யுத்தம் என்றாலே துப்பாக்கி வேட்டு சத்தம், ஏவுகணைத் தாக்குதல் என்றுதானே நினைவுக்கு வரும்… ஆனால்… இந்த ”மௌன யுத்தம்” என்பது உண்மையான போரை விட வலியது ஆகும்.
மகாத்மா, ஆங்கிலேயரிடம் வாளெடுத்து சுழன்று போர் தொடுத்தாரா? இல்லையே! அஹிம்சை வழியில் மௌன யுத்தமாக உண்ணாவிரதம், உப்பு சத்தியாக்கிரகம் என்ற முறையில்தானே நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார்.
இந்த மௌன யுத்தம் பெரும்பாலும் காதலர்கள், கணவன் மனைவி நண்பர்கள் இடையே அடிக்கடி நிகழ்வதுண்டு.
இந்த யுத்தத்தை மென்மையான தமிழ் இலக்கிய வார்த்தையில் கூறுவது என்றால் ”ஊடல்” என்று சொல்வார்கள்.
இந்த ஊடல் பற்றி தொல்காப்பியர் தமது பாடலில்
”புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்து
சொலத்தகு கிளவிதோழிக்குரிய”
என்கிறார்.
வள்ளுவரோ தமது குறளில்
”இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது ஆவல்அளிக்கு மாறு” (1321)
என்று காதலன் மீது தவறே இல்லை என்றாலும், அவர் மீது இந்த ஊடல் கொண்டால், மிகுதியான அன்பு கிடைக்கும் என்று காதலி எதிர்பார்ப்பாளாம்.
இந்த மௌன யுத்தத்தை தற்காலிகமாகத்தான் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அடிக்கடி கையாண்டால் உண்மையான போரே வெடித்துவிடுமாம்.
இந்த காலத்தில் பெண்கள் மௌன யுத்தம் அவ்வளவாக கடைப்பிடிப்பதில்லை, நேருக்கு நேர் என்றுதான் பேராடுகிறார்கள். அதில் அவ்வளவு சுவை இருக்காது.
ஆனால் முந்தைய காலத்தில் பெரும்பாலும் மௌன யுத்தம்தான் கடைப்பிடிப்பார்கள். இதனால் கணவனின் சப்தநாடியும் அடங்கி விடும். ஏதாவது தவறு செய்திருந்தால் உடனடியாக திருந்தி மன்னிப்பு கேட்பதும் உண்டு.
ஓராயிரம் சொற்கள் வீசி வார்த்தைப் போர் செய்வதை விட இந்த மௌனயுத்தம் அளவோடு இருந்தால் குடும்பத்திற்கும் கணவன் மனைவி உறவிற்கும் மேம்பாடாக அமையும் என்கிறது உளவியல் நூல்.
இந்த மௌனயுத்தம் ஒரு சில மணி நேரமே போதும். சர்ச்சைகள் சமாதனமாக மாறும். ஆனால்…. நாள், வாரம், மாதம், அண்டு என தொடர்ந்தால் வாழ்க்கையே போர்க்களம்தான்.
தற்காலத்தில் காதலிகள், காதலர்களிடம் ”நீ இப்படி செய்தால்!” நான் பிரேக்அப் செய்துடுவேன்” என்று செல்லமாக மிரட்டி…மௌன யுத்தம் புரிவதுண்டு. ஆனால் இந்த யுத்தத்தை அடிக்கடி கையாண்டால் நிச்சயம் பிரேக்அப்தான் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
சில பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகள் தவறு செய்தால் அதன் முதுகில் நான்கு அடி கொடுத்து வீட்டிற்குள் இழுத்து போய்விடுவார்கள்.
சிலர் அன்பாக பேசி … குழந்தைகளைக் கையாள்வார்கள்.
சில பெற்றோர்களோ இந்த மௌன யுத்தத்தை ”உன் கூட பேச மாட்டேன் போ” என்று சொல்லி விட்டு முகத்தை உம்மென்று வைத்துக் கொள்வார்கள்.
இப்படி செய்தால்….குழந்தைகள் யோசிக்கும்…நாம் பெரிய தவறு செய்து விட்டோமோ! இனி அந்த தவறு செய்யக் கூடாது என மனதிற்குள் கூறிக்கொண்டு….அம்மாவின் அருகில் அமர்ந்து கன்னத்தைப் பிடித்து….. "ஸாரிம்மா…இனி அப்படி செய்ய மாட்டேன்” என கெஞ்சும். அந்த கெஞ்சலில். அம்மா மனமுருகி குழந்தையை அணைத்துக் கொள்வார்.
இந்த நடைமுறையும் ஓரளவிற்குதான் வெற்றி பெறும்… அடிக்கடி பிரயோகித்தால்… தோல்விதான் என்றும்…”இந்த அம்மாவே இப்படித்தான் உம்மணாமூஞ்சி” என பெப்பே காட்டி விட்டு வீதியில் விளையாட ஓடிவிடும்.
ஆகவே! இந்த மௌன யுத்தத்தை அல்லது அமைதி சிகிச்சையை அளவோடு பயன்படுத்தி நண்மை அடையலாமே!