Do you know what are the three steps Vivekananda told to pluck victory?
Do you know what are the three steps Vivekananda told to pluck victory?https://www.culturalindia.net

வெற்றிக்கனியை பறிக்க விவேகானந்தர் சொன்ன மூன்று நிலைகள் என்ன தெரியுமா?

Published on

ந்த உலகில் தினம் தினம் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள். இறக்கிறார்கள். எல்லோருமே மக்கள் மனதில் நிற்பதில்லை. சிலர் மட்டுமே காலத்தால் அழியாமல் நிலைக்கிறார்கள். ‘ஒரு சாதனையை செய்ய ஒரு மனிதன் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஏளனம், எதிர்ப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் என்பவையே அவை.

யாராவது ஒரு புதிய விஷயத்தை செய்யத் தொடங்கும்போது அவருக்குக் கிடைப்பது நல்லவிதமான வரவேற்பு அல்ல. ‘இதை எல்லாம் போய் செஞ்சுக்கிட்டு’ என்கிற ஏளன பார்வையும், ‘எதுக்கு நீ இதெல்லாம் செய்யற தேவையில்லாம?’ என்கிற எதிர்ப்பும்தான் ஒருவர் எதிர்கொள்ள நேரும். ஆனால், தொடர் முயற்சியால் அந்த மனிதன் சாதிக்கும்போது மட்டுமே அவன் பிறரால், சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறான்.

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இந்த சமூகத்தில் யாராவது செய்ய முற்பட்டால் முதலில் அவருக்குக் கிடைப்பது ஏளனப் பார்வையும் பேச்சுக்களும்தான். அது அறிவுரையாக இருக்கட்டும் அல்லது சமூகத்திற்கு செய்யும் நல்ல காரியமாக இருக்கட்டும். அவர்களுக்கு கேலியும் கிண்டலுமே பரிசாகக் கிடைக்கும். அந்த செயலுக்கான அங்கீகாரம் கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் ‘அதை செய்யாதே’ என்கிற எதிர்ப்பு கண்டிப்பாக வரும்.

அன்பின் வடிவமாக, கருணையின் ஊற்றாக விளங்கிய அன்னை தெரசா கூட பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார். தன்னுடைய சேவா நிறுவனத்திற்கு நன்கொடை கேட்டு அவர் கடைவீதிகளில் கையேந்தி சென்றபோது அவரை கேலி, கிண்டல் செய்து ஒரு கடைக்காரர் அவருடைய கைகளில் காரி உமிழ்ந்தார். ஆனால், அதையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அன்னை, ‘இந்த எச்சிலை எனக்கு பரிசளித்தீர்கள். ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய சேவை நிறுவனத்திற்கு தங்களால் ஆன நன்கொடையை தந்து உதவுங்கள்’ என்று வேண்டி நின்றபோது ஏளனப்படுத்தி எச்சில் உமிழ்ந்த அந்த மனிதர் வெட்கித் தலை குனிந்தாராம். அன்னையிடம் மன்னிப்பு கேட்டு தாராளமாக நன்கொடை தந்தார்.

விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்கள் முதலில் சந்திப்பது ஏளனத்தையும் எதிர்ப்பையும்தான். இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். ‘நீயெல்லாம் எதுக்கு இந்த வேலைக்கு வந்திருக்க? உன்னை எல்லாம் யாரு கூப்பிட்டா?’ என்பது போன்ற கிண்டல் பேச்சுக்களும் அதை செய்யாமல் தடுக்க நினைக்கும் ஆட்களே அதிகம்.

இதையும் படியுங்கள்:
நிலவில் என்ன வாசனை இருக்கும் தெரியுமா? உண்மையை வெளியிட்ட விண்வெளி வீரர்கள்! 
Do you know what are the three steps Vivekananda told to pluck victory?

இவற்றையெல்லாம் தாண்டித்தான் ஒரு மனிதன் சாதிக்க வேண்டி இருக்கிறது. அதற்கு ஆழ்ந்த நெஞ்சுரம் வேண்டும். தான் கொண்ட லட்சியத்தில் உறுதியும் தனது மேல் அசையாத நம்பிக்கையும், தன் முயற்சியில் தொடர் தோல்விகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு தொடர்ந்து செயல்பட்டு இறுதியில் ஒரு மனிதன் சாதிக்கிறான். அவன் புகழின் உச்சியில் நிற்கும்போது மட்டும் அக்செப்ட்ன்ஸ் என்கிற ஏற்றுக்கொள்ளும் நிலை மக்களுக்கு வருகிறது.

இந்த மூன்றாவது நிலையை அடைய பலவிதமான சவால்களை, சங்கடங்களை, அவமானங்களை சகித்துக்கொள்ள வேண்டும். இந்த உலகில் எதுவுமே அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. ஆனால், சாதித்த பின்பு அவனுக்குக் கிடைக்கும் அந்த பாராட்டுகளும் புகழும் அளவிட முடியாதவை. பல தடைக்கற்களைத் தாண்டி ஒருவன் சாதிக்கும்போது இந்த சமூகம் அவனைக் கொண்டாடுகிறது. ஆனால், ஆரம்ப காலத்தில் அவன் படும் வேதனைகளும், கேலி, கிண்டல் பேச்சுக்களால் மனம் சற்றே தளர்ந்தாலும் அவனால் செயல்பட முடியாது. அதனால்தான் எல்லோராலும் இந்த உலகில் சாதனையாளராக முடிவதில்லை. சிலரால் மட்டுமே முடிகிறது. அதற்கு முதல் இரண்டு நிலைகளை கடந்தால் மட்டுமே மூன்றாவது நிலையை அடைய முடியும். இதைத்தான் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் சுவாமி விவேகானந்தர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் அவர் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், சாதனையாளர்களின் உந்து சக்தியாகவும் திகழ்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com