சில நல்ல விஷயங்களை நமக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சமுதாயத்தில் நாகரிகம் கருதி கண்டிப்பாக சில விதிமுறைகளை கடைப்பிடித்தே ஆக வேண்டும். அத்தகைய சொல்லப்படாத விதிமுறைகள் என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. நம்முடைய நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ போனை கொடுத்து ஏதேனும் காட்டும்பொழுது, அவர்கள் எதைக் காட்ட வந்தார்களோ அதை மட்டும் பார்த்துவிட்டு போனை அவர்களிடம் திருப்பிக்கொடுப்பதே சிறந்தது. அதை விடுத்து, அவர்கள் போனில் என்ன இருக்கிறது என்று ஆராய்வது, புகைப்படங்களை பார்ப்பது நாகரிகமாகாது.
2. நண்பர்களிடம் அவசரத் தேவைக்கு பணம் வாங்கிவிட்டு பிறகு, ‘நம்முடைய நண்பன்தானே, எப்போது வேண்டுமானாலும் திருப்பிக் கொடுத்துக்கொள்ளலாம் அல்லது கொடுக்காமலேயே கூட இருக்கலாம்’ என்ற அலட்சியம் இருக்கக்கூடாது. அவர்களாகவே வாய்விட்டு கேட்பதற்கு முன்பு திருப்பிக் கொடுத்து விடுவதே நல்லதாகும்.
3. நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ உணவு விடுதிக்கு அழைத்துச் செல்லும்பொழுது, இதுதான் நேரம் என்று அங்கிருக்கும் விலையுயர்ந்த உணவை வாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது அனைவருக்குமே சங்கடத்தைத் தரும். அது மட்டுமில்லாமல், அடுத்தமுறை அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நீங்களும் உணவு வாங்கித் தருவது நல்ல பழக்கமாகும்.
4. யாரேனும் நம்மிடம் பேசும்பொழுது அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை முழுமையாகக் கேட்க வேண்டும். அவர்கள் பேசும்பொழுது குறுக்கே நாம் தலையிட்டு பேசுவது நன்றாக இருக்காது.
5. பொது இடத்தில் கதவை திறந்துவிட்டு அடுத்து வருபவருக்காக கதவை சற்றுப் பிடித்துக்கொள்வது நல்ல பழக்கமாகும். முகம் தெரியாதவர்களுக்காக நாம் செய்யும் இந்த சின்ன உதவிக்கூட அவர்களின் நாளை சிறப்பாக மாற்றும்.
6. யாரேனும் நமக்கு உதவி செய்தால், கண்டிப்பாக ‘நன்றி’ கூற வேண்டும். நாம் செய்யும் தவறுக்கும் நிச்சயமாக ‘மன்னிப்பு’ கேட்க வேண்டும். இது இரண்டையும் சொல்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை.
7. நீங்கள் செய்யும் சத்தியத்தை உங்களால் காப்பாற்ற முடியாது என்று நினைத்தால் அப்படிப்பட்ட சத்தியத்தை ஆரம்பத்திலேயே செய்யாமல் இருங்கள். ஒருவேளை சத்தியம் செய்து விட்டீர்களானால் எப்பாடுபட்டாவது அதைக் காப்பாற்ற முயற்சியுங்கள்.
8. உங்களிடம் சொல்லப்பட்ட ரகசியத்தை காலம் முழுக்க ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்பு. அந்த ரகசியத்தை சொன்ன நபர் தற்போது உங்களின் எதிரியாக ஆகியிருந்தாலும் கூட சொல்லப்பட்ட ரகசியத்தை காப்பாற்றுவதே சிறந்த பண்பாகும்.