நம் வாழ்க்கையில் நாம் செய்யக் கூடிய சின்ன சின்ன மாற்றங்கள்தான் நம்மிடம் மற்றவர்களை கவர்ந்திழுக்க வைக்கும். இந்த பதிவில் சொல்லப்போகும் 7 சின்ன மாற்றங்களை செய்து பாருங்களேன். பிறகு உங்களை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.
1.முதலில் நம்முடைய உடல் நலத்தை கவனித்து கொள்வது என்பது மிகவும் முக்கியம். ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்று சொல்வது போல ஆரோக்கியமான உணவு, சரியான உடற்பயிற்சி மற்றும் சிக்கனமான செலவும், சேமிப்பும் இருக்க வேண்டும்.
2.எவ்வளவு தான் வேலை என்று 24 மணி நேரமும் உழைத்தாலும் நம்முடைய அன்பிற்குரியவர்களுக்காக நேரத்தை நிச்சயமாக ஒதுக்குவது என்பது கண்டிப்பாக அவ்வபோது செய்ய வேண்டிய ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல் ஆச்சர்யம் தரக்கூடிய பரிசுகளை அவர்களுக்கு வாங்கி தருவது போன்ற சின்ன செயல்கள் கூட அந்த உறவில் பிரச்சனைகள் ஏற்படாமல் சுமூகமாக கொண்டு செல்வதற்கான வழிமுறையாகும்.
3.நாம் பார்க்கும் யாருக்கேனும் நம்மால் ஆன சின்ன உதவிகளை செய்வது அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். அப்படி செய்ய முடியவில்லை என்றாலும் முகம் தெரியாத வரை பார்த்து புன்னகைப்பது கூட அவருடைய நாளை இனிமையாக மாற்றும்.
4.கோவமாக நம்மிடம் யாரேனும் பேசும்போது நாமும் கோவமாக திரும்ப பேசி பிரச்சனையை பெரிதாக்குவதை விடுத்து அமைதியாக அவர்கள் சொல்வதை கேட்பது சிறந்தது. அப்போது தான் நாமும் என்ன தவறுகள் செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
5.நம்மை விட திறமையானவர்களை பார்க்கும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு நிச்சயமாக இருக்க வேண்டும். அதுபோன்ற சமயங்களில் நம்முடைய ஈகோவை நடுவிலே கொண்டு வராமல் திறமையானவர்களை காணும் போது நமக்கு தெரியாத விஷயங்களை அவர்களிடம் கேட்டு கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.
6.எந்த ஒரு உறவிலும் நம்பிக்கையாகவும், நேர்மையாகவும் இருப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி இருக்கையில் அந்த உறவு நிச்சயமாக வலுப்பெற்று நீண்ட நாள் நீடிக்கும்.
7.நம்முடைய குடும்பம், தாய் தந்தை, நம்முடைய அன்பிற்கு உரியவர்களை கவனித்து கொள்வது என்பது மிகவும் முக்கியமாகும். எந்த ஒரு நாளின் முடிவிலும், இவர்களே நமக்காக காத்திருப்பவர்கள், நம்மீது அக்கரையோடு இருப்பவர்கள், நமக்காக வாழக்கூடியவர்கள் என்பதை மறக்கக்கூடாது.
இங்கே கூறிய 7 விஷயங்களும் அவ்வளவு கடினமானது கிடையாது. இதை செய்ய வேண்டும் என்ற எண்ணமிருந்தாலே போதுமானது. இந்த 7 மாற்றங்களையும் உங்கள் வாழ்க்கையில் செய்து பாருங்களேன். நிச்சயமாக மாற்றத்தை உணர்வீர்கள்.