பொழுதுபோக்கு என்பது உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகம் தருவதாக இருக்க வேண்டும். பயனளிப்பதாக இருக்க வேண்டும். பொழுதை வீணடிப்பதாக இருக்கக் கூடாது. அதனால் நேரம் வீணாகாமல், தேவையற்ற செலவுகள் வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நல்ல புத்தகங்கள் படித்து புதுப் புது விஷயங்களைத் தெரிந்து கொண்டால் அறிவாற்றல் பெருகும். தாய்மொழியைத் தவிர வேறு மொழிகளைப் பேச, எழுத, படிக்கக் கற்றுக் கொண்டால் எங்கு சென்றாலும் மொழிப் பிரச்னை வராது.
இசை, நடனம் போன்ற ஏதாவது கலைகளைக் கற்கலாம். இதனால் உள்ளமும், உடலும் உற்சாகம் பெறும். எழுத்தார்வம் உள்ளவர்கள் பத்திரிகைகளுக்கு படைப்புகள் அனுப்பலாம். அவை பிரசுரம் கண்டால் ஏற்படும் இன்பமே தனிதான். புதுப்புது வகையான சமையல் கற்கலாம், செய்யலாம். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மாற்றத்தை வரவேற்பார்கள்.
குழந்தைகளின் பள்ளி விடுமுறை நாட்களில் பழைய, புதிய விளையாட்டுகள் விளையாடச் செய்யலாம். நாமும் கலந்து கொண்டால் நமக்கும் இளமை உணர்வு திரும்பும். கோயில்கள், பூங்கா, நூலகம் போன்ற இடங்களுக்கு குழந்தைகளுடன் சென்று வரலாம். இதனால் நல்ல பழக்கங்கள் குழந்தைகளுக்கு வழக்கமாகும்.
அக்கம் பக்கத்தினருடன் பேசிப் பழகலாம். சின்னத்திரையில் செய்திகள், நகைச்சுவை காட்சிகள் பார்க்கலாம். சோகமான சீரியல்களை பார்ப்பதால் நேரம் வீணாவதுடன், மனமும் சோர்வடையும். ஓவியத்திறமை சிறிது இருந்தாலும் அதை மேம்படுத்திக் கொள்ளலாம். ஓவியம் வரைவதால் மனம் ஒருநிலைப்படும்.
தையல் தெரிந்தவர்கள் வீட்டிலேயே தங்களுக்கு உண்டான உடைகளைத் தைத்துக் கொள்ளலாம். இதனால் செலவும் மிச்சம், நம் விருப்பம் போல, வசதிக்கேற்ப உடைகளைத் தைத்துக் கொள்ளலாம்.
நேரம் மிகவும் மதிப்பானது. அதை வீணாக்காத பொழுதுபோக்குகளை மேற்கொள்ளலாம்.