திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் டார்க் காமெடி என்கிற நுட்பம் சோகமான விஷயங்களை நகைச்சுவையுடன் கலந்து சொல்லும் பாணியாகும். மிகவும் சீரியசான போர் மரணம் போன்றவற்றை நகைச்சுவை கலந்து சொல்வார்கள். இந்த டெக்னிக்கை வாழ்க்கையில் பயன்படுத்தினால் ஏற்படுத்தும் விளைவுகளை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நேர்மறையான விளைவுகள்:
1. மன அழுத்த நிவாரணம்: கடினமான அல்லது மன அழுத்தமான சூழ்நிலைகளை சமாளிக்க டார்க் காமெடி ஒரு சிறந்த வழியாகும். சிக்கலான உணர்ச்சிகள் அல்லது வெளிப்படுத்த கடினமாக இருக்கும் உணர்வுகளுக்கு ஒரு மீடியமாக இது விளங்குகிறது.
2. தோழமை உணர்வு: கடினமான விஷயங்களைக் கூட நகைச்சுவையாகச் சொல்லும்போது அது கேட்பவருக்கு சிரிப்பை வரவழைக்கிறது. அதேசமயம் இதை சரியான கோணத்தில் புரிந்துகொள்ளும் மக்களிடையே ஒரு தோழமை உணர்வை ஏற்படுத்தும். உதாரணமாக ஒருவர் திடீரென்று தன் வேலையிலிருந்து நீக்கப்பட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவரை சந்திக்கும் அவரது நண்பரோ அல்லது பக்கத்து வீட்டுக்காரரோ, ‘சார், நீங்க ஃப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க. கொஞ்சம் பேசணும்’ என்று கேட்டால், ‘எனக்கென்ன? இனிமே நான் ஆல்டைம் ஃப்ரீ தான்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னால் அதுதான் இருண்ட நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டு. தன்னுடைய துன்பத்தைக் கூட நகைச்சுவையாக எடுத்துச் சொல்லும் பாணி இது.
3. நையாண்டிக்கான ஒரு கருவி: இருண்ட நகைச்சுவை பெரும்பாலும் நையாண்டிக்கான ஒரு கருவியாக செயல்படுகிறது. சமூகப் பிரச்னைகளில் இது மிகுந்த கவனம் பெறுகிறது. சமீபத்தில் கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்த சிலரைப் பற்றி வந்த மீம்களும் ஜோக்குகளுமே சிறந்த உதாரணம்.
எதிர்மறை விளைவுகள்:
மனம் புண்படுதல்: சில சமயம் இந்த டார்க் காமெடி சூழ்நிலைக்கு பொருந்தாத விதத்தில் அமையலாம். இது பிறருடைய மனதை புண்படுத்தலாம். மிகவும் சென்சிட்டிவான இயல்பு படைத்தவர்களுக்கு மனம் வருந்துமாறு அமைந்துவிடும்.
தீங்கு விளைவிக்கும் சித்தாந்தங்கள்: இதில் உள்ள நகைச்சுவையை புரிந்து கொள்ளாவிட்டால், அது தனி நபர்களுடைய விலகலை ஏற்படுத்தும். ஒருவரின் நோக்கங்கள் பிறருக்கு தவறான நம்பிக்கை மற்றும் புரிதலின்மைக்கு வழிவகுக்கும். கவனமாக கையாளாவிட்டால் இருண்ட நகைச்சுவை எதிர்மறையான தீங்கு விளைவிக்கும் சித்தாந்தங்களாக மாறிவிடலாம்.
எதிர்மறைக் கண்ணோட்டம்: சீரியசான விஷயங்களுக்கு இருண்ட நகைச்சுவையை பயன்படுத்துவது உணர்ச்சியற்ற தன்மைக்கு வழிவகுக்கும். பச்சாதாபம் அல்லது கவலையை நீக்கிவிடும். இருண்ட நகைச்சுவையில் தொடர்ந்து ஈடுபடுவது மனச்சோர்வு அல்லது பதற்றம் போன்ற உணர்வுகளை அதிகப்படுத்தலாம். இதை சரியாக உணரப்படாவிட்டால் மிகவும் இழிந்த அல்லது எதிர்மறையான உலக கண்ணோட்டத்திற்கு வழிவகுக்கும்.
தவிர்க்க வேண்டியவை:
1. இருண்ட நகைச்சுவைக்கு சூழல் மற்றும் நபர்கள் பொருத்தமாக இருக்கிறார்களா என்று உறுதி செய்த பின்பே அதை உபயோகிக்க வேண்டும். பிறரை கேலி செய்தாலும் அது ஒரு அளவுடன் இருக்க வேண்டும். மரியாதையுடன் பிறரை நடத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
2. நம் வாழ்வில் இருண்ட நகைச்சுவையைப் பயன்படுத்தும்போது அது இரட்டை முனைகள் கொண்ட கத்தி போல இருக்கும். அதை மிகவும் சிந்தித்துப் பயன்படுத்தும் போது நுண்ணறிவு மற்றும் சமாளிப்பதற்கான சக்தி வாய்ந்த கருவியாக இருக்கும். இருப்பினும் இது எதிரில் இருக்கும் நபர்களின் மனோநிலையை பொறுத்தது.