பூமியில் இருக்கும் மக்களாகிய நமக்கு எப்போதுமே விண்வெளி சார்ந்த விஷயங்கள் வியப்பியை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக இப்போது விண்வெளி சார்ந்து நடக்கும் ஆய்வுகள் மூலமாக, அதிக விஷயங்களை நாம் தெரிந்து கொள்வதால், விண்வெளி எப்போதுமே நம்மைக் கவர்கிறது எனலாம்.
நமது பூமியிலிருந்து பல லட்சம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கிரகங்களுக்குக் கூட விண்கலங்களை அனுப்பி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விண்வெளியில் காற்று சுத்தமாக இல்லை என்பதால் அங்கு செல்லும் விண்வெளி வீரர்கள் உயிர் வாழ்வதற்கு சிறப்பு ஆடைகள் பயன்படுத்தப்படுகிறது. இது நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான் என்றாலும், விண்வெளியில் வாசனை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாது.
எப்படி நமது பூமியில் பல்வேறு வகையான வாசனைகள் இருக்கிறதோ அதேபோல பிரபஞ்சத்திலும் பல வாசனைகள் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை நாம் விரும்பத்தக்கவை அல்ல என்கின்றனர் விஞ்ஞானிகள். சமீபத்தில் ஸ்பேஸ் டாட் காம் என்ற தளத்தில் வெளியான அறிக்கையின்படி. விண்வெளிக்கு சென்ற வீரர்கள், தங்களின் அறைக்கு திரும்பிய பிறகு அவர்களின் ஆடையை முகர்ந்து பார்த்தால் கடுமையான வாசனைகள் இருப்பதைப் பற்றி தெரிவித்துள்ளனர்.
அப்போலோ விண்கலம் நிலவில் தரையிறங்கியபோது விண்வெளி வீரர்கள் நிலவின் வாசனை துப்பாக்கி வெடி மருந்து தூள் போல இருக்கிறது என வர்ணித்தனர். அதே நேரம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற விண்வெளி வீரர்கள் அங்கு வந்த வாசனையை, கடுமையாக எரிந்த மாமிசத்துடன் ஒப்பனை செய்து பேசினர்.
இப்படி விண்வெளியில் வீசும் மோசமான வாசனைக்கு பாலிசைக்லிக் நறுமண ஹைட்ரோ கார்பன்கள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது பூமியில் எரிந்த உணவுகளில் காணப்படும் இவ்வகை நறுமணம் விண்வெளியில் வருவதற்கு, விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் ஆக்சிஜனே காரணம் எனக் கூறுகின்றனர்.