூழலுக்கு ஏற்றபடி: நம் பேச்சை சுழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்து பேசும் திறன் கொண்டிருப்பது. உதாரணத்திற்கு, வேலை தேடுபவராக இருந்தால், நான் ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர். புதிய தொழில்நுட்பங்களை ஆராய்வதில் ஆர்வமாக உள்ளேன். ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும்பொழுது திறமைகளைப் பயன்படுத்தி அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்புகிறேன் என்று இருக்கலாம்.
எலிவேட்டர் ஸ்பீச்சை எப்படி உருவாக்குவது: அதற்கு முதலில் நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம், யாரை சந்திக்கிறோம், எதற்காக இந்தப் பேச்சு என்பதை யோசித்து, அதாவது நம் குறிக்கோள்களை அடையாளம் கண்டு கொள்வதும், அதற்குத் தகுந்த மாதிரி நம் பேச்சை வடிவமைத்து சுருக்கமாகவும், தெளிவாகவும், அதேசமயம் வற்புறுத்தும் வகையிலும் சொல்லலாம்.
பேச்சை பேசும் நபருக்கு ஏற்ப அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளவும், அதற்குப் பயிற்சிகள் செய்வதும் நல்ல பலனைத் தரும். அத்துடன் நம் பேச்சை ஒரு கேள்வியுடன் முடிக்க முடிந்தால் எதிரில் இருப்பவர்களுக்கு நம்மிடம் மேலும் பேசத் தூண்டுதல் ஏற்படும்.
எலிவேட்டர் ஸ்பீச் என்பது ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். இது நம்மை மற்றவரிடம் அறிமுகப்படுத்தவும், நம்முடைய இலக்குகளை அடையவும், நம் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.